வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, January 31, 2011

நீண்டது, ஒரு "கை"!!!

ன்றாடம்
அழுவதற்கென்றே
நேரம் ஒதுக்கி
வாழ்கையில்,
அரவணைக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
ற்றாமை
என்னை
விழுங்கி
ஜீரணித்து விட்ட
வேளையில்,
ஆதரவுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
யலாமை
தொற்றிக் கொண்டு
இறுக்கி
நெரித்த போது,
இசைவாக -
நீண்டது,
ஒரு "கை"!!!
"சா,
ஏனிந்தக்
கொடுமை"
என்றழுத போது,
ஈகையுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
றக்கமின்றி
உழற்றும்
நிலை
வந்த போது,
உற்சாகமாய் -
நீண்டது,
ஒரு "கை"!!!
சலாடி
உள்ளம்,
அங்குமிங்கும்
அலைபாயும் போது,
ஊக்கமளிக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
திர்நீச்சல்
மட்டுமே
எஞ்சி
இருக்கையில்,
எழுப்பி விட -
நீண்டது,
ஒரு "கை"!!!
க்கம்,
எந்தன்
ஆக்கத்தைக்
கவ்விக் கொள்ள,
ஏற்றம் தர -
நீண்டது,
ஒரு "கை"!!!
ந்தெழுத்து
நிரம்பிய
அந்தக் "கை"...
ளிமயமான
எதிகாலத்தை,
சையின்றி
ஏந்தி வரும்...
ஒளவைப் பாட்டி
தொடங்கி, அனைவரும்
ஓதிய...

நம்பிக்"கை"!!!

- கலைபிரியன்...

Thursday, January 27, 2011

இந்தியாவின் நவீன இமயம்!!!

நான்கரை சொச்சம் அடி நிரம்பிய
நவீன இமயம் நீ தான்!!!
தடுப்பாட்டம் தொடங்கி, எதிரியைத்
தகர்த்தாடும் திறன் வரை,
எல்லாம் கொண்ட நீ...
துடுப்பெடுத்து ஓடி வந்தால்,
துடித்துக் கிடக்கும் எங்கள் மனம்!!!
நிறை குடம் நீ என்று
பறை சாற்றும் உந்தன் குணம்!!!
எவரஸ்ட் உச்சியை தொடாத
நான், உன் சாதனை சிகரத்தை
உச்சி முகரும் ரசிகன்!!!
சிரிப்பை சுமந்து கொண்டே
சூர சம்ஹாரம் செய்வது, உனக்கே
உரித்த கலை; எதிரி,
விழுவது உந்தன் வலை!!!
அவன் சுமந்து வருவது
பந்தை அல்ல, முன்
பிறப்பில் செய்த பாவத்தை!!!
உன்னை தழுவ முயற்சி
செய்து கொண்டிருக்கிறதாம் உலகக்
கிண்ணம்!!! அது உன்னை
நழுவாமல் அடைந்தால் மலரும்
உன் குழி விழும் கன்னம்!!!
கோடிக் கணக்கான இதயங்கள்
மகிழும் என்பது திண்ணம்!!!
பாரத ரத்னா உன்னை
நோக்கி ஓடி வருவதாய்
அறிகிறேன்!!! பார்ப்போம்,
அந்த உயரிய பட்டம்,
தனக்கே என்று மகுடம்
சூட்டிக் கொள்கிறதென்று!!!

- கலைபிரியன்

Wednesday, January 26, 2011

வருகின்ற பொதுத் தேர்தல் குறித்த என்னுடைய பார்வை...

  • கிறுகிறுக்க வைக்கும் விலைவாசி ஏற்றம்...
  • மலைக்க வைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்...
  • கேள்வி கேட்க ஆளில்லாமல் தினசரி உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள்...
  • ஊரெங்கும் கட்சிக் காரர்களின் கட்டப் பஞ்சாயத்து மற்றும் அடாவடி...
  • கொலை கொள்ளை கடத்தல் என்று தினசரி நீளும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை...
  • இவற்றைக் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் காவல் துறை...
  • முழுமையாக வாரிசுகளால் கபளீகரப்படுத்தப்பட்ட சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள்...
  • எங்கு நோக்கினும் வாரிசுகளின் சொத்துக்கள், நிலங்கள் மற்றும் தொழில்கள்...
  • மொத்தத்தில், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, விரிவாக்கப் பட்ட ஒரு குடும்ப சாம்ராஜ்யம்...
  • மனசாட்சியே இல்லாமல் சில மயில் தூரத்தில் நடந்த லட்சக் கணக்கான இரக்கமற்ற படுகொலைகளை வேடிக்கை பார்த்தது...
  • கடிதங்கள் எழுதியும் பகுதி நேர உண்ணா விரதம் இருந்தும் அவர்களின் அவல நிலையை மேலும் ஏளனம் செய்தது...
  • அரசியலையும் தேர்தல்களையும் எந்நாளிலும் இல்லாத அளவுக்கு வெட்கக் கேடான நிலைக்குத் தள்ளியது...
  • இலவசங்களை வாரி வழங்கி கஜானாவை காலி செய்து மக்களின் மூளையையும் மழுங்கடிக்கச் செய்தது...
  • பொழுது விடிந்து பொழுது போனால் பாராட்டு விழாக்களில் அமர்ந்து ஐஸ் மழையில் நனைவது...
  • குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் விழா மேடைகளில் கூடிக் கும்மாளம் அடிப்பது...
மேற்குறிப்பிட்டது போல இன்னும் பற்பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும், அடுத்த தேர்தலை மக்களுக்கு முன் நின்று, சந்தித்து, வென்று, மகனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டி விட முடியும் என்று ஒருவர் நினைத்தால், அது, அந்த மாநில மக்களின் இழிநிலை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படிப் பட்ட சக்திக்கு மாற்றாக உலா வருபவரும் ஒன்றும் உத்தம சீலர் அல்ல என்றாலும், பெரிய கோட்டுக்குப் பக்கத்தில் நிற்கும் போது சிறியதாகத் தோன்றும் இரு கோடுகள் தத்துவத்தைப் போல, அவ்வளவு மோசமானவர் அல்ல என்று சொல்லும் அளவுக்குத் தான் கடந்த ஐந்து ஆண்டுகளும் ஆட்சி நடந்த லட்சணம் அமைந்துள்ளது.

ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் விடிவு காலம் என்ற நிலை இன்று உள்ளதால், மாற்றாக உள்ள தலைவரையும் வரும் தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆகா வேண்டும். அவரும், தனது பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு, பொறுப்புணர்ச்சியை உணர்ந்து, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் சென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகும், எப்படி நடக்கக் கூடாது என்றமைக்கு உதாரணமாக அமைந்த கடந்த ஐந்தாண்டு ஆட்சியைப் பார்த்துப் பாடம் கற்று, தனக்கு இயல்பாகவே உள்ள ஆளுமை மற்றும் நிர்வாகத் திறமையுடன் ஓரளவாவது நமது மாநிலத்தை மீட்டெடுக்க முனைவார் என்று நம்புவதைத் தவிர இன்றளவில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. வழக்கம் போல் இம்முறையும் நம்பி ஏமாற மாட்டோம் என்று நம்புவோம்...

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து வாக்களிக்கும் அவல நிலைக்கு இன்று மக்கள் தள்ளப் பட்டதற்கு, பெரியாரும், அண்ணாவும் வளர்த்த திராவிட மற்றும் சுய மரியாதைக் கொள்கைகள் கொண்ட பேரியக்கம் நாளுக்கு நாள் பிளவு பட்டமையும், சுய நலம் கொண்ட சிலரின் கூடாரங்களில் சிக்கித் தவிப்பதும், அவர்களுக்கு மாற்றான ஆளுமை மற்றும் அர்பணிப்பு உணர்வு கொண்ட தலைவர் ஒருவர் கூட வாய்க்காமல் போனதும் தான் காரணம்.

இந்நிலையை மாற்ற வேண்டுமென்றால் மக்கள் மத்தியில் வேட்பாளர்களைத் தரம் பிரித்துப் பார்த்து வாக்களிக்கும் தன்மை வர வேண்டும். அப்படிப் பட்ட பொறுப்புணர்வு வரும் அளவுக்கு மக்களை உந்தி வழி நடத்திச் செல்ல விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்துவதும், தகுதி வாய்ந்த படித்த இளைஞர்கள் அரசியல் பால் திரும்புவதும் மிகவும் அவசியம்.

நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்... முதலில் வரும் தேர்தலுக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்... விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் நமது ஒவ்வொரு வாக்கையும் வீணடிக்காமல் பயன்படுத்துவோம்... தவறினால், அடுத்த வாய்ப்பு வரும் போது எந்த நிலையில் இருப்போம் என்பதை விழிகளின் முன் நிறுத்திப் பார்ப்போம், ஒரு கணம்...

வாழ்க ஜனநாயகம்!!!

- கலைபிரியன்

Thursday, January 20, 2011

என் அழகுப் பதுமையே?!

உன் கண்களிரண்டும் -
கம்பன் வீட்டுக்
கட்டுத் தறி...
அவை சொல்லாமல்
சொல்லும் ஒவ்வொரு
சொல்லும்... மொழிசாரா
இலக்கியம்!!!
இமைகள் இரண்டிலும்,
இமாலயக் குளுமை!!!
இரு பனிக்
குவியல்களுக்கிடையே...
புதைந்திருக்கும் விழிகளோ,
காஷ்மீரத்து திராட்சைகள்!!!
அவற்றின் அசைவிற்குத்தான்
எத்தனை ஆயிரம்
அர்த்தங்கள்!!!
மௌனமாய்ப் பகரும்
மறுமொழிகள், கோபமாய்
வீசும் கணைகள், ஆசையாய்ப்
பாயும் கடலலைகள்,
செல்லமாய்ச் சிணுங்கும்
சீண்டல்கள், சோகம்
சொல்லும் கேவல்கள்,
சோர்வைச் சொல்லும்
சுமைகள், அன்பைச்
சொரியும் வெட்கம்,
கருணை பொங்கும்
கனிவு, பக்திக்கு
மூடும் இமைகள்...
இன்னும் பலப்பல
விஷயங்கள், உன்
விழிகளில் வீற்றிருக்க...
பேசி ஏன் கொல்கிறாய்,
என் அழகுப் பதுமையே?!!

Monday, December 13, 2010

காதலி! நீ பத்திரமா?!

பூ ஒன்று மோதியதில் உன் புன்னகை உதிர்ந்ததடி!!!
மாவிலை விழுந்து உந்தன் மேனி கொஞ்சம் அதிர்ந்ததடி!!!
இடி ஒன்று இடித்த போது - உன் இதயம் என்ன ஆயிற்று?

பதில் 1 - இதயம் த்திரம்தான், என்னிடத்தில் இருந்ததனால்...
பதில் 2 - எல்லாம் த்திரம்தான், இருந்தால் தானே எதுவும் ஆக...

- கலைபிரியன்

Friday, December 10, 2010

சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஆம் - உண்மையில்
நீ எங்கள்
முடி சூடா
மன்னன் தான்!!!
திரையில் மட்டுமே
நீ அணிகிறாய்
முடி (விக்)!!!
ஆல்கஹாலே வேண்டாம்,
நீ திரும்பும்
இடம் எல்லாம்...
எகிறும் கிக்!!!
சிவாஜி ஆண்ட
தரையில் உதித்த
நீ, எங்கள்
சிவாஜி ஆண்ட
திரையில் துருவம்
கண்டாய்!!! தமிழை/
தமிழரை - உயிர்
மூச்சாய்க் கொண்டாய்!!!
அவதாரமாய் உன்னைக்
காணும் ரசிகனை -
அவன் தாரத்தை
முதலில் அணுகச்
சொன்னாய்!!! தாயை
முதலில் பேணச்
சொன்னாய்!!! பெற்ற
மழலை முகம்
காணச் சொன்னாய்!!!
"உன் வாழ்க்கை
தான் உனக்கு
முக்கியம்" என்றாய்!!!
அவன் மனதில்
தலைவனாய் நின்றாய்!!!
மொத்தத்தில் அவனைப்
போல் அனைவரின்
இதயம் வென்றாய்!!!
அரிதாரம் பூசி
உந்தன் அழகை
மறைத்த நீ,
கோடிகளைத் தொட்ட
பின்னும் - உன்
உள் அழகைப்
பேணுகிறாய்!!!
நாளைய முதல்வன்
என்று நவிலும்
பலர் முன்னால்
"நாயகன் நான்"
என்று தம்பட்டம்
அடிக்காமல், ஒரு
புதல்வனாய்த் (தலைமகனாய்த்)
தவழுகிறாய் திரைத்தாயின்
கலைமடியில்!!! சிலிக்கான்
திரையினில் என்றும்
ஒரு இந்திரன்
நீ - எங்கள்
மனதில் எல்லாம்
மிளிரும் எந்திரன்
நீ!!! அகவை
அறுபதைக் கொண்டாடும்
நாள் இன்று...
"உன் வழி
தனி" என்று...
எல்லோரும் உணர்வதே
நன்று!!! "அவன்"
காட்டும் வழியினிலே
அமைதியாய் நீ
பயணிக்க, உனக்கென்று
ஒரு வாழ்வை
இனியேனும் நீ
வாழ, வழி
விட நான்
இறைவனை வேண்டுகிறேன்!!!
என்றென்றும் நீ
வாழி!!!

- கலைபிரியன்

Wednesday, December 8, 2010

தபால்காரராக வடிவேலு, வீட்டு சமையல்காரராக பார்த்திபன்... ஒரு கற்பனை...

வேகாத வெய்யிலில் (ஹய்யோ... ஹய்யோ, நாலு ரிஜிஸ்டர் தபால், நாலு மனி ஆர்டர், ரெண்டு தந்தி - இதக் கொண்டாந்து, இந்த சல்லிப் பயபுள்ளைகளுக்குத் தர்ரதுக்குள்ள, நம்ம ஆத்தாக் கிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளிய வந்துரும் பொருக்கே!!! நம்ம பேசாம, வாடிப் பட்டி ஆபீஸ்லயே குப்ப கொட்டிருக்கலாம்... எவவனையோ புடிச்சு, கைல கால்ல விழுந்து, செலவு செஞ்சு, நாலு காசு கூடக் கெடைக்குமேன்னு இங்க வந்தா, கடைசியில சொந்த செலவுலையே சூனியம் வச்சுக்குற கதையாவுல்ல இருக்கு!! ச்சை!!) தனக்குள்ளே பேசிக்கொண்டே தான் தந்தி கொடுக்க வேண்டிய அடுத்த வீட்டைத் தாண்டிப் போகிறார்...

"அட, இந்தாருக்கு  நம்பர் 12 !!!" சொல்லிக் கொண்டே பின்னால் வந்து, திறந்து கிடந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போகிறார்...

அய்யா, அய்யா - வீட்ல யாரும் இல்லையா... உள்ள வரலாமா?

பனியன், வேட்டி, குத்தாலம் துண்டு, கையில் கரண்டி சகிதமாக வேர்வையைத் துடைத்த படியே ஹாலுக்கு வருகிறார் பார்த்திபன்... பதில் கூறாமல் வெறித்துப் பார்க்கிறார்...

ஒன்னத்தான்யா, உள்ள வரலாமான்னு கேட்டேன்!!!

டேய்...

என்னது, டேயா?

ஆமாண்டா, லூசு...

ஹ்ம்... இதுக்கு அதுவே தேவலாம் போலையே...

நீ கேக்குற கேள்விய, வாசல்ல நின்னு கேக்கனும்டா? இன்னும் விட்டா பெட் ரூமுக்கு வந்து கேப்பியா?

சரிப்பா, தப்பாக் கேட்டுப்புட்டேன்... கோச்சுக்காத... என்ன, சமையலா இருந்தியா?

இல்ல, கொளுத்து வேலை பாத்துட்டு வர்ரேன்...

அது சரி, நமக்கு வெனை வேறெங்கயும் இல்ல, நம்ம வாய்க்குள்ளையே தேன் இருக்கு...

வாய்க்குள்ள வெனை எல்லாம் வேற இருக்கா? நாக்கு தானே இருக்கும், எங்க காட்டு?

ஏம்பா? ஒரு கேள்விய தப்பாக் கேட்டுப்புட்டேன்? அது தப்பா? அதுக்கு போயி, இப்புடி எடக்கு மடக்கா பேசுறியே?

மடக்குன்னா (கையை மடக்கிக் காட்டுகிறார்) தெரியும்... எடக்குன்னா, அது என்ன?

வந்த வேலைய விட்டு இன்னி ஒன்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, என்னைய பிஞ்ச செருப்பக் கொண்டு அடிப்பா... (தனக்குள் - "அய்யய்யோ, அய்யய்யோ, உணர்ச்சிவசப்பட்டு சொல்லிப் புட்டமே, சொல்லிப் புட்டமே - பய புள்ள நெஜமாவே அடுச்சுப்புடுவேன் பொருக்கே?" என்று சொல்லிக் கொள்கிறார்)... (முறைத்துப் பார்த்தபடி...) தந்தி வந்துருக்கு... கையெழுத்துப் போட்டு வாங்கிக்க...

நீ தானே வந்த, தந்தி வந்தத நான் பாக்கலையே?

ஷ், அப்பப்பப்பபா... இப்பவே கண்ணைக் கட்டுதே!!! முடியலடா, (அழுகிறார்) என்னால முடியல... நான் தாண்டாப்பா கொண்டாந்துருக்கேன் தந்தி... போதுமா?

அப்புடி சொல்லு... (கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்கிறார்...)

சரிப்பா, வர்ட்டா... (என்று சொல்லி விட்டு, நடையைக் கட்டுகிறார்)...

ஹலோ?

ம், இப்ப என்ன? (என்கிறார் திரும்பி)

வரட்டான்னு தானே கேட்ட? கேட்டு நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க?

(கோபமாக)... ஏம்பா? ஏன்? எல்லாரும் வழக்கமா பேசுற மாதிரிதானே நானும் பேசுனேன்? என்னக் கண்டா மட்டும் ஏன் இந்த கொல வெறி? ஒங்காத்தா வயித்துக்குள்ள இருக்கும் போதே, என்னையக் கண்டா, எப்புடி எல்லாம் லந்து பண்ணலாம்னு யோசுச்சுக்குட்டே இருந்தியா? என்னது, சின்னப் புள்ளத் தனமா இருக்கு... ராஸ்கல்...போதும்பா, போதும்... இத்தோட நம்ம சங்காத்தத்த முடுச்சுக்குருவோம்... (என்று கூறிக் கொண்டே நடையைக் கட்டுகிறார் அங்கிருந்து)...

- கலைபிரியன்