வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, May 14, 2009

ஜாசியாவும் ஈழத் தமிழர்களும்...



"ஜாசியா" என்பது மற்ற மதத்தவர்களைக் காக்க முகலாயர் காலத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்ட வரி ஆகும். வட மேற்கு பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்களிடம், அந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ள தாலிபான்கள், ஐந்து கோடி ரூபாய் ஜாசியா விதித்து, அதைக் கட்ட கெடுவும் விதித்துள்ளனர்.
"சரி. இதற்கும், ஈழத் தமிழர்களுக்கும் என்ன சம்மந்தம்" என்று கேட்கிறீர்களா?
இதற்காக இந்தியாவில், பஞ்சாபில் உள்ள அம்பாலா நகரில் மே முதல் வாரத்தில் இங்கு வசிக்கும் சீக்கியர்கள் சார்பாகப் போராட்டம் வெடித்தது. இந்த சமயம் தேர்தல் பிரசாரத்திற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மன் மோகன் சிங் "இது கவலை அளிக்கின்ற விஷயம். இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரை அழைத்து நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளோம். அதோடு அல்லாமல், பாகிஸ்தான் அரசிடம் அதிகாரிகள் மட்ட அளவிலான பேச்சு வார்த்தையையும் தொடங்கி உள்ளோம். இது போன்ற வஷயங்களைக் கையாள்வதில் காங்கிரஸ் அனுபவமும் திறமையும் வாய்ந்தது" என்று பேசி அங்குள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்துள்ளார்.
ஆனால், தமிழ் நாட்டுக்கு சில மைல் தூரத்தில் வருடக் கணக்காக இனப் படுகொலைக்கும், பசி, பட்டினி, மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகும் நமது தொப்புள் கோடி உறவினர்களான ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த மட்டும் அவர் தயாரில்லை. அது போகட்டும். மேற்கொண்டு அவற்றைத் தடை இன்றிச் செய்ய வட்டி இல்லா மற்றும் குறைந்த வட்டிக் கடன், ஆயுத, தளவாட மற்றும் தொழில் நுட்ப உதவிகளையும் தடை இன்றி செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கிறது இந்திய அரசு.
நாம் இங்கு போராடினால் மட்டும் "இலங்கை இறையாண்மை" என்றும் "பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறீர்கள்" என்றும் சப்பைக் கட்டுக் கட்டி "தேசியப் பாதுகாப்பு" சட்டத்தையும் பயன்படுத்தத் துணிகிறது அரசு. மத்தியில் ஆளுகின்ற அரசும் மாநிலத்தில் ஆளுகின்ற அரசும் ஒரே கூட்டணியில் இருந்தும் நமது நியாயமான, மனிதாபிமானம் மிக்க கோரிக்கைகளுக்குக் கூட செவி மடுக்க நம் நாட்டில் யாரும் இலலை என்ற நிலை. இந்த நிலையில் பிரசாரத்திற்கு வந்து தமிழக மக்களை சந்திக்கக் கூட தைரியம் இல்லாத பிரதமரையும் அங்கீகரித்திருக்கும் அவலம் வேறு எங்கு காணக் கிடைக்கும்.
ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா?!
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் பெற்ற பெரும் மற்றும் வரலாறு காணாத நூறு சதவிகித வெற்றியினால் டெல்லியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தவர்களுக்கும், மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்களுக்கும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்தன்மை உள்ளவர்கள் உங்கள் கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நடுநிலையாளர்கள் எழுப்பும் கேள்விகள்:
ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிக்கச் சொல்லியோ, அல்லது அவர்களுக்கு உதவச் சொல்லியோ தமிழக மக்கள் உங்களைக் கேட்டார்களா?
எங்களது தாய்மார்களும் சகோதரியர்களும் பாலியல் ரீதியாக சிங்கள ராணுவத்தால் எவ்வளவு துயரப் பட்டுள்ளார்கள் இது நாள் வரை? எத்தனை பேர் பொட்டிழந்து பூவிழந்து தவிக்கிறார்கள்? பிறந்து சில நாட்கள், சில மாதங்கள், சில வருடங்கள், இன்னும் பல நேரங்களில், பிறக்கக் கூட வாய்ப்பில்லாமல் எந்தனை பச்சிளங் குழந்தைகள், சிசுக்கள் கொல்லப் பட்டிருக்கின்றன? எத்தனை குடும்பங்கள் தலைவனை இழந்து அநாதைகளைத் திரிகிறார்கள் அகதிகளாக? என்னிலடங்காதவர்கள் ஊனமுற்று நோய் வாய்ப் பட்டு சிகிச்சைக்கும் முதலுதவிக்கும் வழி இன்றி வாழ்கிறார்கள்? பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய எத்தனை பிள்ளைகள் நித்தம் ஒரு பதுங்கு குழி என்று நாட்களைக் கடத்துகிறார்கள்? பிச்சைக் காரர்களையே பார்க்காத உழைப்பைத் தவிர வேறெதுவும் அறியாத எத்தனை பேர் அடுத்த வேளை சோற்றுக்காக வான் நோக்கிப் பொட்டலங்களுக்குக் காத்துக் கிடக்கிறார்கள்? பசியால், பஞ்சத்தால் எத்தனை உயிர்கள் பலியிடப் படுகின்றன அனு தினமும்? இவர்கள் வாழ்க்கைக்குக் குரல் கொடுப்பவர்கள் பிரிவினைவாதிகளா?
யோசித்துப் பாருங்கள்!!! நடக்காத மனித உரிமை மீறல்களுக்கே குரல் கொடுத்து வந்த வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரன்சு போன்ற நாடுகள் கூட இறங்கி வந்து ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் இந்த நேரத்தில், அண்டை நாட்டில் எல்லா உரிமையும் கடமையும் இருந்தும் வாய் மூடி இருந்தால், நாம் எல்லாம் மனிதர்கள் தானா? இப்படிப் பட்ட வெளியுறவுக் கொள்கைகளை வைத்துக் கொண்டு எப்படி வல்லரசாக உருவெடுக்க முடியும்?
இவ்வளவு கொடுமைகள் அருகாமையில் நடந்தேருகையில், ஒரு வேளை வல்லரசாக உருவெடுத்துவிட்டால் கூட, எத்தனை தமிழர்கள் தாங்கள் ஒரு இந்தியப் பிரஜை என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டுக் கொள்ள முடியும். அப்படி ஒரு நிலை வந்தால், "வேண்டுமென்றால் தமிழகத்தை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கூண்டில் அடைத்து விடலாம்" என்று கூட யோசிக்கக் கூடியவர்கள் தான் நீங்கள்!!!

Wednesday, May 13, 2009

ஜெயலலிதா - தேடி வரும் பொறுப்பு மற்றும் மில்லியன் டாலர் கேள்வி!!!

விரும்பியோ விரும்பாமலோ... "தனி ஈழம்" என்ற ஜோதியில் ஜெயலலிதாவும் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு விட்டார். இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து என்று எங்கெங்கிருந்தோ வரும் பாராட்டு மழையில் நனையவும் ஆரம்பித்து விட்டார்.

கண்டிப்பாக ஒரு தெளிவான திட்டமில்லாமல் உணர்ச்சிவசப் பட்டு இந்த உணர்வுப் பூர்வமான பிரச்சனையில் இந்த மன மாற்றத்தை அவர் பிரகடனப் படுத்தியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஒரு வேளை பெரும் வெற்றியை அவர் இந்தத் தேர்தலில் பெற்று விட்டால் ஈழப் பிரச்னையும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றி பெற்ற பின் தனது நிலையில் இருந்து பின் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பதையும், அப்படிச் செய்தால் அதனால் அவரது அரசியல் நம்பகத்தன்மைக்குப் பெரும் பங்கம் வந்து விடும் என்பதையும் நன்கு உணர்ந்தே இவ்வளவு தெளிவான ஒரு நிலையை எடுத்து அதை மக்கள் மத்தியில் ஆணித் தனமாக மைய்யப் படுத்திப் பிரச்சாரம் செய்கிறார்.

கூட்டணிப் பங்கீட்டால் நெருடலில் இருந்து வந்த வைகோவுக்கும் மதிமுகவுக்கும் புரட்சித் தலைவியின் இந்த நிலை மாற்றம் இன்ப அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். காங்கிரஸின் தயவில் ஆட்சி நடத்தும் கலைஞருக்கு பெருத்த அதிர்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும். அவரால் அவ்வளவு தெளிவாக இந்த விஷயத்தில் இறங்கிப் போராட முடியாது என்பதையும், அவருடைய இன்றைய உடல் நிலையில் இந்த நிலை மாற்றம் தனக்குப் பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பியே ஜெயலலிதா இந்தத் தருணத்தை முறையாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஈழப் பிரச்சனையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது ஒரு நெருடலான விஷயமாக இருந்தாலும் கூட, அதனை செய்வது தமிழகத்தில் இதுவே முதல் முறை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் வெற்றி அடைந்தாலும், கூடுதல் பொறுப்பை சுமப்பவராக இருந்தாக வேண்டிய கட்டியதில் இருக்கிறார் ஜெயலலிதா.

ஒரு வேளை அந்தக் கட்டாயத்தில் புதிதாக அமையவிருக்கும் மைய அரசை நிர்பந்தித்து ஓரளவேனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க வைத்தால் கடந்த காலத்தில் இழந்த மக்கள் செல்வாக்கைப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றுவிடுவார் புரட்சித் தலைவி என்பதில் ஐயமில்லை. ஆனால், எதிர் பாராத விதமாக இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் நிலை வந்தாலோ அல்லது மத்திய அரசை ஆட்டிப் படைக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போனாலோ இந்த நிலையில் விடாப் பிடியாக இருந்து எவ்வளவு உறுதியாகப் போராடுவார் என்பதே அவரை அறிந்த மக்களுக்கு மத்தியில் எழும் மில்லியன் டாலர் கேள்வி!!!

இறையாண்மையைப் பேணுங்கள்..

எதிர் கட்சி மறியல்...
எண்ணூறு பேர் பலி...

ஆளுங்கட்சி மனிதச் சங்கிலி...
ஆயிரம் பேர் பலி...

"இனி யாரும் உண்ணா விரதம்
இருக்க வேண்டாம்" - தலைவர்
வேண்டுகோள்...

"ஆமாம், அவர் சொல்வதும் சரி தான்...
இனி பலியிட யாரும் இல்லை...
இனியாவது இறையாண்மையைப் பேணுங்கள்..."

தேர்தல் - எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்...

"எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"ன்ற கதையாக, "நாங்களும் வாக்களித்தோம்"னு சொல்லிக் கொள்கிற பொது ஜனத்தைத் தான் இன்றைக்குக் காண முடிகிறது...

நாம் வாக்களித்த வேட்பாளர் எவராவது ஒருவர், என்றாவது ஒரு நாள், தான் சொன்னதை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்று புள்ளி விவரத்துடன் வாக்காளர் மத்தியில் எடுத்துரைத்ததுண்டா? அல்லது வாக்காளர்கள் தான் அவர்களைக் கேள்வி கேட்கும் அளவுக்கு சிரமங்கள் எடுத்ததுண்டா?

போகிற போக்கில், காற்றில் கப்பல் விடுவேன் என்றும் கேப்பையில் இருந்து நெய் எடுப்பேன் என்றும் சொன்னால் கூட நமது வாக்காளர்கள் வாக்களித்து வெற்றிக் கனியை அவர்கள் தத்தம் தலைமையின் காலில் சமர்ப்பிதுவிதுவிட்டு வாக்களித்த நம்மையே சுரண்டக் கிளம்பிவிடுவார்கள்... இது தான் ஜனநாயக மரபு என்றே நம்மை இக்காலத் தலைவர்களும் நம்ப வைத்தும் விட்டார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க கூட திருவாளர் பொது ஜனங்களுக்கு நேரமும் இருப்பதில்லை...

செய்தித் தாள்களைப் புரட்டி, உலக நடப்பு தெரிந்து, இவ்வளவு காலம் நடந்ததை திரும்பிப் பார்க்க நேர்ந்தால், இவைகளெல்லாம் பொது ஜனங்களுக்குப் புலப் படும்:

1. குற்றப் பின்னணி உடையவர்கள் எந்தனை பேரைத் வெற்றி பெற வைத்துள்ளோம்?
2. ஊழல் பெருச்சாளிகள் எத்தனை பேரிடம் ஏமார்ந்துள்ளோம்?
3. சபையில் நமக்காக ஒரு கேள்வி கேட்கக் கூட நேரமில்லாமல் உழைத்தே ஓடாய்த் தேய்ந்து போன (யாருக்காக?) எத்தனை பேரை மறுபடி வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்துள்ளோம்?
4. கொள்கையும் கட்சியும் மாறி மாறி நம்மிடம் மறுபடி மறுபடி வாக்குப் பெற வரும் எத்தனை பதவி வெறியர்களை நாம் தாங்கிப் பிடித்துள்ளோம்?
5. வெற்றி பெறுவதற்கு முன்னும் வெற்றி பெற்ற பின்னும் இவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களை ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்துகிறார்கள்?
6. கட்சித் தலைமைக்குக் காட்டுகின்ற விசுவாசத்தில் நூற்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காட்டுகிறார்களா இவர்கள்?
7. காமராஜர் வழி, கக்கன் வழி வந்ததாகக் கூறும் இவர்களில் எத்தனை பேர் சுயநலத்தை விடப் பொது நலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
8. பொது மருத்துவமனையில் இவர்களில் எவ்வளவு பேர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சிகிச்சை பெறுகிறார்கள்? அரசு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள்? அரசு பள்ளிகளில் எவ்வளவு பேரின் குழந்தைகள் பயிலுகிறார்கள்? இதற்கெல்லாம் பதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்க, இவர்களில் எத்தனை பேருக்கு மக்களுக்கு சேவை ஆற்றுகின்ற மனப் பக்குவம் வரும்?
9. இவர்களில் எத்தனை பேர் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டவர்கள்?
10. தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை இவர்களில் யாராவது பத்திரமாக எழுதித் தரத் தயாரா?

குறிப்பு - இந்தக் கேள்விகள் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ சாராரையோ மனதில் வைத்துத் தொகுக்கப் பட்டவை அல்ல. இதற்காக என்னைச் சாடும் பொழுதாவது பேதம் பார்க்காமல் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பார்களே எனில், அதை என் வாழ் நாள் சாதனையாகக் கருதுவேன்...

இவற்றை விட இன்னும் எவ்வளவோ கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்க, இதோ இந்தத் தேர்தலும் வந்து இவற்றுக்கு நல்ல பதில்கள் கிடைக்காமலேயே விடை பெறவும் போகிறது... எத்தனை பேர் இன்னும் "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"னு சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை!!!

மே பத்து - "உலக வரி ஏய்ப்பு தினம்"


அரவணைக்க அருகில் இல்லை நீ...
ஆனால், துணைக்கு தினமும் வருகிறாய்...

அட்சய த்ரிதிக்கு செய்கூலி சேதாரம் இல்லை... உன்
அன்புக்கோ விலை மதிப்பில்லை.

மே பத்தாம் தேதி "உலக வரி ஏய்ப்பு தினம்" - ஆம்...
நீ கொடுத்த அன்புக்கு வரி கட்டவில்லை எவனும் இன்னும்...

எங்கள் சுகத்துக்கு உன் துக்கம் மறந்தாய்...
எங்கள் நிம்மதிக்கு உன் தூக்கம் தொலைத்தாய்.

ஒவ்வொரு ஆத்திகனும் போற்றுகின்ற பெரியார் நீ...
ஒவ்வொரு நாத்திகனும் கற்கின்ற கடவுள் நீ...

உன் கோபம் - கொட்டுகின்ற தேள் அல்ல, மீட்டுகின்ற விரல்...
உன் குட்டு - "சுறுக்"கென்ற வலி இல்லை, செதுக்குகிற உளி...

மீட்டாமல் இசை வருவதில்லை வீணையிலிருந்து...
உன் கண்டிப்புத் தான் எங்களை ஓவியமாகத் தீட்டியிருக்கிறது...

செதுக்காமல் வடிந்து விடுவதில்லை சிற்பம்... உன்
அக்கறை இல்லாமல் நாங்கள் வெறும் படிக் கற்கள் - சொற்பம்...

இந்நாளில் உன்னை வாழ்த்துவதைக் கூடக் கடமையாய்
எண்ணியிருக்கிறோம் - எங்களில் பலர்...

இனி வருடமெல்லாம் "அன்னையர் தினம்" ஆக இருந்தாலும் -
வரி ஏய்ப்பிலிருந்து தப்ப முடியாது எங்களால்!!!

சிந்திப்பீர் செயல் படுவீர்...




மை இட்டனர்
விரலில் -
ஒப்பமிட்டான்,
கருவி கண்டதும்
குழப்பம்...

கை நீட்டி
வாங்கிய
காந்தி -
பல்லிளித்தார்
பையிலிருந்து...

பொத்தானை
அழுத்திடத்தான்...
விரல் நீள
முனையும்
போது...

கரை
படிந்த
மனசாட்சி...
காரி
உமிழ்ந்தது...

இத்தனை
நாட்கள்
உன்னை ஏமாற்ற
யோசிக்காத
"இவர்"களை...

ஏமாற்ற
நீ - ஏன்
பட
வேண்டும் -
வெட்கம்...

கயவர்கள்
காந்தியை
நம்புவதே
துரோகம்
இழைக்கத்தான்...

அவர்கள்
கையில் இருந்து
அவன் பைக்கு
வந்த
காந்தி...

இனி ஒரு
முறை நாம்
ஏமாற்றப்
பயன்பட
மாட்டோம்...

என்றுதிர்த்த
புன்னகை
தான்...
அவனைக்
குழப்பியது...

அவர் வடிக்கும்
ஆனந்தக்
கண்ணீர்
வியர்வையாய் வடிகிறது -
கிழிந்த சட்டையில் ...

யோசித்தான் -
வட்டியும்
முதலுமாகத்
திருப்பிக் கொடுக்க
இதுவே சந்தர்ப்பம்...

உத்தமன் -
"49O" படிவத்தில்...
வாந்தி எடுக்கத்
தொடங்கினான் -
தன் மனசாட்சியை...

இன்னும் ஐந்து
வருடம்
கழித்துத்தான்
இனி மீண்டும் ஒரு
சந்தர்ப்பம்...

இனியாவது -
சிந்திப்பீர்
செயல்
படுவீர்...