தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதனையும் மீறி, ஆட்சியாளர்களின் மேல் இருந்த கோபமும் சேர்த்து சற்று மிகையான வெற்றியையே எதிர்க் கட்சி பெற்றுள்ளது. புதிய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் தொண்டாற்றுவதற்காக மக்களால் அமைக்கப் பட்டது என்று பொத்தாம் பொதுவாகக் கருத்துக் கூறி விட முடியாது. அப்படி ஒரு எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு மாற்று சக்திகள் தமிழகத்தில் இல்லை என்பது வாக்களித்த அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்பதே உண்மை.
ஒரு பெரிய மாற்றம் நிகழும் பொழுது, அந்த மாற்றத்தை ஏக மனதாக வரவேற்று கொண்டாடிவிட்டு, முடிந்த அளவுக்கு உப்புப் பெறாத அரட்டைக் கச்சேரிகளை, ஊடகங்கள் வாயிலாக நிகழ்த்திவிட்டு, ஐந்தாண்டு காலம் உறங்கிக் கழித்து விட்டு, அப்புறம் ஆட்சியாளர்களைக் குறை கூறி மாற்றம் தேடுவதே நமது பிழைப்பாகிப் போய் விட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியவுடன், ஒவ்வொரு நாளும் வடிவேலு குறித்தும், கலைஞர் குறித்தும், ஏனையோர் குறித்தும் ஊடகங்களில் உலா வரும் நகைப்புக்குரிய விஷயங்கள் இவற்றையே பிரதிபலிக்கின்றன. அதுவே தொடர்ந்து நிகழ்ந்து வருமே ஆனால், சற்றே திகட்டத் துவங்கிவிடும்.
மக்கள், பொறுப்பான ஜனநாயகத்தின் பங்காளிகளாகத் தொடர்ந்து அரசின் செயல்பாடுகளையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் ஆக்கப் பூர்வமான பார்வையுடன் அணுகி விழிப்புணர்வுடன் இருப்பார்களே ஆனால், வாக்காளர்களை ஏமாளிகளாக நினைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்து வருவோர் படிப் படியாக அரசியலிலிருந்து விரட்டி அடிக்கப் படுவர். புதிய, மாற்று சக்திகள் உருவாகவும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
அரசியல் சம்பத்தப் பட்ட விஷயங்களிலும், அரசு நடக்கும் விதம் குறித்தும், இனியேனும் "நான் உண்டு, என் வேலையுண்டு..." என்று இருந்திராமல், ஊடகங்கள் வாயிலாக அறியப் படும் செய்திகளை இனியேனும் பொது மக்கள் தெரிந்து கொண்டு ஆக்கப் பூர்வமானவர்களாக மாற வேண்டும். "அதற்கு ஏது நேரம்?..." என்று வெட்டிச் சாக்கு சொல்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் - "பிரபு தேவா/நயன்தார திருமணம், தீபிகா படுகோனின் ஆண் நண்பர்கள், த்ரிஷாவின் நள்ளிரவுக் கூத்துக்கள், தோனியின் தேனிலவு அட்டவணை..." போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்காகச் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு மடங்கு ஜனநாயக நடைமுறை குறித்து அறிந்து கொண்டு, அலசி ஆராய நீங்கள், இதுவரை முற்பட்டதுண்டா? காலம் இன்னும் தாழ்ந்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இனியேனும் பொறுப்புணர்ச்சியுடன் "bottomline" குறித்த புரிதல் இருந்தால், உடனடியாக இல்லாவிட்டாலும், சிறிது காலம் கழித்தாவது நமது நாட்டை வல்லாரசாக மாற்றுவதில் நமக்கும் உண்மையான பங்கு இருக்கும்.
சரி. ரொம்ப அளந்துட்டேன்... இனி விஷயத்துக்கு வருவோம்...
புதிய அரசிடம், ஒரு சராசரி குடிமகனாக எனக்கு உள்ள எதிர்பார்ப்பை, தொகுத்து அளித்துள்ளேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்...
சட்டம் ஒழுங்கு: "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்றாகிவிட்டது கடந்த ஆட்சியில். யார் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவர் மீது ஒரு அதிகாரி நடவடிக்கை எடுப்பது, அவன் செய்த செயலின் அடிப்படையில் இல்லாமல், அவனது அரசியல் பின்புலத்தைப் பொறுத்தது என்றாகிவிட்டது. இந்தக் கேவலமான நிலை மாற வேண்டும். இந்நிலையை பெருமளவு (முழுமையாக என்று கூற முடியாது) மாற்றக் கூடிய திறமை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஆட்சியாளரிடம் இருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம். இந்நிலையை மாற்ற, பதவி ஏற்கும் முதல் நாளில் இருந்தே இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் தான் வாக்களித்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.
மின் வெட்டு: அரசின் கீழ் இயங்கி வரும் மின் நிறுவனமும், மின்சாரத் துறையும் செயலிழந்து, மாநிலத்தைக் கற்காலத்தை நோக்கிப் பின் நகர்த்திவிட்டது என்று கூறுவது மிகையாகாது. ஆக்கப் பூர்வமான அதிகாரிகள் துணையுடன், துறையையும் நிறுவனத்தையும் புனரமைத்துப் (களைகளை அகற்றி) போர்க்கால அடிப்படையில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை வகுத்து, இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட, மின் வெட்டு அறவே இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத் திறன் கொண்ட முதல்வரை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதால், இதனை அவர் செய்வார் என நம்பகிறேன்.
மாநிலத்தின் நிதி நிலை: "சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்...". கஜானாவின் இருப்பு என்ன என்பதை ஆராய்ந்து, அதற்கேற்பப் புது வருமானம் கிடைக்க வழி வகுக்க வேண்டியவர்கள், "ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே..." என சற்றும் ஆக்கப் பூர்வமில்லாத திட்டங்களுக்காக அள்ளி இறைத்து, கடந்த ஐந்தாண்டுகளில், மாநிலத்தின் நிதிநிலையை அதல பாதாளத்துக்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படிப் பட்ட நிலையை இரண்டு முறை சமாளித்துத் தன்னால் இயன்ற அளவுக்கு நிர்வாகத்தை நடத்திய முதல்வரையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றாலும், இந்த நிலை இன்னும் சற்று அதிகக் கவலை அளிக்கக் கூடியதாகவே, இன்று, இருக்கிறது. இந்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதன்மை அளித்து, ஓரளவுக்கு நிலைமை சீரடைந்த பின்பு, செலவீனங்களுக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பதே மக்கள் எதிபார்ப்பு. என்ன தான் இலவசங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தாலும், இலவசங்களை நம்பி மக்கள் வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்திருக்கையில், இதுவும் புதிய ஆட்சியாளர்களுக்கு சாத்தியம் என்றே நம்புவோம்.
விலைவாசி கட்டுப்பாடு: ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டுக் கத்தரிக்காய் அறுபது ரூபாய்க்கு விற்பதைக் கட்டுக்குக் கொண்டுவராமல் விட்டால், அந்த அரிசி ஏழை மக்களுக்கு வாய்க்கரிசிக்கு சமம் என்பதை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காத அரசையே கடந்த ஐந்தாண்டுகளாகப் பார்த்தோம். இந்த விஷயத்தில் மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டே, அந்த அரசைக் கை காட்டித் தப்பித்தார்கள் என்பது அவர்களின் கையாலாகாத் தனத்தையே அடையாளம் காட்டியது. பயனற்ற இலவசங்களைக் கொடுக்க ஒதுக்கப் பட்ட பணத்தில் பாதிப் பணத்தை வரி மானியமாகவும், பெற்றோல் டீசல் மானியமாகவும் செலவிட்டிருந்தால், ஆன்லைன் வர்த்தகம் மூலம், பொருட்களைப் பதுக்கி, விலையேற்றத்திற்குக் காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் அடித்திருந்தால் எளிமையாக விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஐந்து முறை ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவரால் இதனைச் செய்ய முடியவில்லை என்பது நமது மாநிலத்திற்கு வெட்கக் கேடு. இந்த விஷயத்திலும் புது அரசு அதிக கவனம் செலுத்தி மக்களுக்குப் பயன்படும்படியான செயல்களை முடுக்கி விட வேண்டும்.
கல்வி வளர்ச்சி: சமச்சீர் கல்வி என்ற பெயரில், கல்வியின் தரத்தைக் குறைக்க முற்பட்டுக் கிட்டத் தட்ட வெற்றிபெற்றுவிட்டார்கள் கடந்த ஆட்சியாளர்கள். குழப்பங்களைக் களைந்து இந்த விஷயத்தை சரி செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அல்லது, இந்தத் திட்டத்தை புதைத்துவிடுவதே நல்லது. கல்வியைத் தொழிலாக நடத்தி அளவுக்கதிகமாக வசூல் வேட்டை நடத்திவரும் பள்ளிகளின் நிர்வாகத்தினரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தொழில் துறை முன்னேற்றம்: தகுதி படைத்த எந்த ஒரு நிறுவனமும், நபரும், எந்தத் தொழிலையும் தொடங்கி நடத்த அனுகூலமான நிலைமையை உருவாக்க வேண்டும். மத்திய அரசு, மற்றும் மாநில அரசின் உதவியுடன் ஒரு சில தனிப் பட்ட மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் போட்டியாளர்களை நசுக்கும் தற்போதைய நிலைமை அகற்றப் பாடு பட வேண்டும்.
விவசாயம் சார்ந்த வளர்ச்சி: கடந்த பல ஆண்டுகளாக பாவப் பட்ட தொழிலாகிவிட்ட விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப் படும் நலத் திட்ட உதவிகளை, மோசடி செய்து, நிலச் சுவான்தார்கள், அவர்கள் பெயரில் பயனடைவதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சனைகளில், அவர்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவைப் பேணி, அதன் பயனாகப் பேசித் தீர்க்க வேண்டும். இது விவசாயிகளுக்குப் பேருதவியாக அமையும்.
ஆக்கப் பூர்வமான வளர்ச்சிப் பாதை: வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் முதலீடு செய்ய முன் வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கவரும் விதமாகக் கட்டுமானத் துறையில் முன்னேற்றத்தைச் செய்து, அவர்கள் தொந்தரவு இல்லாமல் தொழில் நடத்த ஆவன செய்ய வேண்டும். இதற்காக, சென்னை மற்றும் இதர நகர் விமான நிலையங்களை சர்வதேசத் தரத்துடன் உயர்த்துவது மிக மிக அவசியம். துணை நகரம் அமைப்பதில் மக்கள் நலன் காக்கப் பட்டு, அவ்விஷயங்களில் அரசியல் தலையீடு புரிந்து தடுக்க நினைப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைப் படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களைத் தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய அரசின் தலைவரால் மிகவும் எளிதாகச் செயல்படுத்த முடியும்.
அதே சமயம், அவற்றையும் மீறிக் கீழ்க் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களிலும் அவர்கள் நல்ல முறையில் செயல்படுவார்களே ஆனால், அதன் மூலம் வருங்காலங்களில் மக்கள் மனதில் தனித் துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பிடிப்பதற்கும் அவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக வருகின்ற ஐந்தாண்டுகள் அமையும். மேலும், இந்த விஷயங்களைச் சரியாகக் கிரகித்துச் செயல்படாததால் தான் இது வரை அடைந்த தோல்விகளை அவர்கள் சுவைக்க நேர்ந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர் நலனில் அக்கறை: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை, தாய் நாட்டுத் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, கண்டனம் செய்து சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சித் துணையுடன் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்குத் தன்னாலான நெருக்குதல்களைத் தந்து ஈழத் தமிழர் நலன் காக்கப் பாடுபட வேண்டும்.
கண்ணியமான அரசியல் செயல்பாடு: யாரும் அணுக முடியாத வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டு செயலாற்றுவதையும், தனக்காகப் போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்களிலும் இனியும் தொடர்ந்து ஈடுபடக் கூடாது. ஜால்றாக்களையும்/அடிப் பொடிகளையும் மட்டுமே நம்பாமல், ஜே.சீ.டி. பிரபாகர், சைதை துரைசாமி, வைகை செல்வன், பழ. கருப்பையா, கோகுல இந்திரா, ராஜ கண்ணப்பன், பீ.எச். பாண்டியன், பொன்னையன், டாக்டர் மைத்ரேயன் போன்ற திறமை மிக்க, ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்களைக் கட்சியின் சார்பில், கட்சி, ஆட்சி மற்றும் டில்லி களங்களில் முன்னிலைப் படுத்தி, அவர்களது ஆலோசனைகளுடன் கட்சி மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை வகுத்தால் உண்மையில், அ.இ.அ.தி.மு.க வால் கூட ஓரளவு கண்ணியமான ஆளுங்கட்சியாகச் செயல்பட முடியும். அது மட்டுமல்லாமல், கொள்கைகளையும், கண்ணியத்தையும், தாங்கள் செய்யும் தவறுக்குக் கேடையமாகப் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே கடந்த சில காலமாக முயன்று வரும் தி.மு.க இத் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு செயலாற்றுவது ஆட்சியாளர்களுக்கு நல்லது.
ஊழல் ஒழிப்பு: ஊழல் என்பது இவ்வளவு காலமாகப் புரையோடிவிட்டபின், அதனை ஒரு சில நாட்களில் ஒழிப்பது என்பது முடியாத காரியம். அப்படி இந்த அரசு செய்யும் என்று எதிபார்ப்பதும் பைத்தியக் காரத் தனம். அதே வேளையில், "இன்றே நாம் உயிர் வாழ்வதன் கடைசி நாள், அதனால் முடிந்த அளவு சம்பாதித்துவிட வேண்டும்...", என்பது போல, பல அதிகார மையங்களை நிறுவி அவற்றின் வாயிலாக, இன்ன அளவு என்று ஒரு வரைமுறையே இல்லாமல் சுருட்டுவதால் ஏற்படும் நிலைமை என்ன என்பதை இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் கண்கூடாகப் பார்த்தோம். அப்படிச் செய்ததனால் கீழ் மட்டங்களில் நடந்த சுருட்டல்களைத் தட்டிக் கேட்கத் திராணி அற்றவர்களாய் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இருந்த அவலமான நிலையைப் பார்த்தோம். அப்படிப் பட்ட நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து படிப் படியாக அனைத்து மட்டங்களிலும் ஊழலைக் களையப் புதிய அரசு ஆவன செய்ய வேண்டும்.
மேலே கூறியவை எல்லாம் கொஞ்சம் அதிகப் படியான எதிர்பார்ப்பு என்று எண்ணிவிடாதீர்கள். ஆட்சியாளர்களுக்கு அரசியல் சாசனச் சட்டத்தின் படி அளிக்கப் பட்டுள்ள வானளாவிய அதிகாரங்களையும், அவற்றைச் செயல்படுத்தத் துணையாய் உள்ள ஆயிரக் கணக்கான அதிகாரிகளும் தங்களின் நிலையை உணர்ந்து செயல்பட்டால், அவ்வளவும் சாத்தியமே.
பார்ப்போம்... எவ்வளவு தூரம் இந்த அரசு கடக்கிறது என்று... வாழ்த்துக்கள்...
கலைபிரியன்...