வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, August 4, 2011

மனிதம் தொலைக்கும் மானுடம்...


இடுகைப் (Blogs) பெட்டிக்குள் புழுங்கும் புழுக்களாக...
வலைத் தளங்களில் (Web Sites) சிக்கித் தவிக்கும் சிலந்திகளாக...
முகப் புத்தகத்தில் (Facebook) புதையுண்ட பூச்சிகளாக...
செல்லிடப் பேசிகளில் (Cell /Smart Phones) மேயும் மந்தைகளாக...
மடிக் கணினிகளில் (Laptops) மயங்கும் விட்டில்களாக...
கைக் கணினிகளை (Tablets) ஏந்தித் திரியும் இயந்திரங்களாக...

இன்னும் எத்தனை நாட்கள் தான் மனிதம் தொலைத்துவிட்டு,
மானுடம் தேடுவோம் நாம்? பாரதிதாசன் கூற்று -
"பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்,
என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்...
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு..."

தொலைத்த இடம் இருட்டியதால் வேறிடம் போய்த் தேடுவதா?
மானுடத்தைத் தொலைத்து விட்டு, மனிதர்கள் நாம் வாழுவதா?
சிந்தியுங்கள் நண்பர்களே!!!

இக்கருத்தைப் பரப்பிடவும், முகப் புத்தகம், வலைத் தளம் மற்றும்
இடுகைகளின் உதவியை நாடும், என்றும் உங்கள் அன்புடன்...

- கலைபிரியன்...

Sunday, May 15, 2011

ஜனநாயகத்தில் குப்பனின்/சுப்பனின் பங்களிப்பு மற்றும் புதிய அரசிடம் எனது எதிர்பார்ப்பு...


தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதனையும் மீறி, ஆட்சியாளர்களின் மேல் இருந்த கோபமும் சேர்த்து சற்று மிகையான வெற்றியையே எதிர்க் கட்சி பெற்றுள்ளது. புதிய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் தொண்டாற்றுவதற்காக மக்களால் அமைக்கப் பட்டது என்று பொத்தாம் பொதுவாகக் கருத்துக் கூறி விட முடியாது. அப்படி ஒரு எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு மாற்று சக்திகள் தமிழகத்தில் இல்லை என்பது வாக்களித்த அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்பதே உண்மை.

ஒரு பெரிய மாற்றம் நிகழும் பொழுது, அந்த மாற்றத்தை ஏக மனதாக வரவேற்று கொண்டாடிவிட்டு, முடிந்த அளவுக்கு உப்புப் பெறாத அரட்டைக் கச்சேரிகளை, ஊடகங்கள் வாயிலாக நிகழ்த்திவிட்டு, ஐந்தாண்டு காலம் உறங்கிக் கழித்து விட்டு, அப்புறம் ஆட்சியாளர்களைக் குறை கூறி மாற்றம் தேடுவதே நமது பிழைப்பாகிப் போய் விட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியவுடன், ஒவ்வொரு நாளும் வடிவேலு குறித்தும், கலைஞர் குறித்தும், ஏனையோர் குறித்தும் ஊடகங்களில் உலா வரும் நகைப்புக்குரிய விஷயங்கள் இவற்றையே பிரதிபலிக்கின்றன. அதுவே தொடர்ந்து நிகழ்ந்து வருமே ஆனால், சற்றே திகட்டத் துவங்கிவிடும்.

மக்கள், பொறுப்பான ஜனநாயகத்தின் பங்காளிகளாகத் தொடர்ந்து அரசின் செயல்பாடுகளையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் ஆக்கப் பூர்வமான பார்வையுடன் அணுகி விழிப்புணர்வுடன் இருப்பார்களே ஆனால், வாக்காளர்களை ஏமாளிகளாக நினைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்து வருவோர் படிப் படியாக அரசியலிலிருந்து விரட்டி அடிக்கப் படுவர். புதிய, மாற்று சக்திகள் உருவாகவும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

அரசியல் சம்பத்தப் பட்ட விஷயங்களிலும், அரசு நடக்கும் விதம் குறித்தும், இனியேனும் "நான் உண்டு, என் வேலையுண்டு..." என்று இருந்திராமல், ஊடகங்கள் வாயிலாக அறியப் படும் செய்திகளை இனியேனும் பொது மக்கள் தெரிந்து கொண்டு ஆக்கப் பூர்வமானவர்களாக மாற வேண்டும். "அதற்கு ஏது நேரம்?..." என்று வெட்டிச் சாக்கு சொல்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் - "பிரபு தேவா/நயன்தார திருமணம், தீபிகா படுகோனின் ஆண் நண்பர்கள், த்ரிஷாவின் நள்ளிரவுக் கூத்துக்கள், தோனியின் தேனிலவு அட்டவணை..." போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்காகச் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு மடங்கு ஜனநாயக நடைமுறை குறித்து அறிந்து கொண்டு, அலசி ஆராய நீங்கள், இதுவரை  முற்பட்டதுண்டா? காலம் இன்னும் தாழ்ந்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இனியேனும் பொறுப்புணர்ச்சியுடன் "bottomline" குறித்த புரிதல் இருந்தால், உடனடியாக இல்லாவிட்டாலும், சிறிது காலம் கழித்தாவது நமது நாட்டை வல்லாரசாக மாற்றுவதில் நமக்கும் உண்மையான பங்கு இருக்கும்.

சரி. ரொம்ப அளந்துட்டேன்... இனி விஷயத்துக்கு வருவோம்...

புதிய அரசிடம், ஒரு சராசரி குடிமகனாக எனக்கு உள்ள எதிர்பார்ப்பை, தொகுத்து அளித்துள்ளேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்...

சட்டம் ஒழுங்கு: "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்றாகிவிட்டது கடந்த ஆட்சியில். யார் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவர் மீது ஒரு அதிகாரி நடவடிக்கை எடுப்பது, அவன் செய்த செயலின் அடிப்படையில் இல்லாமல், அவனது அரசியல் பின்புலத்தைப் பொறுத்தது என்றாகிவிட்டது. இந்தக் கேவலமான நிலை மாற வேண்டும். இந்நிலையை பெருமளவு (முழுமையாக என்று கூற முடியாது) மாற்றக் கூடிய திறமை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஆட்சியாளரிடம் இருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம். இந்நிலையை மாற்ற, பதவி ஏற்கும் முதல் நாளில் இருந்தே இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் தான் வாக்களித்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

மின் வெட்டு: அரசின் கீழ் இயங்கி வரும் மின் நிறுவனமும், மின்சாரத் துறையும் செயலிழந்து, மாநிலத்தைக் கற்காலத்தை நோக்கிப் பின் நகர்த்திவிட்டது என்று கூறுவது மிகையாகாது. ஆக்கப் பூர்வமான அதிகாரிகள் துணையுடன், துறையையும் நிறுவனத்தையும் புனரமைத்துப் (களைகளை அகற்றி) போர்க்கால அடிப்படையில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை வகுத்து, இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட, மின் வெட்டு அறவே இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத் திறன் கொண்ட முதல்வரை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதால், இதனை அவர் செய்வார் என நம்பகிறேன். 

மாநிலத்தின் நிதி நிலை: "சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்...". கஜானாவின் இருப்பு என்ன என்பதை ஆராய்ந்து, அதற்கேற்பப் புது வருமானம் கிடைக்க வழி வகுக்க வேண்டியவர்கள், "ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே..." என சற்றும் ஆக்கப் பூர்வமில்லாத திட்டங்களுக்காக அள்ளி இறைத்து, கடந்த ஐந்தாண்டுகளில், மாநிலத்தின் நிதிநிலையை அதல பாதாளத்துக்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படிப் பட்ட நிலையை இரண்டு முறை சமாளித்துத் தன்னால் இயன்ற அளவுக்கு நிர்வாகத்தை நடத்திய முதல்வரையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றாலும், இந்த நிலை இன்னும் சற்று அதிகக் கவலை அளிக்கக் கூடியதாகவே, இன்று, இருக்கிறது. இந்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதன்மை அளித்து, ஓரளவுக்கு நிலைமை சீரடைந்த பின்பு, செலவீனங்களுக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பதே மக்கள் எதிபார்ப்பு. என்ன தான் இலவசங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தாலும், இலவசங்களை நம்பி மக்கள் வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்திருக்கையில், இதுவும் புதிய ஆட்சியாளர்களுக்கு சாத்தியம் என்றே நம்புவோம்.

விலைவாசி கட்டுப்பாடு: ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டுக் கத்தரிக்காய் அறுபது ரூபாய்க்கு விற்பதைக் கட்டுக்குக் கொண்டுவராமல் விட்டால், அந்த அரிசி ஏழை மக்களுக்கு வாய்க்கரிசிக்கு சமம் என்பதை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காத அரசையே கடந்த ஐந்தாண்டுகளாகப் பார்த்தோம். இந்த விஷயத்தில் மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டே, அந்த அரசைக் கை காட்டித் தப்பித்தார்கள் என்பது அவர்களின் கையாலாகாத் தனத்தையே அடையாளம் காட்டியது. பயனற்ற இலவசங்களைக் கொடுக்க ஒதுக்கப் பட்ட பணத்தில் பாதிப் பணத்தை வரி மானியமாகவும், பெற்றோல் டீசல் மானியமாகவும் செலவிட்டிருந்தால், ஆன்லைன் வர்த்தகம் மூலம், பொருட்களைப் பதுக்கி, விலையேற்றத்திற்குக் காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் அடித்திருந்தால் எளிமையாக விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஐந்து முறை ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவரால் இதனைச் செய்ய முடியவில்லை என்பது நமது மாநிலத்திற்கு வெட்கக் கேடு. இந்த விஷயத்திலும் புது அரசு அதிக கவனம் செலுத்தி மக்களுக்குப் பயன்படும்படியான செயல்களை முடுக்கி விட வேண்டும்.

கல்வி வளர்ச்சி: சமச்சீர் கல்வி என்ற பெயரில், கல்வியின் தரத்தைக் குறைக்க முற்பட்டுக் கிட்டத் தட்ட வெற்றிபெற்றுவிட்டார்கள் கடந்த ஆட்சியாளர்கள். குழப்பங்களைக் களைந்து இந்த விஷயத்தை சரி செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அல்லது, இந்தத் திட்டத்தை புதைத்துவிடுவதே நல்லது. கல்வியைத் தொழிலாக நடத்தி அளவுக்கதிகமாக வசூல் வேட்டை நடத்திவரும் பள்ளிகளின் நிர்வாகத்தினரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தொழில் துறை முன்னேற்றம்: தகுதி படைத்த எந்த ஒரு நிறுவனமும், நபரும், எந்தத் தொழிலையும் தொடங்கி நடத்த அனுகூலமான நிலைமையை உருவாக்க வேண்டும். மத்திய அரசு, மற்றும் மாநில அரசின் உதவியுடன் ஒரு சில தனிப் பட்ட மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் போட்டியாளர்களை நசுக்கும் தற்போதைய நிலைமை அகற்றப் பாடு பட வேண்டும்.

விவசாயம் சார்ந்த வளர்ச்சி: கடந்த பல ஆண்டுகளாக பாவப் பட்ட தொழிலாகிவிட்ட விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப் படும் நலத் திட்ட உதவிகளை, மோசடி செய்து, நிலச் சுவான்தார்கள், அவர்கள் பெயரில்  பயனடைவதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சனைகளில், அவர்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவைப் பேணி, அதன் பயனாகப் பேசித் தீர்க்க வேண்டும். இது விவசாயிகளுக்குப் பேருதவியாக அமையும்.

ஆக்கப் பூர்வமான வளர்ச்சிப் பாதை: வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் முதலீடு செய்ய முன் வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கவரும் விதமாகக் கட்டுமானத் துறையில் முன்னேற்றத்தைச் செய்து, அவர்கள் தொந்தரவு இல்லாமல் தொழில் நடத்த ஆவன செய்ய வேண்டும். இதற்காக, சென்னை மற்றும் இதர நகர் விமான நிலையங்களை சர்வதேசத் தரத்துடன் உயர்த்துவது மிக மிக அவசியம். துணை நகரம் அமைப்பதில் மக்கள் நலன் காக்கப் பட்டு, அவ்விஷயங்களில் அரசியல் தலையீடு புரிந்து தடுக்க நினைப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைப் படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களைத் தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய அரசின் தலைவரால் மிகவும் எளிதாகச் செயல்படுத்த முடியும்.

அதே சமயம், அவற்றையும் மீறிக் கீழ்க் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களிலும் அவர்கள் நல்ல முறையில் செயல்படுவார்களே ஆனால், அதன் மூலம் வருங்காலங்களில் மக்கள் மனதில் தனித் துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பிடிப்பதற்கும் அவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக வருகின்ற ஐந்தாண்டுகள் அமையும். மேலும், இந்த விஷயங்களைச் சரியாகக் கிரகித்துச் செயல்படாததால் தான் இது வரை அடைந்த தோல்விகளை அவர்கள் சுவைக்க நேர்ந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர் நலனில் அக்கறை: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை, தாய் நாட்டுத் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, கண்டனம் செய்து சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சித் துணையுடன் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்குத் தன்னாலான நெருக்குதல்களைத் தந்து ஈழத் தமிழர் நலன் காக்கப் பாடுபட வேண்டும்.

கண்ணியமான அரசியல் செயல்பாடு: யாரும் அணுக முடியாத வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டு செயலாற்றுவதையும், தனக்காகப் போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்களிலும் இனியும் தொடர்ந்து ஈடுபடக் கூடாது. ஜால்றாக்களையும்/அடிப் பொடிகளையும் மட்டுமே நம்பாமல், ஜே.சீ.டி. பிரபாகர், சைதை துரைசாமி, வைகை செல்வன், பழ. கருப்பையா, கோகுல இந்திரா, ராஜ கண்ணப்பன், பீ.எச். பாண்டியன், பொன்னையன், டாக்டர் மைத்ரேயன் போன்ற திறமை மிக்க, ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்களைக் கட்சியின் சார்பில், கட்சி, ஆட்சி மற்றும் டில்லி களங்களில் முன்னிலைப் படுத்தி, அவர்களது ஆலோசனைகளுடன் கட்சி மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை வகுத்தால் உண்மையில், அ.இ.அ.தி.மு.க வால் கூட ஓரளவு கண்ணியமான ஆளுங்கட்சியாகச் செயல்பட முடியும். அது மட்டுமல்லாமல், கொள்கைகளையும், கண்ணியத்தையும், தாங்கள் செய்யும் தவறுக்குக் கேடையமாகப் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே கடந்த சில காலமாக முயன்று வரும் தி.மு.க இத் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு செயலாற்றுவது ஆட்சியாளர்களுக்கு நல்லது.

ஊழல் ஒழிப்பு: ஊழல் என்பது இவ்வளவு காலமாகப் புரையோடிவிட்டபின், அதனை ஒரு சில நாட்களில் ஒழிப்பது என்பது முடியாத காரியம். அப்படி இந்த அரசு செய்யும் என்று எதிபார்ப்பதும் பைத்தியக் காரத் தனம். அதே வேளையில், "இன்றே நாம் உயிர் வாழ்வதன் கடைசி நாள், அதனால் முடிந்த அளவு சம்பாதித்துவிட வேண்டும்...", என்பது போல, பல அதிகார மையங்களை நிறுவி அவற்றின் வாயிலாக, இன்ன அளவு என்று ஒரு வரைமுறையே இல்லாமல் சுருட்டுவதால் ஏற்படும் நிலைமை என்ன என்பதை இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் கண்கூடாகப் பார்த்தோம். அப்படிச் செய்ததனால் கீழ் மட்டங்களில் நடந்த சுருட்டல்களைத் தட்டிக் கேட்கத் திராணி அற்றவர்களாய் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இருந்த அவலமான நிலையைப் பார்த்தோம். அப்படிப் பட்ட நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து படிப் படியாக அனைத்து மட்டங்களிலும் ஊழலைக் களையப் புதிய அரசு ஆவன செய்ய வேண்டும்.

மேலே கூறியவை எல்லாம் கொஞ்சம் அதிகப் படியான எதிர்பார்ப்பு என்று எண்ணிவிடாதீர்கள். ஆட்சியாளர்களுக்கு அரசியல் சாசனச் சட்டத்தின் படி அளிக்கப் பட்டுள்ள வானளாவிய அதிகாரங்களையும், அவற்றைச் செயல்படுத்தத் துணையாய் உள்ள ஆயிரக் கணக்கான அதிகாரிகளும் தங்களின் நிலையை உணர்ந்து செயல்பட்டால், அவ்வளவும் சாத்தியமே.

பார்ப்போம்... எவ்வளவு தூரம் இந்த அரசு கடக்கிறது என்று... வாழ்த்துக்கள்...

கலைபிரியன்...

Tuesday, March 22, 2011

குறிச்சிடுங்க அவுக தேதிய...

பிள்ளையார் கோவிலில் அருகம் புல் கொடுக்காக - எல்லாப் பிணிகளையும் போக்க வல்லதாம்...
சிவன் கோவிலில் வில்வ இலை தந்தாக - நீரிழிவு நோயே வராமல் செய்வதாம்...
பெருமாள் கோவிலில் துளசி தாராக - சளி ஏதும் அண்ட விடாதாம்...
மேலும் கொடுத்தாக பச்சைக் கற்பூரத் தீர்த்தம் - நீரின் கிருமிகளை நிர்மூலமாக்கிடுமாம்...

சாமிக்குக் கும்பிடு போட்டாப் பிணி தீராதுன்னு, பகுத்தறிவுப் பகலவன் சொல்றாக...
அதுக்குப் பதிலா, கும்புடு போடுற ஆசாமிக்கு வோட்டுப் போட்டா,
இலவசமா நிலவத் தாரமுன்னும் சொல்லுறாக...கேட்டுக்குங்க சேதிய...
இனியாவது குறிச்சிடுங்க அவுக தேதிய... ஏப்ரல் 13... தேர்தல் நாள்...

- கலைபிரியன்

Monday, March 21, 2011

படித்த காமராஜ்...


1967 தேர்தலில், காமராஜரை எதிர்த்து தி.மு.க சார்பில் பெ. சீனிவாசன் என்ற இளைஞர் களம் கண்டு வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்தின் போது நடந்த சுவையான சம்பவம்.

அந்தப் பகுதியில் சிலரால் அறியப்பட்ட ந. காமராஜ் என்ற இளைஞர் இருந்தார். அவர் படித்தவர். அவர் பெ. சீனிவாசனைப் பாராட்டிப் பேச ஏற்பாடாகியிருந்தது. அதற்காக தி.மு.க அடித்த சுவரொட்டியில் இருந்த வாசகம் - "பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படித்த காமராஜ் பேசுவார்" என்று காமராஜரை மட்டம்தட்டுவது போல அமைந்திருந்தது அந்த வாசகம்.

அதனைப் பெரியார் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றனர். அவர் சொன்னார் - "சுவரொட்டியில் ஒரு சின்னத் திருத்தம். பெ. சீனிவாசனைப் பாராட்டிப் படிக்காத காமராஜ் கட்டிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராஜ் பேசுவார் என்றிருந்திருக்க வேண்டும்..." என்று.

காமாராஜர் ஆட்சிக்கு வந்த போது, தமிழகத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 35,000. அவர் ஆட்சியில் இருந்து இறங்கும் போது, அவை 1,60,000. இந்தப் புள்ளிவிவரத்தைக் கூட எடுத்து வைக்காமல், சுவரொட்டி ஒட்டியவர்களை நாணித் தலை குனியச் செய்திருக்கிறார் பெரியார். இன்று, அவர் வழித் தோன்றலாக உருவாகிய கட்சிகளின் கழகக் கண்மணிகள் நடத்துகின்ற கூட்டங்களையும், கடைபிடிக்கின்ற நாகரீக அணுகுமுறைகளையும் காணும் போது, இவ்விஷயங்களைக்
கேள்விப் படுகின்ற நமக்கு ஏக்கமாகத் தானே இருக்கும்?

- கலைபிரியன்

இன்று உலகத் தண்ணீர் தினம்...

வங்கக் கடலில் சுனாமியாய் வந்தால்,
வாரிச் சுருட்டி ஓடும் நீங்கள்... வீட்டு
வாசற் குழாயில் நான் வரும்போது மட்டும்
வால் தனத்தைக் காட்டுவதேன்?

கார்மேகத்தின் கண்ணீர்த் துளி நான்...
கரைந்தால் மழை, கதறினால் வெள்ளம்...
என்னை வரச் சொல்லித் தூது விடும் மரங்களை
நீங்கள் வெட்ட, கனக்கிறது என் உள்ளம்...

வங்கிக் கணக்கில் துட்டுச் சேர்க்கும் நீங்கள்,
மண்ணின் மாடியிலிருந்து என்னை மட்டும்
ஒரு சொட்டு விடாமல் உரிந்துவிடுவதில்
தான் என்ன நியாயம்? - சொல்லுங்கள்...

வரவுக்கேத்த செலவு, வாழ்க்கையெல்லாம் மகிழ்வு...
சிந்தியுங்கள்... என்னை, இனியாவது சேமியுங்கள்...

- கலைபிரியன்

தேர்தல் அறிக்கையில் வாக்காளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள்...

பரம ஏழைகள் என்ற ஒரு பிரிவே ஒழிக்கப் பட வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அரசின்பால் மக்களுக்கு இருக்கையில், "பரம ஏழைகளுக்கு இலவசம்..." என்ற பகிரங்கமாகவே ஒரு ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டு விளம்பரப்படுத்துவது மகா கேவலம். மேலும், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் அவர்கள் அடைந்த தோல்வியையே இது பிரதிபலிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் எதிர்பார்ப்பது கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, இலவசங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களாக, வாக்காளர்கள், இனிமேலும் இருந்துவிடக் கூடாது.

கல்வியின் தரத்தையும், அதன் வியாபாரமயமாக்கலைத் தடுக்கவும் என்னென்ன செய்தீர்கள்?
விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன திட்டம் வகுத்தீர்கள்?
வேலைவாய்ப்பைப் பெருக்க நீவிர் செய்த செயல்கள் என்ன?
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த எவ்வளவு ஒதுக்கினீர்கள்?
லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க என்ன செய்வதாய் உத்தேசம்?
மின்சாரம், சாலைகள் மற்றும் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா?
விவசாயம் தழைக்க ஏதேனும் செய்ய முடியுமா?
தொழில் துறை வளர்ச்சியில் குஜராத் போன்ற மாநிலங்களுடன் தமிழகம் போட்டி போடா இயலுமா?
பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் இணையான விமான நிலையம் சென்னையில் வருமா வராதா? இதனால் தொழில் துறையில் தமிழகம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறதே?
காலை மாலை நேரங்களில் நகர்ப் புறப் போக்குவரத்து நெரிசலை எவ்வாறு சமாளிப்பது?
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கல்லவா இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்? சாதிய ரீதியில் வோட்டுக்காக இட ஒதுக்கீடு அளிப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு லட்சம் கோடி ரூபாயான மாநிலத்தின் கடனை அடைக்க என்ன தான் வழி?
எங்களுக்கான மக்கள் பிரதிநிதி எத்தனை நாட்கள் தொகுதியில் இருப்பார்? எங்களுக்கான குறைகளை அவரிடம் நேரில் கூறி முறையிட இயலுமா?
மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு ஒளிவுமறைவின்றி இருக்கவும், எதிர்க் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தால், அரசால் மக்கள் புறக்கணிக்கப் படாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப் படுமா?

- கலைபிரியன்

Friday, March 18, 2011

கலைஞரின் கடந்த ஐந்தாண்டு ஆட்சி கால சாதனைகள்... தேர்தல் பிரசாரம் தேவையா?


இன்றைய ஆளுங்கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் செய்த அரும் பெரும் சாதனைகள் தான் எத்தனை எத்தனை... நாங்கள் வோட்டுக் கேட்டு வர வேண்டிய அவசியமே இல்லை... வாக்காளர்களே, தத்தம் வோட்டுக்களை எங்களுக்கும், எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டுவிடும்படியான சாதனைப் பட்டியல், இதோ...

மகளிர் மேம்பாடு - தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, கயல்விழி, எழிலரசி, பூங்கோதை ஆலடி அருணா, தேன்மொழி கோபிநாதன், குஷ்பூ, விஜயா தாயன்பன், இந்திரகுமாரி போன்ற கஞ்சிக்கு வழியில்லாத இன்னும் எவ்வளவோ திராவிட குலவிளக்குகளை, மகளிர் குல மாணிக்கங்களைப் பெருமைப் படுத்திக் கோடிகள் புரளும் கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் அமரச் செய்யது, நாங்கள் ஆற்றிய சாதனையை யாரால் முறியடிக்க முடியும்? எதிர்க் கட்சித் தலைவி ஒரு பெண்ணே ஆனாலும் கூட, அவரது ஆட்சி காலத்தில் பயன் அடைந்த ஒரே பெண்மணி சசிகலா கூட இவர்களைப் போல் எவ்வளவு பயனை அடைந்துவிட்டார்? இதற்கு மேலும் மகளிர் மேம்பாட்டுக்கு, இந்தத் தள்ளாத வயதில் என்ன தான் செய்து விட முடியும்? இதற்கு மேலும் மங்கையர் ஆளுங்கட்சிக்கு வோட்டுப் போடுவதைத் தவிர்ப்பார்களே ஆனால், அவர்கள் குலம் விளங்கத் தான் செய்யுமா? அதனால், சுயமரியாதைத் தமிழனான என்னை தயவு செய்து எனது கொள்கைக்கு மாறாக சாபம் விட வைத்துவிடாமல், பெண்களே, தங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஆளுங்கட்சிக்கும், உள்ளடி வேலைகளில் சிக்காத கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் பதிவு செய்திடுவீர். அப்படிப் பதிவு செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. வேறு யாராவது உங்கள் சார்பில் உங்கள் வோட்டைப் பதிவு செய்திருந்தாலும், தயவு செய்து, அதனைப் பற்றி ஜெயா தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்காதீர்...

தொழில் வளம் - தம்பி மாறன் (அய்யா, அவர் பேரன் இல்லையான்னு கேக்கலாம்... நான் தான் ஸ்டாலினையே தம்பின்னு தானே சொல்றேன்...), விமானப் போக்குவரத்து நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். "Cloud Nine", மற்றும் "Red Giant" என்று சுத்தத் தமிழில் பட நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டி, மானிய விலையில் உழைக்கும் வர்க்கத்துக்கு சினிமா காட்டுவதை, சமூக சேவையாகவே கருதிச் செய்துவருகிறார்கள் என் பேரன் மார்கள். சூப்பர் ஸ்டார், அருமைத் தம்பி ரஜினிகாந்த் (அவர் வாய்ஸ் குடுத்தாலும் குடுக்காட்டியும், எனக்குத் தம்பி தாம்பா) அவர்களை வைத்து, இவ்வளவு கம்மியான பொருட்செலவில் வேறு யாராலாவது இவ்வளவு தரமான சினிமாவை உருவாக்க முடியுமா என்று உலக மக்கள் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது "Sun Pictures". போலி மருந்து விற்றே, ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு விலையுயர்ந்த கார் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு ஆருயிர் இளவல் மீனாட்சி சுந்தரம் தொழில் வளர்ச்சி பெறவில்லையா? (இவர் பெயரைக் கூறாவிட்டால், எல்லாரும் குடும்ப உறுப்பினர் தானேன்னு கேட்டுடக் கூடாது பாருங்க). கர்பவதியாய் இருக்கும் போது கராக்ரகம் கண்ட திராவிட குல திலகம் சத்தியவாணி முத்து வழி வந்த கழகக் கண்மணி, கனிமொழியின் உதவியோடும், கலகக் கண்மணி நீரா ராடியா துணையோடும், முதலீடே செய்யாமல், நாட்டுக்கு 1,76,000 கோடி நஷ்டம் ஏற்படுத்தி, அவருக்கும், எங்கள் கழகம் பெயரால் இயங்கி வரும் கலைஞர் & கோ நிறுவனத்துக்கும் ஆயிரக் கணக்கான கோடிகளைக் குவிக்கப் பேறுதவி புரிந்து, அதன் விளைவால், இன்று திஹார் சிறையில் வாடி வதங்கும் கழகத்தின் கொ.ப.செ திருவாளர் ஆ, ராசா செய்த அரும்பணியைக் கூறுவதற்குள், எனக்கே விக்கி நெஞ்செல்லாம் அடைத்துவிடும் போல் இருக்கிறது. தமிழகத்தின் கடனை 1,00,000 கோடி சுமையாக ஏற்றியபின் இவ்வளையும் செய்து முடித்த நாங்கள், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்தால், இன்னும் என்னவெல்லாம் செய்திடுவோம் என்று சற்றே சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். அந்த அம்மையாரால், இவை போன்ற சாதனைகள் சாத்தியமா? இல்லை என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அதனால், தயவு செய்து உங்களிடம் வந்து, இந்தத் தள்ளாத வயதில் தொண்டைத் தண்ணி வற்றக் கூவிக் கூவி பிச்சை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று பெரியாரின் பெயரால், அண்ணாவின் பெயரால் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கு - மேயர் தலைமையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து, அப்பாவித் தமிழர்கள் மூன்று பேரைக் கொன்று, பேரன்களிடம் பணம் பெற்று சமாதானம் ஆன பின்பு, எவ்வளவு லாவகமாக அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டோம்? அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்ற எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரைக் கொலை செய்துவிட்டு, அந்த வழக்கிலிருந்து எவ்வளவு லாவகமாகத் தப்பித்து, கொலை செய்தவர்களையே, மத்திய அமைச்சராக்கி, மதுரை மாநகரின் துணை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறோம்? இரண்டொரு நாட்களுக்கு முன்பு கூட ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்ரூவராக இருந்த ராசாவின் பினாமி, ஆருயிர் தம்பி சாதிக் பாஷாவை, அந்த சிரமங்களை எல்லாம் மேற்கொண்டு தன்னையும், தனது குடும்பத்தையும் வருத்திக் கொள்ள மனம் ஒவ்வாமல், இப்பூவுலக வாழ்வில் இருந்து விடுதலை கொள்ளச் செய்தோம். இவ்வளவு தெளிவாக சட்டம் ஒழுங்கை அந்த அம்மையார் ஆட்சி செய்த காலங்களில் பாதுகாத்ததுண்டா? இதற்கு மேலும் எங்களுக்கு ஓட்டுப் போடாவிட்டால், நான் பேச மாட்டேன். எனது உடன்பிறப்புகள் பேசுவதைத் தடுக்கவும் மாட்டேன் என்பதை மனதில் இருத்தி வோட்டுப் போடுங்கள்.

இதுதவிர, மத்தியில் உள்ள ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டு, ஆட்சியாளர்களைப் பாடாய்ப் படுத்திப் பச்சடி வைத்து, நம் மக்களுக்கு வேண்டியதைச் செய்துகொள்வதில், அந்த அம்மாவுக்குத் திறமை பத்தாது. போஸ்ட் ஆபீசையே மக்கள் நாடாத கால கட்டத்தில், நானும் கழகத் தம்பி மார்களும் மட்டும் மத்திய அரசுக்குக் கடிதங்களும் தந்திகளும் அனுப்பாவிட்டால், தபால் நிலையங்களே நாட்டில் இயங்க முடியாத அளவுக்குப் போயிருக்கும். இப்படி எங்களுக்கு சம்பதமே இல்லாத துறைகளில் கூடப் பொருளாதார வளர்ச்சி பெற எங்களை விட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

- கலைபிரியன்

Thursday, March 17, 2011

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்பி க்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் - விகிலீக்ஸ் தகவல் - நல்லா இருக்குதைய்யா பிரணாப் முகர்ஜி ஞாயம்... வடிவேலு ஸ்டைலில் - "ஹ்ம்... அது போன மாசம்..." என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார்...


கடந்த மூன்று நாட்களாக, விகிலீக்ஸ் இணையதளத்தில் இந்தியா தொடர்பாகக் கசிந்த தகவல்கள் பற்றி இந்து நாளிதழில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

முதலில், திருமங்கலம் இடைத் தேர்தலின் போது, அஞ்சா நெஞ்சன் அழகிரி சார்பில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 5000 ரூபாய் கவரில் வைத்து செய்தித் தாள்களில் மடித்துத் தரப் பட்டன என்று அவரது ஆதரவாளரான மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் கூறியதாக ஒரு செய்தி. ஊர் உலகத்துக்கே தெரிந்து, இத்திருநாட்டில், தேர்தல் என்று ஒன்று வந்தாலே, "திருமங்கலம் பார்முலா" என்று, நாடே நாறிய பிறகு, இதனை நமக்குத் தெரிவிக்க விகிலீக்ஸ் தேவையில்லை என்பது வேறு விஷயம்.

அடுத்து, சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின் போது, இன்றைய உள்துறை அமைச்சர், மாட்சிமை தங்கிய (அறிவுஜீவி), திரு. ப. சிதம்பரம் அவர்களுக்காக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தொகுதியில், சிறப்பாகத் தேர்தல் பணி செய்ததாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுவதாக ஒரு தகவல். வாக்காளர்களுக்கும், அவர்களுடைய கிராமங்களுக்கும் பணம் பட்டுவாடா செய்வதில், அவரது தந்தைக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, அவர் அப்பணிகளை அற்புதமாகச் செய்வதாகப் பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்திருக்கிறார். எனக்கு ஒன்று தான் புரியவில்லை, இவ்வளவு செய்தும், கடைசியில் சிதம்பரம் தோற்றதாக அறிவிக்கப்பட்ட பின், எவ்வாறோ ஞானோதயம் பிறந்து ராவோடு ராவாக, அவர் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? இது சம்பந்தமாக, விகிலீக்சில் ஏதாவது தகவல் கசிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

ஊரறிந்த விஷயங்கள், கசிந்தால் என்ன, கசியாவிட்டால் தான் என்ன? தேசிய அளவில் நாறிக் கொண்டிருந்தவர்கள், இதன் மூலம், சர்வதேச அளவில் நாறிக் கொண்டிருக்கிறோம்... இது காங்கிரஸ் மற்றும் தி.மு.க அரசுகளின் மகத்தான சாதனை அல்லவா? தேர்தல் அறிக்கையில் சொல்லாத இப்படியான சாதனைகளையும் நிகழ்த்துவதில் இவர்களை மிஞ்ச யாரால் முடியும்? ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாறிய அளவு ஒன்றும், இவ்விஷயங்களால் நாற வில்லை. அந்த வகையில் ராசாவும், கனிமொழியும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம், அவர்களது சாதனை முறியடிக்கப் படவில்லை என்று.

மூன்றாவது, முக்கியமானது - அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில், கடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தில், அன்றைய அரசு மீது, இடதுசாரிக் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக வோட்டளிக்க, எம்.பி க்களுக்கு லஞ்சம் தரப்பட்டது என்னும் தகவல். தாங்களும் மக்கள் பிரதிநிதிகள் என்று காட்டிக் கொள்ள ஏதாவது கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்த எதிர்க் கட்சியினர், இந்த விஷயத்தை "லபக்" என்று பற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் நேற்று அமளி துமளி செய்ததாக ஒரு செய்தி... அதற்கு, எந்தப் பிரச்சனையில் காங்கிரஸ் ஆப்பு வாங்கினாலும், எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த ஆப்பை அகற்றும் வல்லமை படைத்த (chief troubleshooter), மூத்த அரசியல்வாதி (பாவம், இவரையும் ஒருமுறை கொலுவில், பிரதமர் பொம்மை ஆக்கி அழகு பார்க்கத் தான் சோனியாவுக்கு மனசு வர மாட்டேங்குது...), இன்றைய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி, எழுந்து ஒரு விளக்கம் தந்தாரே பார்க்கலாம்... "இத் தகவல், ஒரு வல்லரசு நாட்டுக்கும், அதன் தூதரகத்துக்கும் இடையே நடந்த விஷயம். அது போக, இது நடந்தது, கடந்த 13 ஆவது நாடாளுமன்றத்தில். இப்போது நாம் இருப்பது, 14 ஆவது நாடாளுமன்றம். அதனால், இத் தகவல்களை உறுதிப் படுத்துவதோ, மறுப்பதோ, இயலாத காரியம். 13 ஆவது நாடாளுமன்றத்தில் என்ன நடந்திருந்தாலும், அதன் ஆயுட் காலம் முடிவடைந்ததுமே, அவ்விஷயங்களும் முடிவுக்கு வந்து விடும். இப்பிரச்சனைகளை, இப்போது அலசுவது தேவை இல்லாதது..." என்று...

யப்பப்பா... இவ்வளவு பொறுப்புணர்ச்சி மிக்க பதிலை, இக்கட்டான நேரத்தில், அதுவும், நாடாளுமன்றத்தில் சொல்லவும் ஒரு துணிவு வேண்டும், மனிதருக்கு... வின்னர் படத்தில், வடிவேலு, "அது, போன மாசம்..." என்று ஒரு பிரபலமான வசனம் பேசியிருப்பார். இந்தப் பதிலைக் கேட்டதும், சத்தியமாக எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது... அவருக்கு ஒரு சில கேள்விகள்:

இந்த விஷயம், அப்போதே தெரிவிக்கப் பட்டிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?
2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த விஷயம் மக்களுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிந்திருந்தால், நீங்கள் பெற்ற இமாலய வெற்றியைப் பெற்றிருக்க முடியுமா?
என்றோ நடந்த சீக்கியப் படுகொலைக்கு (இந்திரா காந்தி கொலையுண்ட மறுநாள் டில்லியல் காங்கிரஸ் குண்டர்களால் நிகழ்த்தப் பட்டது), பிரதமர் மன் மோகன் சிங், தேர்தலின் போது சீக்கியர்களிடம் காங்கிரஸ் சார்பில் மன்னிப்புக் கேட்க வில்லையா? வோட்டுக்காக, எந்த விஷயத்தை தோண்டுவது, எந்த விஷயத்தைப் புதைப்பது என்று தீர்மானிக்க நீங்கள் யார்? இது மக்களுக்கு நீங்கள் இழைக்கும் பச்சை துரோகம் இல்லையா?
சோதனைகளை மட்டும், அது போன பீரியட் என்று சொல்லி ஒதுக்கி வைக்கும் நீங்கள், இன்றும் ஏன் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி (அதற்கப்புறம் நீங்கள் சொல்லிக் கொள்ளும் படி ஒரு சாதனையையும் செய்ய வில்லை என்பது வேறு விஷயம்) செய்த சாதனைகளை எல்லாம் சொல்லி, தேர்தல்களில் (கருமம், நூறு பேர் ஓட்டுப் போடும் உள்ளாட்சித் தேர்தலில் கூட, உங்களுக்கு சொல்லிக் கொள்ள அவற்றை விட்டால், வேறு விஷயம் சிக்க மாட்டேங்குது) வோட்டுக் கேட்கிறீர்கள்?

வடிவேலு காமடி செய்யாமல், மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு, ஒரு பொறுப்பான மூத்த காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பதில் சொல்ல முடியுமா பிரணாப் முகர்ஜி அவர்களே?

- கலைபிரியன்

Wednesday, March 16, 2011

சாதிக் பாஷா தற்கொலை மற்றும் ம.தி.மு.க புறக்கணிப்பு - கிழியும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் முகத்திரை...

தமிழகத்தின் இன்றைய தலைப்புச் செய்திகளாக இடம் பிடிக்கும் இரண்டு செய்திகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்தைப் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்துள்ளன.

முதலாவதாக, முன்னாள் மத்திய மந்திரியும், இந்நாள் திஹார் சிறைக் கைதியுமான, ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும் (அவரது பினாமி எனக் கருதப் படும்), ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ ஆல் விசாரிக்கப் பட்டவருமான சாதிக் பாஷாவின் தற்கொலையைப் பார்க்கலாம். "ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அப்ரூவராக மாறப் போகிறார்" என்றும் "இன்று தில்லிக்குச் செல்ல விமான டிக்கட் எடுத்து வைத்திருந்தார்" எனவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சாதிக் பாஷா திடீர் திருப்பமாகத் தனது படுக்கையறையில், இன்று காலை, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். ராசாவின் குடும்பத்தினர், அவர் மந்திரியாகப் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு துவங்கிய "கிரீன் ஹவுஸ்" கட்டுமான நிறுவனத்தில் பங்குதாரராகவும், நிறுவனத்தை நடத்தும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் இந்த சாதிக் பாஷா என்பதும், சில லட்சங்கள் முதலீட்டுடன் தொடங்கப் பட்ட இந்நிறுவனம், துவங்கிய மிகக் குறுகிய காலத்துக்குள், இன்று சுமார் 600 கோடி மதிப்புப் பெற்றது எனவும் செய்திகள் கசியத் தொடங்கியபோது, அனைவருக்கும் தலை சுற்றித் தான் போனது. அவ்வாறு சேகரிக்கப் பட்ட பணம் பெரும்பாலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் ராசாவுக்கு ஹவாலா முறையில் கையூட்டாகக் கொடுத்த பணம் என்று சிபிஐ சந்தேகக் கணை தொடுக்க, அதன் விசாரணை வளையத்துக்குள் சிக்கி ஒரு வழியாகத் தான் போனார் சாதிக் பாஷா.

ஒரு வேளை, இவர் தற்கொலை செய்து கொள்ளாமல் அப்ரூவர் ஆக மாறி இருந்தால், இன்னும் யார் யார் எல்லாம் இவ்விவகாரத்தில் சிக்கியிருக்கக் கூடும்? அப்படி ஆகாமல் போனதால், யார் யார் காப்பாற்றப் படுகிறார்கள்? இவர் தற்கொலை செய்து கொண்டதில், தங்களைக் காத்துக் கொள்வதற்காக, அதிகார வர்க்கத்தின் தூண்டுதல் ஏதாவது உள்ளதா? என்னதான் சட்டப் பூர்வமற்ற காரியங்களில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு அவர் வந்திருந்தாலும், அவரது மனைவிக்கும், இளம் குழந்தைகளுக்கும், ஒரு குடும்பத் தலைவனாக இருக்க வேண்டிய பொறுப்பை அவர் இழந்ததற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி...

தி.மு.க சம்மந்தப் பட்ட பினாமி விவகாரங்களில் இது ஒன்றும் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன் ஸ்டாலினின் பினாமி என்று வர்ணிக்கப் பட்ட ரமேஷ் கார்ஸ் "ரமேஷ்", மிகக் குறுகிய காலத்துக்குள் தொழில்முறையில் அசுர வளர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். திடீர் என்று, என்ன ஆனதோ, ஏதானதோ, குடும்பத்துடன் (பச்சிளங்குழந்தை உட்பட) விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். தலைவரின் ஒரு வாரிசுக்காக அன்று ரமேஷ் பலிகடா ஆக்கப் பட்டார் என்றால், இன்று சாதிக் பாஷாவும் தலைவரின் இன்னொரு வாரிசுக்காக பலிகடா ஆக்கப் பட்டிருக்கிறார் என்றல்லவா அர்த்தம்? இந்த அவலங்களுக்கு முடிவே இல்லையா?

அரசியல் அதிகாரம் நிரம்பியவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்களுக்குத் தேவை எனும் பொழுது யாரை வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஆபத்து நேரும்போது இவ்வாறு அவர்கள் குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்துவது என்பது பச்சை சந்தர்ப்பவாதம் இல்லையா? என்ன தான் தீய வழியில் செல்வம் சேர்க்கத் துணை போனவர்கள் என்றாலும், எய்தவன் இருக்க அம்பை மட்டுமே பதம் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

பினாமிகளாக இருப்பவர்களும் தொலை நோக்குப் பார்வை அற்றவர்களாக இருப்பதுதான், இதில் வேதனை. சில ஆயிரம் கையில் இருக்கும் போது இவர்கள் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை, சில லட்சங்கள் சில கோடிகள் கையில் எளிதாகப் புரள ஆரம்பிக்கும் போது பஞ்சாய்ப் பறந்துவிடுகின்றது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். சிபிஐ, உச்சநீதிமன்றம் போன்ற தனி அதிகாரம் படைத்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்.

இரண்டாவது, தனது நீண்ட நாள் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க வைப் புறக்கணித்துவிட்டுத் தன்னிச்சையாகத் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தி. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியும், சினிமாவில் நடித்த விளம்பரத்தையும், சாதியப் பின்னணி கொண்டும் கட்சி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் முதல் மரியாதையுடன் தொகுதிப் பங்கீட்டின் போது பந்தி பரப்பிவிட்டு, வெற்றி, தோல்வி கருதாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கடைமட்ட அ.தி.மு.க தொண்டனைவிட அதிகமாகத் தன் புகழைப் பரப்பி வந்த பிரசார பீரங்கி, கொள்கைக் குன்று, புரட்சிப் புயல் வைகோ அவர்களின் கட்சியான ம.தி.மு.க வைக் கேவலமான முறையில் உதாசீனப் படுத்திவிட்டுத் தேர்தல் களம் காணப் புறப்பட்டுவிட்டார் அம்மையார். யாரும் தன்னுடன் கூட்டு வைக்கவே அஞ்சும் காலத்திலும், தன்னால் அவமானப் பட்ட பின்னரும், தனது உற்ற தோழமையை நல்கி உழைத்த ஒரு உன்னதமான மனிதருக்கும், தோல்விகளை மட்டுமே சுவைத்துக் களைத்தும், அவர் பின்னால் விலை போகாமல் நிற்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் இன்னும் வசந்த காலம் என்பது வெகு தூரம் என்றாகிவிட்டது. இது, ஏற்கனவே இது போன்ற புறக்கணிப்புக்களுக்குப் பெயர் போன, இன்றைய அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்துக்கு மற்றும் ஓர் உதாரணம் என்பதில் ஐயமில்லை.

இது போன்ற சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்குத் தான் வாக்காளர்களின் உள்ளங்களிலும் இடம் என்பது தான் இன்றைய ஜனநாயகத்தின் அவலமான நிலையாகிவிட்டது.

மற்ற ஈன அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல், கொள்கை மாறாமல் முழக்கமிட்டுவந்த வைகோ அவர்கள், இனியேனும் மற்றவர்களைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தன் கட்சியின் அங்கீகாரத்துக்கும், கட்சியினரின் பதவிகளுக்கும் ஒரு சில சமரசங்களைச் செய்து கொள்ள அவர் இனியும் தயங்கினார் என்றால், இன்றைய நிலையில், இனிமேலும் கட்சியை நடத்துவது மிகவும் கடினம்.

அதே சமயம் திருந்துவதற்குத்  திரும்பத் திரும்ப சந்தர்ப்பம் கிட்டினாலும், அவற்றைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு தான் அரசியல் நடத்துவேன் என்று அம்மையார் அவர்களும் தொடர்ந்து தனது செய்கைகள் மூலமாக நிரூபிப்பாரே ஆனால், அவரது கட்சிக்கும் அது நல்லதல்ல என்பதை அவரும் என்றாவது உணரத் தான் வேண்டும்.

- கலைபிரியன்

பெரியாரின் பகுத்தறிவும் இன்றைய அரசியல் சூழ்நிலையும்...


பெரியார் பகுத்தறிவு குறித்து, ஒரு முறை, இப்படிப் பேசி இருக்கிறார் - "பகுத்தறிவு என்றால் என்ன? அறிவும் பகுத்தறிவும் வெவ்வேறாக இருக்க முடியாது. புலப் படுகின்ற விஷயத்தை அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து வல்லமை அடையும் பொழுது பகுத்தறிவு பிறக்கிறது" என்று. அதற்கு உதாரணமாக ஒரு கதையையும் கூறுகிறார் - குருவிடம் சீடன் வந்து கேட்கிறான், "குருவே, அறிவு என்றால் என்ன, விதி என்றால் என்ன?" என்று. குரு சொல்கிறார், "நான் சொல்வதைச் செய். பிறகு உனக்கு புலப் படும்", என்று. முதலில் ஒரு காலைத் தூக்கச் சொல்கிறார். அவ்வாறே தூக்கிவிட்டு, இன்னொரு காலால் நிற்கிறான் சிஷ்யன். அடுத்ததாக, அந்தக் காலையும் தூக்கச் சொல்கிறார். குரு சொல்வதைத் தட்ட முடியுமா. அதையும் அவன் எம்பித் தூக்க, "தடால்" என்று கீழே விழுகிறான். இப்போது, குரு சொல்கிறார், "ஒரு காலைத் தூக்கினால், இன்னொரு காலால் நிற்க முடியும் என்று உனக்குத் தெரிந்திருக்கிறது. இது அறிவு. இன்னொரு காலைத் தூக்கினால், நிற்க முடியாது என்று தெரிந்தும், நான் சொல்லியதால் செய்தாய் அல்லவா, இது விதி" என்று.

பெரியாரின் பாசறையில் உருவாகிப் பிளவு கண்டு உதித்த கட்சிகள் தான் தமிழ் நாட்டைப் பல்லாண்டு காலமாக ஆண்டு வருகின்றன. அவை தான் வரும் தேர்தலிலும் பிரதானக் கட்சிகளாகப் போட்டி போட இருக்கின்றன. அதில் ஒன்று பெரியாரின் பகுத்தறிவு சார்ந்த விஷயங்களைக் கை கழுவி வெகு நாட்கள் ஆகிவிட்டன. அதனை வெளிப்படியாகப் பிரகடனம் செய்யாத ஒன்றே குறையாகப் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி. மற்றொன்று, இன்றைய ஆளும் கட்சி. தனக்கு வசதிப் படும் போது பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதும், இல்லாத போது, இலை மறை, காய் மறையாக மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி முத்தெடுப்பதுமாய் சிறப்பாகக் கட்சி/ஆட்சி நடாத்திக் கொண்டிருக்கிறது. வருணாசிரமத்தை முற்றும் எதிர்த்த பெரியாரின் விரல் பற்றி அரசியல்/திராவிடம் கற்றதாகப் பெருமை பேசிக்கொள்ளும் அதன் தலைவர், கட்சியையும் ஆட்சியையும் வாரிசுகளுக்கு உயில் எழுதி வைக்காதது ஒன்று தான் பாக்கி. இது வருணாசிரமம் இல்லையா என்று யாராவது கேட்டால், அவர்களை "ஆரியவாள்" என்றும் "பார்ப்பன ஏகாதிபத்தியம் பரப்புவோர்" என்றும் எள்ளி நகையாடுவதில் மட்டுமே அவரது முத்தமிழ் மூளை இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதை விட, யாரை ஆட்சியில் மறுபடி அமர்த்தக் கூடாது என்று தான் பார்க்க வேண்டிய அவல நிலை வாக்காளர்களுக்கு. அவர்களுக்கும் பெரியார் சொல்லிய கதை ஒரு வகையில் பொருந்தும். ஸ்பெக்ட்ரம் தொடங்கி, ஊழல், வாரிசு அரசியல், கட்டப் பஞ்சாயத்து, மணற்கொள்ளை, நில அபகரிப்பு என எல்லா விஷயங்களையும் டீக்கடை தொடங்கிப் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்சாதனையூட்டப் பட்ட அறைகள் வரை பின்னிப் பெடல் எடுக்கும் அளவுக்கு அரட்டைக் கச்சேரிகளில் வல்லவர்களான வாக்காளர்கள், அறிவு படைத்தவர்கள் தான். இருந்தாலும், வாக்களிக்கும் போது, வாங்கிய பணத்தையும், வேட்பாளரின் சாதியப் பின்னணியையையும், தேர்தல் அறிக்கையின் இலவசக் கவர்ச்சித் திட்டங்களையும், இன்ன பிற விஷயங்களையும் எண்ணித் தங்களுடைய ஓட்டை வீணடிப்பது தான் அவர்களின் விதி.

- கலைபிரியன்

Monday, March 14, 2011

அகவை கடந்து நிற்கும் அற்புதம்!!!


நடை தளர்ந்து, முடியில் நரை விழுந்தும்...
திடம் குறைந்து, விழியில் திரை படர்ந்தும்...
வாடா மலர் போல், வளமாய் இருப்பதுவே...
அகவை கடந்து நிற்கும் - அற்புதக் காதல்!!!

- கலைபிரியன்

Friday, March 11, 2011

மனிதனுக்கும் மகாத்மாவுக்கும் என்ன வித்தியாசம்?

இன்று சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்கும் பொது எனக்கு தலைப்பில் உள்ள கேள்விக்கு விடை கிட்டியது... என்னுடைய அறிவுக்கு எட்டிய சில தகவல்களையும் உதாரணங்களாக இணைத்துப் பதிவு செய்ய முற்பட்டுள்ளேன்...

"எவன் ஒருவன் இன்பத்தையும் துன்பத்தையும் சம நிலையில் வைத்துப் பார்க்கப் பழகுகிறானோ, அவனே வாழ்வில் உன்னத நிலையை அடைகிறான்" என்று பகவத் கீதை கூறுகின்றது... இந்தக் கருத்துக்கு எடுத்துக் காட்டுக்களாக கீழ் வரும் விஷயங்களைப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில், கம்பன் மிக அழகாக இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்...
"மேனி மெய்த்திருப் பதம் மேவு..." - இது தயரதன் "ராஜ்ஜியம் உனக்கே, அரச கோலம் பூண்டுகொள் மகனே..." என்று ராமனிடம் சொல்லவதாகக் கம்பன் எழுதுவது...
"இத் திருத் துறந்து ஏகு..." இது சித்தி கையேயி "ராஜ்ஜியம் உனக்கில்லை, இக்கோலத்தைத் துறந்து காட்டுக்குச் செல்" என்று ராமனிடம் சொல்வதாகக் கம்பன் எழுதுவது...
இந்த இரு செய்திகளைக் கேட்கும் போதும் ராமனுடைய முகம் எவ்வாறு ஒரே போல் சலனமில்லாமல் இருந்ததாம் தெரியுமா? (இங்கு தான், கம்பன் கற்பனை வளத்தையும் விஞ்சிய, ஒரு உன்னதக் கவிஞனாய் நிற்கிறான்) "சித்திரம் மலர்ந்த செந்தாமரை அன்ன..." இரண்டு நிலையிலும் ராமனின் முகம் ஓவியத் தாமரை போல இருந்தது என்கிறார் கம்பர்... எப்போதும், மென்மையான, சலனமில்லாத தாமரை போன்ற முகமுடையவன் ராமன் என்று மட்டும் கூடச் சொல்லியிருக்கலாம் கம்பநாடன்... உண்மையான தாமரை மலர் கூட வாடி விடும்... ஆனால், ஓவியத்தில் எழுதப் பட்ட தாமரை எப்படி வாடாமல் என்றும் ஒரே நிலையில் இருக்கிறதோ, அவ்வாறே, ராமனின் முகமும் இரண்டு நிலையிலும் மாற்றம் இல்லாமல் ஒளி பொருந்தியதாக இருந்தது என்பதை, இதனை விட அழகாக யாரால் இயம்ப முடியும்?

இதனையே, கண்ணதாசன் பின்வருமாறு தனது திரை இசைப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார்...
"... புகழ்ந்தால் எனக்குப் புல்லரிக்காது
இகழ்ந்தால் என் அகம் உள் எரிக்காது
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் புழுதி வாரித் தூற்றட்டும்..."
ராமனையும் ராமாயணத்தையும் நம்பாதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதனால், காமராஜர் வாழ்வில் நடந்த இரு சம்பவங்களை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்... ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகியதும், காமராஜர் முதல்வராக அமரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அகில இந்தியக் காங்கிரஸ்சின் விருப்பமும் அதுவே. காமராஜரிடம் அவ்விருப்பத்தை எடுத்துச் செல்கிறார்கள். அவர், சற்றும் சலனமில்லாமல், தான் பதவி வகிக்க சம்மதிக்கவேண்டுமானால் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிப் பட்டியலிட்ட கோரிக்கைகள் - "ராஜாஜி அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் இருந்தார்கள். என் அமைச்சரவையில் எட்டு பேர் தான் இருக்க வேண்டும். அவருக்குக் கொடுங்கள், இவருக்குக் கொடுங்கள் என்று சிபாரிசு செய்யக் கூடாது. ராஜாஜியை எதிர்ப்பவர்களை அமைச்சரவையில் வைத்திருக்க மாட்டேன்..." என்று மேலும் சில உன்னதமான கோரிக்கைகளை வைக்க, அவை ஏற்கப் பட்டு முதல்வராகிறார். அதே போல 1967 பொதுத் தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க கூட்டணி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ்சை வீழ்த்துகிறது. மன்றாடியார், கக்கன் போன்ற மூத்த அமைச்சர்கள் தொற்றதோடல்லாமல், விருதுநகர் தொகுதியில் காமராஜரே தோற்றுப் போகிறார் (தி.மு.க வைச் சார்ந்த சீனிவாசன் என்ற 28 வயது இளைஞரிடம்). வீட்டுக்குள் வானொலியில் தேர்தல் முடிவுகளைக் கேட்ட படி சலனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்த காமராஜரிடம், தொண்டர் ஒருவர் ஆற்ற மாட்டாமல் சொல்கிறார் - "அய்யா, நீங்க தோத்துப் போயிட்டத வேட்டுப் போட்டுக் கொண்டாடுறாங்க... எங்களால பொருக்க முடியல..." என்று. அதற்குக் காமராஜர் சிரித்துக் கொண்டே சொல்கிறார் - "எலேய், நான் ஜெயிச்சுருந்தா, நீ வேட்டுப் போட்டிருப்பேல்ல... அவனுவ ஜெயிச்சுட்டானுவ, வேட்டுப் போடுரானுவ... போய் வேலையைப் பாரு வே..." என்று. பதவி தேடி வரும் போதும், தோற்றுப் போய், பதவியைத் துறக்கும் போதும் ஒரே மாதிரியான சலனமில்லாத பக்குவம், அவர் போல், வேறு யாருக்கு வரும். அதனால் தான், அவருக்குப் பின்னால் இன்றுவரை, யாருக்கும் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க இயலவில்லை. அவரது பெயரைக் கூறி அரசியல் செய்யும், இன்றைய அரசியல்வாதிகள் யாராவது, அவரைப் போல, பதவி வரும் போதும், போகும் போதும் சம நிலையில், தங்களை வைத்துக் கொள்வார்களா?

ராமபிரான் வழியில், கண்ணதாசன் பாமரனுக்குப் புரியவைத்த, அந்த உன்னத நிலையை, அவர் அடைந்ததனாலேயே, கர்ம வீரர் என்று இன்றும் காமராஜர் புகழை நாம் பாடிக் கொண்டிருக்கிறோம்.

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்று ஏசுபிரான் விவிலியத்தில் கூறுகிறார். தவறு செய்பவர்களுக்கு மறு வாய்ப்பாகப், பாவ மன்னிப்பு வழங்கும் பழக்கம் இன்றும் கிறித்தவ தேவாலயங்களில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

புத்தர் வாழ்வில் கூட, இதற்கு ஒத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு ஊரில், புத்தர், தன் சீடர் ஆனந்தர் என்பவருடன் சென்று கொண்டிருக்கிறார். அந்த வழியில் வந்த ஒரு விறகுவெட்டிக்கு புத்தர் மீது ஏனோ, அளவு கடந்த கோபம். கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அவன், புத்தரை வழி மறித்து, அவர் முகத்தின் மீது காரி உமிழ்ந்து விடுகிறான். புத்தர், எந்த வித சலமுமின்றி அவனிடம் பரிவாகக் கேட்டார் - "ஏனப்பா, உனக்கு என்னிடத்தில் ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று. ஆனந்தன் சற்றே உணர்ச்சிவசப்பட்டு, "குருவே, அவனை என்னிடத்தில் விடுங்கள், நான் கேட்டுச் சொல்கிறேன்..." என்று சொல்ல, புத்தர் சொல்கிறார் - "ஆனந்தா, அவர் என்னிடம் ஏதோ சொல்லப் பிரியப் பட்டிருக்கிறார். அதனைச் சொல்ல அவரது மொழியில் வார்த்தை இல்லாத பலவீனம். இவ்வாறு செய்து விட்டார். மொழியின் பிழைக்கு, இவர் என்ன செய்வார், பாவம்..." இதைச் சொல்லிவிட்டுக் கருணை பொங்கும் அவருடைய பார்வையை அவன் மீது பதித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். வீடு சென்ற விறகு வெட்டிக்கு இரவு முழுக்க உறக்கம் வரவில்லை. எப்படிப் புரண்டு படுத்தாலும், புத்தருடைய கருணையான முகமே, அவனை ஆட்கொண்டிருக்கிறது. மறுநாள் காலை, புத்தர் ஆற்றங்கரையில் குளித்துவிட்டுத் திரும்புகையில், வேக வேகமாக ஓடி வந்து, அவர் காலடியில் விழுந்து கால்களைப் பற்றிக் கொண்டு கதறி அழுகிறான் அந்த விறகுவெட்டி. இதனை வியப்பாகப் பார்த்த ஆனந்தனிடம், புத்தர் மறுபடி சலனப் படாமல் சொல்கிறார்... "ஆனந்தா, அவர் என்னிடம் ஏதோ சொல்லப் பிரியப் பட்டிருக்கிறார். அதனைச் சொல்ல அவரது மொழியில் வார்த்தை இல்லாத பலவீனம். இவ்வாறு செய்து விட்டார். மொழியின் பிழைக்கு, இவர் என்ன செய்வார், பாவம்...". இதைக் கேட்ட விறகுவெட்டி, எழுந்து, "அடியேனை மன்னித்தீர்கள் என்று தயவு செய்து தாங்கள் திருவாய் மலரவேண்டும்" என்று அழுது கொண்டே கேட்கிறார். புத்தர் பதிலுரைக்கிறார் - "நீ நேற்றிருந்த நிலையில் இன்றில்லை. இன்று நீ பிழையே செய்யாமல் இருக்கும் போது, நேற்றே முடிந்து போன ஒரு விஷயத்திற்காக உன்னை நான் மன்னிக்க வேண்டிய அவசியம் எழ வில்லை" என்று.

புத்தர், ஏசு போல தன்னைத் துன்புருத்தியவர்களைக் கூடத் தனது அஹிம்சை வழியில் கவர்ந்து, நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் தேச பிதா மகாத்மா காந்தி என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதனாலேயே, அவரை மகாத்மா என்று அழைத்து வணங்குகிறோம்.

இன்னா செய்தாரை ஒருத்தர், அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்

என்று வாய் மொழிகிறான் வள்ளுவன்.

அன்னை தெரசா, தன்னுடைய கருணை இல்லத்துக்கு நன்கொடை வேண்டி ஒரு பணக்காரரிடம் கை ஏந்துகிறார். அந்தச் சீமான், வெறுப்பாய்க் காறி அன்னையின் கையில் உமிழ்ந்து விட, அந்தக் கையைப் பின்னால் வைத்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டியவாறே அன்னை கேட்கிறார் - "பரவாயில்லை. அதனை எனக்காக வைத்துக் கொள்கிறேன், கருணை இல்லத்துக்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள்..." என்று. கோபத்தில் அந்தச் சீமானின் முகத்தில் அறைந்திருந்தால் கூட, இவ்வளவு தெளிவாக அன்னையின் நோக்கத்தை அவரால் புரிந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆழமாக அன்னையின் கருணை முகம், இச்செயல் மூலம் அவரது ஆழ் மனதில் பதிந்திருக்கும்.

புத்தன் வழி, ஏசு வழி, ராமபிரான் வழி, வள்ளுவன் வழி - கீதை போதித்த உன்னத நிலையை அடைந்ததன் மூலம், நமது சம காலத்தில் இல்லாவிட்டாலும், நாம் நன்கு அறிந்த தலைவர்களான அண்ணல் காந்தியடிகளும், கர்ம வீரர் காமராஜரும், அன்னை தெரசாவும் எப்படி உன்னத நிலையை அடைந்தார்கள் என்பது மேற்குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல் புலப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

அளவுக்கு அதிகமாக இனிப்பு உட்கொண்டால், சர்க்கரை நோய் வருகிறது. அளவுக்கு அதிகமாய் உப்பை உட்கொண்டால், ரத்த அழுத்தம் வருகிறது. மருத்துவர் அறிவுரைப் படி நாமும் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறோம். ஆனால், அளவுக்கு அதிகமான இன்பத்தையும், துன்பத்தையும் மட்டும் ஏன் நம்மால் உட்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இனியாவது முயற்சி செய்யலாமே?

- கலைபிரியன்

Thursday, March 10, 2011

திருவாசகத்தின் சிறப்பு (என்னுடைய முதல் ஆன்மிகம் சார்ந்த படைப்பு)...


என்னடா, ஒரு கனமான சப்ஜெச்டத் தொடரானே, இவன் வயசானவனோன்னு தயவு செய்து நினைத்து விடாதீர்கள், நண்பர்களே. நான் கேள்விப் படுகிற விஷயங்களில், என்னைக் கவர்ந்தவற்றை, எல்லோருக்கும் புரியுமாறு பதிவு செய்ய விரும்பும் ஒரு சாதாரண வலைப் பதிவன் நான்... விஷயத்துக்குப் போவோமா?

திருவாசகம் என்பது ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தேடத் துணை புரியும் ஒரு சிறந்த படைப்பு. அதனால் தானோ என்னவோ, அதன் பால் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. அதன் முக்கியத்துவம் தெயரியாத வயதில், சிறுவனாக இருக்கும் பொது தேவாரம் கற்ற எனக்குத் சிற்சில திருவாசகப் பதிகங்களும் போதிக்கப் பட்டன. இன்றளவில், அவை என் வழக்கமான பயிற்சியில் இல்லாவிட்டாலும் கூட, அதன் சிறப்பை உணரும் சந்தர்ப்பம், இணைய வானொலி வாயிலாக சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்கும் போது கிட்டியது. அப்போது தான் எண்ணிக் கொண்டேன், நான் சிறு வயதில் அவற்றைக் கற்று ஓத, எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று. அதனாலேயே, நான் தெரிந்து கொண்ட திருவாசகத்தின் சிறப்பை, சற்று விரிவாகப் பதிவு செய்ய ஆவல்.

"சரி, சரி, உன்னப் பத்தி அளந்தது போதும்"ன்னு சொல்றீங்க. கேட்குது. இதோ, வந்தேன்...

தெரிந்த நிலையிலிருந்து, புரிந்த நிலையின் ஊடாக, உணர்ந்த நிலையை அடையும் பயணமே வாழ்க்கை. இதற்கான ஒரு சிறந்த கையேடே, திருவாசகம். மேலோட்டமாகப் பார்த்தால், இது புரியாது. ஒரு உதாரணத்துடன் பார்ப்போமே:

வீட்டில் ஒரு குழந்தை, பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அம்மா அலுவல் முடிந்து வரும் நேரம். வாசலில் சத்தம் கேட்டவுடன், ஆவலாக எட்டிப் பார்க்கிறது குழந்தை. கவனக் குறைவில், பொம்மை கை நழுவி விழுந்து உடைந்துவிடுகிறது. மிகவும் பிடித்த பொம்மை ஆதலால், குழந்தை அழ ஆரம்பித்து விடுகிறது. அலுவல் செய்த அலுப்புடன் உள் நுழைகிற தாய், "என்னடி ஆச்சு, நீ எப்பவுமே இப்படித்தான், எதுலையுமே கவனம் இல்லையே... இரு இரு, வர்ரேன்..." என்று, தன் மேலாளர் மீதிருக்கும் கோபத்தையும் சேர்த்துக் குழந்தை மீது காட்டிக் கடிந்து கொண்டவாரே, கைப்பையை மேசை மீது வைத்து விட்டு, முகம் கழுவச் சென்று விடுகிறார். முகம் கழுவுகையில், ஒரு நினைப்பு, "ச்சை, ரொம்பத் திட்டீட்டமோ? நம்ம பண்ணாததையா, பாவம் அது பண்ணீருச்சு..." என்று தாய்க்கே உரித்த கரிசனம் தொற்றிக் கொள்கிறது. அதே சமயம், பிடித்தது உடைந்ததை எண்ணி அழத் தொடங்கிய குழந்தை, அம்மா திட்டியதை எண்ணி, "நாம் ஏதோ தவறைச் செய்து விட்டோம்" என்பது புரிந்தும், அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், மேலும் கேவிக் கேவி அழத் தொடங்கியது. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு. உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த அம்மா, "செல்லம்... இங்க பார்ரா, இதுக்குப் போயா அழுவாங்க... பரவாயில்லடா... வேற பொம்மை வாங்கித் தர்ரேன், அம்மா... இங்க பாரு, அம்மா உனக்கு என்ன வாங்கீட்டு வந்துருக்கேன்னு... டட்டடோய்ன்..." என்று தன் கைப்பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்ட, சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு அழுகை கலந்த சிரிப்புடன் அதனைப் பற்றிக் கொண்டு அம்மாவை முத்தமிட்டது குழந்தை.

விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அம்மா வாங்கிக் கொடுத்த (தனக்கு மிகவும் பிரியமான) பொம்மை உடைந்தது தெரிந்து அழுகிறது. தான் தவறு செய்துவிட்டோம், இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை,  அம்மா கடிந்து கொண்டதன் மூலமாகப் புரிந்து கொள்கிற அந்தக் குழந்தை, வாழ்க்கையில் அனுபவிக்க இன்னும் எவ்வளவோ இருக்க, அந்த பொம்மையையே ஏன் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை, அம்மா சமாதானப் படுத்தியவுடன் உணர்ந்து கொள்கிறது. இந்த உதாரணத்தில், அந்தக் குழந்தையைத் தாய் எப்படித் தெரிந்த நிலையில் இருந்து, புரிந்த நிலை ஊடாக, உணர்ந்த நிலைக்குக் கொண்டு வருகிறாரோ, அப்படித் தான், நாம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும். அதற்குத் திருவாசகம் ஒரு சிறந்த கையேடாக விளங்குகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த ஒரு சம்பவம். ஜி. யூ. போப், என்பவர் ஐரோப்பாவிலிருந்து கிறித்துவ மதம் பரப்பும் போதகராகத் தமிழ் நாட்டுக்கு வருகிறார். தமிழ் இலக்கியத்தை ஆர்வத்துடன் கற்ற அவர் திருவாசகத்தைப் படிக்க, அது அவரை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு சமயத்தில், யாருக்குக் கடிதம் எழுதினாலும், திருவாசகத்திலிருந்து இரண்டு வரிகளை எழுதி, அதன் மொழி பெயர்ப்பையும் எழுதி, அதன் பின்னேயே கடிதத்தை எழுதும் அளவுக்கு ஆர்வம் கொள்கிறார். இருந்தாலும், தனக்கிடப் பட்ட பணியான கிறித்தவ மத போதனையையும் செவ்வனே செய்து வருகிறார். அவரின் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த மற்றவர்கள், மேலதிகாரிகளான பிஷப்களிடம் இதனைப் பற்றிக் குறை கூற (நம் மத்தைப் பரப்ப வந்தவர், இன்னொரு மதம் சார்த்த இலக்கியப் படைப்பைத் தழுவிக் கொண்டிருக்கிறாரே, என்று), விசாரணைக்காக ஒரு பிஷப்பை நியமித்து, அவரிடம் விளக்கம் கேட்டுச் சொல்லும்படி பணிக்கப் படுகிறார், அந்த பிஷப். பிஷப் தமிழகம் வந்து இவரிடம் விளக்கம் கேட்க, இவர்... "அமருங்கள், உங்களுக்கும் திருவாசகத்தின் சிறப்பை விளக்குகிறேன்" என்று சொல்லி, ஒரு மணி நேரம் விளக்குகிறார். அதனைக் கேட்டுச் சிலிர்த்துப் போன பிஷப், தன்னை நியமித்த மேலதிகரியான பிஷப்பிடம் என்ன சொல்கிறார் தேரியுமா - "வாழ்க்கை பற்றிய, இவ்வளவு அருமையான சைவ இலக்கியப் படைப்பாகிய திருவாசகத்தைக் கரைத்துக் குடித்த பிறகும், போப், சைவத்தைத் தழுவாமல், இன்னும் கிறித்தவராகவே இருப்பதற்கே நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்..." என்று. அப்பேற்பட்ட, மாற்றாரையும் போற்ற வைக்கும் வல்லமை படைத்த படைப்பு, திருவாசகம்.

வீட்டில் உள்ள வயசானவர்களுக்கு, சின்னவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எங்கே போகிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள அதீதமான ஆர்வம் ஏற்படுவதை, நாம் எல்லோரும் பார்க்கிறோம். (அவர்களது அக்கறை மிகுதி கூட, இதற்குக் காரணமாக இருக்கலாம். தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கருத்தை வலியுறுத்துவதற்காகவே, இதனை ஒரு உதாரணமாக மட்டுமே பதிவு செய்கிறேன்). சமயத்தில், அவ்வளவு வயதாகாதவர்களுக்குக் கூட அடுத்தவர்கள் பற்றிய ஆர்வமிகுதி இருக்கக் கண்டிருக்கிறோம். மொத்தத்தில், அடுத்தவர்கள் பற்றி நாம் அறிய முனைகிற தீவிரத்தில், பத்தில் ஒரு பங்கு நம்மை அறிவதற்குப் பயன்படுத்தினால் கூட வாழ்க்கையையையும், அதனைச் சுற்றி இருக்கும் மாயையையும், மிகவும் எளிதில் புரிந்து கொண்டுவிட முடியும். அந்தப் புரிதல் பெற, அனைவரும் நாட வேண்டிய அருமையான படைப்பு - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். நமச்சிவாயம்...

- கலைபிரியன்

Wednesday, March 9, 2011

விவாதக் களம் I... வள்ளுவன் பெண்ணுரிமையில் வரலாற்றுப் பிழை செய்துவிட்டானா?

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"

என்று ஆண்பாலைச் சுட்டி வள்ளுவன் எழுதிய குறளின், அதே பொருளுக்கொத்த பாரதியின் பாடற் பகுதி...

"... மெச்சி உனை ஊரார் புகழும் போதே, என் மேனி சிலிர்க்குதடி..."

எனப் பெண்டிரைச் சுட்டிப் பாடியிருக்கிறான் முண்டாசுக் கவிஞன்.

வள்ளுவனின் பிழையைச் சரி செய்யவே இப்பதிவை பாரதி செய்தானா?

வள்ளுவனுக்கென்ன பாலைக் குறிக்காமல் கருத்தைப் பதிவு செய்ய வார்த்தைக்கா பஞ்சம்? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது... உங்கள் கருத்துக்களை இவ்விடுகையின் மறுமொழியாகப் பதிவு செய்யுங்களேன்?

- கலைபிரியன்

கேள்விப்பட்டது...

சமீபத்தில் ஒரு சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது... அதில் நான் கேட்ட இரண்டு மிகச் சிறந்த கவிகளின் வாழ்வில் ஏற்பட்ட மிக சுவாரஸ்யமான சம்பவங்களை இவ்விடுகையில் பதிவு செய்ய விழைகிறேன்...

1. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இவர்,  இளம் பிராயத்தில், கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். அவர்கள் இல்லத்தில் ஒரு பழக்கம். யாருக்கேனும் பிறந்த நாள் என்றால், வீட்டுக் கூடத்தின் நடுவே வைக்கப் பட்டுள்ள ஏட்டில், எல்லோரும் தத்தம் வாழ்த்துக்களை, பிறந்தநாள் கொண்டாடுவோருக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரின் பிறந்த நாள் அன்று அவரது தாயார் என்ன எழுதினார் தெரியுமா? - "ஆண்டவா, எனது மற்ற பிள்ளைகள் எல்லாம் மருத்துவர், வக்கீல், பொறியாளர் என ஏதோ வகையில் பொறுப்பானவர்களாக திகழ்கிறார்கள். இவன் மட்டும் ஏனோ கவிதை. கவிதை என்று பொழுதைக் கழிக்கிறானே... இவன் விரைவில் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய அருள் புரியுங்கள், இறைவா..." என்று தனது விருப்பத்தையும், வேண்டுதலையும், வாழ்த்தையும், ஒரு கவலையான தாயின் கோணத்தில் பதிவு செய்திருந்தார்...

இது நடந்து கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், நமக்கு அந்தக் குடும்பத்திலிருந்து நீங்காமல் நினைவில் இருப்பவர், இந்தக் கவி மட்டும் தான். அந்தக் குடும்பத்தில், மற்றவர்கள் அன்றைய நிலையில் எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்திருந்தாலும், அவர்கள் யாரையும் நாம் நினைத்துக் கூடப் பார்க்க வாய்ப்பில்லை. "உனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை, விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி, மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் இல்லாமல், உன்னுடைய மனசாட்சியின் படி, பின் தொடர்ந்து, முயற்சி செய்து நிறைவேற்றுவாயாயின், அதுவே சுயதர்மத்தின் அடிப்படையில் நீ வாழ்பவன் என்பதற்கு அடையாளம்" என்ற கீதோபதேசத்துக்கேற்ப வாழ்ந்த அந்தக் கவி...

இரண்டு நாடுகளுக்குத் தேசிய கீதம் படைத்த, (ஆம் - உலகில் வேறு யாருக்குமே இல்லாத புகழ் இவருக்கு உண்டு - இந்தியாவுக்கும், வந்காளதேசத்துக்கும், இவர் எழுதிய பாடல்கள் தான் தேசிய கீதங்கள்), "ரபீந்திரநாத் தாகூர்"...

2. இளம் வயதில் மறைந்தவர் இவர். இவரது மனைவி, பின்னாளில் எழுதிய சுயசரிதையில் இவர்களது வாழ்வில் நிகழ்ந்த, ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பதிவு செய்கிறார். இருவரும் திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலைக்குச் செல்கிறார்கள். கவி சற்று உணர்ச்சி (எவ்வித உணர்ச்சியாக இருந்தாலும்) மிகுதியானவர். புலிக் கூண்டுக்கு அருகில் அவர்கள் செல்கையில், புலி தூங்கிக் கொண்டிருந்தது. நமது கவி அதனருகில் சென்று, "நீ காட்டுக்கு ராஜா, நான் நாட்டுக்கு ராஜா... ஹை... ராஜாவுக்கு ராஜ தொட்டுப் பேசிக்கொள்ளலாமா..." என்று கூண்டுக்குள் கை விட்டுத் தொடப் போனார்... மனைவிக்கு வியர்த்துப் போனது... அவரிடம் பயம் வேறு... மெதுவாக அவரிடம்.. "அதெல்லாம் வேண்டாமே, எதனா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போறது..." என்று சொல்லியிருக்கிறார்... "நீ சும்மா இரு..." என்று செல்லமாகக் கடிந்து கொண்டு, தொடும் தன் முயற்சியைத் தொடர்ந்தார் கவி... மனைவி தன் மனதுக்குள்ளேயே எண்ணிக் கொண்டாராம் - "அய்யோ, ஆண்டவா... இவருக்கு இல்லா விட்டாலும், அந்தப் புலிக்காவது நல்ல புத்தியைக் கொடு" என்று...

பதிவு செய்தவர் - "செல்லம்மாள் பாரதி" கவி - "மகாகவி சுப்ரமணிய பாரதி"

- கலைபிரியன்