வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, March 16, 2011

சாதிக் பாஷா தற்கொலை மற்றும் ம.தி.மு.க புறக்கணிப்பு - கிழியும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் முகத்திரை...

தமிழகத்தின் இன்றைய தலைப்புச் செய்திகளாக இடம் பிடிக்கும் இரண்டு செய்திகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்தைப் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்துள்ளன.

முதலாவதாக, முன்னாள் மத்திய மந்திரியும், இந்நாள் திஹார் சிறைக் கைதியுமான, ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும் (அவரது பினாமி எனக் கருதப் படும்), ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ ஆல் விசாரிக்கப் பட்டவருமான சாதிக் பாஷாவின் தற்கொலையைப் பார்க்கலாம். "ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அப்ரூவராக மாறப் போகிறார்" என்றும் "இன்று தில்லிக்குச் செல்ல விமான டிக்கட் எடுத்து வைத்திருந்தார்" எனவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சாதிக் பாஷா திடீர் திருப்பமாகத் தனது படுக்கையறையில், இன்று காலை, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். ராசாவின் குடும்பத்தினர், அவர் மந்திரியாகப் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு துவங்கிய "கிரீன் ஹவுஸ்" கட்டுமான நிறுவனத்தில் பங்குதாரராகவும், நிறுவனத்தை நடத்தும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் இந்த சாதிக் பாஷா என்பதும், சில லட்சங்கள் முதலீட்டுடன் தொடங்கப் பட்ட இந்நிறுவனம், துவங்கிய மிகக் குறுகிய காலத்துக்குள், இன்று சுமார் 600 கோடி மதிப்புப் பெற்றது எனவும் செய்திகள் கசியத் தொடங்கியபோது, அனைவருக்கும் தலை சுற்றித் தான் போனது. அவ்வாறு சேகரிக்கப் பட்ட பணம் பெரும்பாலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் ராசாவுக்கு ஹவாலா முறையில் கையூட்டாகக் கொடுத்த பணம் என்று சிபிஐ சந்தேகக் கணை தொடுக்க, அதன் விசாரணை வளையத்துக்குள் சிக்கி ஒரு வழியாகத் தான் போனார் சாதிக் பாஷா.

ஒரு வேளை, இவர் தற்கொலை செய்து கொள்ளாமல் அப்ரூவர் ஆக மாறி இருந்தால், இன்னும் யார் யார் எல்லாம் இவ்விவகாரத்தில் சிக்கியிருக்கக் கூடும்? அப்படி ஆகாமல் போனதால், யார் யார் காப்பாற்றப் படுகிறார்கள்? இவர் தற்கொலை செய்து கொண்டதில், தங்களைக் காத்துக் கொள்வதற்காக, அதிகார வர்க்கத்தின் தூண்டுதல் ஏதாவது உள்ளதா? என்னதான் சட்டப் பூர்வமற்ற காரியங்களில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு அவர் வந்திருந்தாலும், அவரது மனைவிக்கும், இளம் குழந்தைகளுக்கும், ஒரு குடும்பத் தலைவனாக இருக்க வேண்டிய பொறுப்பை அவர் இழந்ததற்கு யார் பொறுப்பு என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி...

தி.மு.க சம்மந்தப் பட்ட பினாமி விவகாரங்களில் இது ஒன்றும் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன் ஸ்டாலினின் பினாமி என்று வர்ணிக்கப் பட்ட ரமேஷ் கார்ஸ் "ரமேஷ்", மிகக் குறுகிய காலத்துக்குள் தொழில்முறையில் அசுர வளர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். திடீர் என்று, என்ன ஆனதோ, ஏதானதோ, குடும்பத்துடன் (பச்சிளங்குழந்தை உட்பட) விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். தலைவரின் ஒரு வாரிசுக்காக அன்று ரமேஷ் பலிகடா ஆக்கப் பட்டார் என்றால், இன்று சாதிக் பாஷாவும் தலைவரின் இன்னொரு வாரிசுக்காக பலிகடா ஆக்கப் பட்டிருக்கிறார் என்றல்லவா அர்த்தம்? இந்த அவலங்களுக்கு முடிவே இல்லையா?

அரசியல் அதிகாரம் நிரம்பியவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்களுக்குத் தேவை எனும் பொழுது யாரை வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஆபத்து நேரும்போது இவ்வாறு அவர்கள் குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்துவது என்பது பச்சை சந்தர்ப்பவாதம் இல்லையா? என்ன தான் தீய வழியில் செல்வம் சேர்க்கத் துணை போனவர்கள் என்றாலும், எய்தவன் இருக்க அம்பை மட்டுமே பதம் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

பினாமிகளாக இருப்பவர்களும் தொலை நோக்குப் பார்வை அற்றவர்களாக இருப்பதுதான், இதில் வேதனை. சில ஆயிரம் கையில் இருக்கும் போது இவர்கள் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை, சில லட்சங்கள் சில கோடிகள் கையில் எளிதாகப் புரள ஆரம்பிக்கும் போது பஞ்சாய்ப் பறந்துவிடுகின்றது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். சிபிஐ, உச்சநீதிமன்றம் போன்ற தனி அதிகாரம் படைத்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்.

இரண்டாவது, தனது நீண்ட நாள் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க வைப் புறக்கணித்துவிட்டுத் தன்னிச்சையாகத் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தி. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியும், சினிமாவில் நடித்த விளம்பரத்தையும், சாதியப் பின்னணி கொண்டும் கட்சி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் முதல் மரியாதையுடன் தொகுதிப் பங்கீட்டின் போது பந்தி பரப்பிவிட்டு, வெற்றி, தோல்வி கருதாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கடைமட்ட அ.தி.மு.க தொண்டனைவிட அதிகமாகத் தன் புகழைப் பரப்பி வந்த பிரசார பீரங்கி, கொள்கைக் குன்று, புரட்சிப் புயல் வைகோ அவர்களின் கட்சியான ம.தி.மு.க வைக் கேவலமான முறையில் உதாசீனப் படுத்திவிட்டுத் தேர்தல் களம் காணப் புறப்பட்டுவிட்டார் அம்மையார். யாரும் தன்னுடன் கூட்டு வைக்கவே அஞ்சும் காலத்திலும், தன்னால் அவமானப் பட்ட பின்னரும், தனது உற்ற தோழமையை நல்கி உழைத்த ஒரு உன்னதமான மனிதருக்கும், தோல்விகளை மட்டுமே சுவைத்துக் களைத்தும், அவர் பின்னால் விலை போகாமல் நிற்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் இன்னும் வசந்த காலம் என்பது வெகு தூரம் என்றாகிவிட்டது. இது, ஏற்கனவே இது போன்ற புறக்கணிப்புக்களுக்குப் பெயர் போன, இன்றைய அ.தி.மு.க வின் பச்சை சந்தர்ப்பவாதத்துக்கு மற்றும் ஓர் உதாரணம் என்பதில் ஐயமில்லை.

இது போன்ற சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்குத் தான் வாக்காளர்களின் உள்ளங்களிலும் இடம் என்பது தான் இன்றைய ஜனநாயகத்தின் அவலமான நிலையாகிவிட்டது.

மற்ற ஈன அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல், கொள்கை மாறாமல் முழக்கமிட்டுவந்த வைகோ அவர்கள், இனியேனும் மற்றவர்களைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தன் கட்சியின் அங்கீகாரத்துக்கும், கட்சியினரின் பதவிகளுக்கும் ஒரு சில சமரசங்களைச் செய்து கொள்ள அவர் இனியும் தயங்கினார் என்றால், இன்றைய நிலையில், இனிமேலும் கட்சியை நடத்துவது மிகவும் கடினம்.

அதே சமயம் திருந்துவதற்குத்  திரும்பத் திரும்ப சந்தர்ப்பம் கிட்டினாலும், அவற்றைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு தான் அரசியல் நடத்துவேன் என்று அம்மையார் அவர்களும் தொடர்ந்து தனது செய்கைகள் மூலமாக நிரூபிப்பாரே ஆனால், அவரது கட்சிக்கும் அது நல்லதல்ல என்பதை அவரும் என்றாவது உணரத் தான் வேண்டும்.

- கலைபிரியன்

5 comments:

கோவை நேரம் said...

சரியாய் சொல்லிவிட்டீர்கள் ....

bandhu said...

கொஞ்சம் தொகுதிகளிலாவது ம தி மு க தனியாக நின்று அதற்க்கும் ஓட்டு வங்கி உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம். இதை தவிர விட்டால், கட்சியை கலைக்க வேண்டியது தான்!

ramalingam said...

ராஜா அப்ரூவராக மாறுவதே, தன்னால் இறந்து போன தன் நண்பருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி

இறைகற்பனைஇலான் said...

கடந்த ச.ம. தேர்தலில் ம்.தி.மு.க. சில இடங்களில் 400 முதல் 1000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றதற்கு மதிமுக காரண மல்ல. ஜெயா அர்சு ஊஷியர்களின் மீது போட்ட அணுகுண்டால்தான் அரசு ஊழியகள், எதிர்த்து ஓட்டளித்தார்கள். காங்கிரசை எதிற்க வாய்ப்புகிடைத்தால் தோற்கடிப்பார்கள்.அவர்கள் தவராமல் கடந்தமுறை ஓட்டுப்போட்டார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 2000 ஓட்டுவரை அரசூஉழியர் ஓட்டு இருக்கிறது. காங் கை எதிற்க இது பயன்படும்.

ராஜ நடராஜன் said...

இரு கழகங்களுக்கும் மாற்றாக புதிதாய் பிறக்கும் மாற்று அணியே தமிழகத்தின் இப்போதைய மற்றும் எதிர்கால தேவை.

நல்லா சொல்லியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.