வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Saturday, February 26, 2011

தெய்வத்துக்கும் அரசியல்வாதிக்கும் கற்பனை உரையாடல்... திருவிளையாடல் ஸ்டைலில்...

தெய்வம்: பிரிக்க முடியாதது என்னவோ?
அரசியல்வாதி: எங்களையும் ஊழலையும்...

தெய்வம்: சேர்ந்தே இருப்பது?
அரசியல்வாதி: பணமும் பகட்டும்...

தெய்வம்: சொல்லக்கூடாதது?
அரசியல்வாதி: வாக்காளர்களிடம் உண்மை...

தெய்வம்: சொல்லக் கூடியது?
அரசியல்வாதி: வாழ்க, ஒழிக...

தெய்வம்: கொடுக்கக் கூடியது?
அரசியல்வாதி: ஓட்டுக்குப் பணம்...

தெய்வம்: தலைவனுக்கழகு?
அரசியல்வாதி: வாரிசை வளர்ப்பது...

தெய்வம்: பொய்யெனப் படுவது?
அரசியல்வாதி: தேர்தல் வாக்குறுதி...

தெய்வம்: புரியாதிருப்பது?
அரசியல்வாதி: மேடையில் பேசுவது...

தெய்வம்: கோவிலுக்கு?
அரசியல்வாதி: நீ...

தெய்வம்: கோட்டைக்கு?
அரசியல்வாதி: நான்...

தெய்வம்: ஆத்திகம்?
அரசியல்வாதி: செய்வதைச் சொல்லாதது...

தெய்வம்: நாத்திகம்?
அரசியல்வாதி: சொல்வதைச் செய்யாதது...

தெய்வம்: பிரதமர்?
அரசியல்வாதி: டர்பன் கட்டிய ரப்பர் ஸ்டாம்ப்...

தெய்வம்: கமிஷன்?
அரசியல்வாதி: வாங்குற கமிஷனா? வைக்குற கமிஷனா? முன்னதை அமுக்கப் பின்னதை நியமிப்போம்...

தெய்வம்: அய்யா, ஆள விடும்... நீர் அக்மார்க் அரசியல்வாதி... இன்னும் நாலு கேள்வி கேட்டா, என்னையவே உம்ம கட்சிக் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கீடுவீர் போலிருக்கே... எஸ்கேப்...

- கலைபிரியன்

Thursday, February 24, 2011

கலைஞருக்கு வகுப்பு எடுப்பாரா ப. சி?

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

வருவாய்க்கு உண்டான திட்டங்களையும், வரி விதிப்புகளையும் இயற்றி, அதனை முறையாகச் செயல்படுத்துவதன் மூலம் வருவாய் ஈட்டி, ஈட்டிய வருவாயைத் திறமையுடன் கையாண்டு சேமித்து, சேமித்த பணத்தைக் கொண்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் திட்டங்களை வகுப்பதுவே, ஒரு சிறந்த அரசின் இலக்கணம் என்பது வள்ளுவம் நமக்கு இயம்பும் கருத்து. இக்குறளைத் தனது முதல் பட்ஜெட் உரையின் போது, நாடாளுமன்றத்தில் வாசித்தார் இன்றைய மத்திய உள்துறை அமைச்சரும், முன்னாள் நிதித் துறை அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்கள்.

2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், இன்றைய முதல்வர் கருணாநிதி இலவசங்களை வாரி வழங்குவதாகத் தனது தேர்தல் அறிக்கையில் கூறி, அதன் பேரில் கூட்டணி வெற்றி பெற்று மைனாரிட்டி ஆட்சி அமைந்ததும், பொருளாதார அதி மேதாவி ப. சிதம்பரம், "கருணாநிதியின் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதா நாயகன்" என்று கூட்டணித் தலைவரை வானளாவப் புகழ்ந்து தள்ளினார். ஒரு வேளை, அவ்வாறு செய்தால் மனமிரங்கி, முதல்வர் காங்கிரஸ்சுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார் என்றொரு எண்ணமோ, என்னவோ? அது பலிக்கவும் இல்லை. இலவசங்களை வாரித் தான் வழங்கினார் முதல்வர். அதில் ஒன்றும் மாற்றமில்லை. இதோ, அடுத்த தேர்தலும் வந்து விட்டது. மாநில பட்ஜெட்டை சில நாட்களுக்கு முன்னால் வாசித்தார் மாநில நிதி அமைச்சர் (டம்மி) க. அன்பழகன். 2004, இந்த அரசு பொறுப்பேற்கும் போது 58,000 கோடி சொச்சமாக இருந்த தமிழ் நாட்டின் கடன் சுமை, இன்று 1,01,000 கோடி சில்லறைகளாக இருப்பதாகக் கூறிப் பேரிடியைத் தமிழக மக்கள் நெஞ்சங்களில் இறக்கினார்.

அன்று, குறள் பாடி நாடாளுமன்றத்தில் ஒரு அரசின் இலக்கணத்தைப் பறைசாற்றிய ப. சி, தான் புகழ்ந்த தேர்தல் அறிக்கையால், இன்று துவம்சமாகிப் போன தமிழக நிதிச் சுமைக்கு பொறுப்பானவர்களிடம், தன் கட்சி சார்பாகக் கூட்டணி பேரம் நடத்தும் குழுவில் இயங்கிக் கொண்டிருக்கிறார். கூட்டணி பேரத்துடன் சேர்த்து, அவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தையும், அதனை நிர்வகிக்க வேண்டிய அரசின் செயல்பாடுகளையும் பற்றி வகுப்பெடுத்தால் சிறப்பாக இருக்கும். எடுப்பாரா ப. சி?

- கலைபிரியன்

Monday, February 14, 2011

வேடிக்கைத் துறையாக்கப்படும் வெளியுறவுத்துறை...


சமீபத்தில், ஐநா சபையில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. எஸ். எம். கிருஷ்ணா அவர்கள், தன்னுடைய உரைக்குப் பதிலாக போர்ச்சுகீசிய அமைச்சரின் உரையை வாசிக்கத் துவங்கி விட்டார். உரை தொடங்கி மூன்று நிமிடங்கள் கழித்தே இதனை உணர்ந்த அவர் (அதிகாரிகள் அவரிடம் தெரிவித்த பின்பே, அவர் உணர்ந்ததாகவும் ஒரு ஊடக செய்தி பகர்கிறது), அதன் பிறகு, தனது உரையை எடுத்து வாசிக்கத் துவங்கியுள்ளார். இந்தியாவின் உலக முகமாகத் திகழ வேண்டியவர், மாட்சிமை தங்கிய ஐநா சபையில், இந்தியாவையும், தன்னுடைய துறையையும் கேலிக் கூத்தாக்கியுள்ளார் என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும், ஒரு சோகமான செய்தியாகவே கருதப் பட வேண்டியதாகும். மிகச் சிறிய கவனக் குறைவே இதன் காரணம் என்று சொன்னாலும் கூட, அதனைச் செய்தது அவர் வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்கும், அவரது அதிகாரத்தின் கீழ் வரும் துறைக்கும் அழகல்ல. நட்வர் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற ஜாம்பவான்கள் இருந்து சிறப்பித்த துறையை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு அளிக்கப் பட்டும், அதனைத் திறம் படச் செய்யக் கூடிய தகுதியும் திறமையும் அவரிடம் இருந்தும், அமைச்சராக அவரது கடந்த இரண்டரை ஆண்டுகளின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே சொல்லியாக வேண்டும். சில மாதங்களுக்கு முன், அவர், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது கூட "அவர் சரிவரத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வில்லை" என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒரு குற்றச்சாட்டை ஊடகங்கள் வாயிலாகப் பதிவு செய்தார். அவர் கூறியது சரியா தவறா என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒரு பகை நாட்டின் அமைச்சர், இந்தியாவுக்குத் தலைகுனிவான ஒரு கருத்தைப் பதிவு செய்யக் காரணமாக இருந்து விட்டார் அமைச்சர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவர் சமீபத்தில் அமெரிக்க விமான நிலையங்களில் சோதைனக்குட்படுத்தப் பட்டு அவமானப் படுத்தப்பட்ட விவகாரத்தையும் கடுமையாக அணுகத் தவறி விட்டார் அமைச்சர். இலங்கை இனப் படுகொலையையும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப் படும் அவல நிலையையும் கட்டுக்குள் கொண்டுவர இதுவரை ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டுவிடவில்லை அமைச்சர். சர்வதேசச் சமூகத்தின் மத்தியில், இந்தியாவின் முகத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற, தன் கையாலேயே, நமது மைய அரசு கரியைப் பூசிக் கொள்கிறது என்று தான் வருத்ததோடு பதிவு செய்ய வேண்டும். இனியேனும், கவனிப்பார்களா கவனிக்க வேண்டியோர்?

- கலைபிரியன்

Sunday, February 13, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் - மௌனம் கலைப்பாரா பிரதமர்?


ஸ்பெக்ட்ரம் விவகாரம், இன்று, ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும், எவ்வளவு விரிவாக அலசி ஆராயப்பட்டாலும், இவ்விஷயத்தில், பிரதமர், அளவுக்கதிகமாக மௌனம் சாதிப்பது, மிகவும் நெருடலாக உள்ளது. தன் தலைமையில் இயங்கி வரும் அமைச்சரவையின், ஒரு முக்கியமான அமைச்சர் மீது அசாதாரணமான குற்றச்சாட்டு சுமத்தப் படுகிறது. நாடாளுமன்றமே, ஒரு கூட்டத் தொடர் முழுமைக்கும், தனது அலுவல்களைச் செய்ய முடியாத அளவுக்கு, இவ்விவகாரத்தை எதிர்க் கட்சிகள் அனைத்தும் கிளப்புகின்றன. தன்னுடைய ஆலோசனையை மீறி, ஒரு அமைச்சர் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முடிவெடுத்து, அதனை நியாயப் படுத்தித் தனக்கு பதில் எழுதுகிறார். அந்தக் கடிதத்துக்குக் கூட, ஒரு மாத காலம் பதில் எழுத முடியாமல், தாமதமாக எழுதிய பதிலில் கூட ஒரு விளக்கம் கூடக் கோர முடியாமல் அவரது கை கட்டப் படுகிறது. தன் அமைச்சரவையில், யார், எந்தத் துறையின் அமைச்சராக நியமிக்கப் பட வேண்டும் என்பதை, தன்னைத் தவிர யாரெல்லாமோ அலசி ஆராய்ந்து முடிவெடுக்கிறார்கள். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் (அருண் ஷோரி), தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏதோ ஒரு பெரிய தவறு நடப்பதாக உணர்ந்து, ராஜ்ய சபா வளாகத்தில் பிரதமரைச் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தங்களை எச்சரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதாகவும், அதற்காகத் தங்களின் செயலாளரை என்னிடம் அனுப்புயனால், தனக்குத் தெரிந்த விஷயங்களை, ஆதாரப் பூர்வமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் அவரிடம் கூறியதாகத் தெரிவிக்கிறார், ஊடகம் வாயிலாக. இரண்டு ஆண்டுகளாக, இவ்வளவு தூரம் முன்னேறியுள்ள இந்தப் பூதாகாரமான விஷயத்தில், பிரதமரின் அசாத்தியமான மௌனம், அவர் மீது ஒரு பெரிய சந்தேக நிழலை உருவாக்கி இருக்கிறது. தன் மீது படிந்திருக்கின்ற அந்த நிழலை, விரைவில் மக்கள் முன், ஊடகங்கள் வாயிலாகத் தோன்றிப் பிரதமர் விவரமான விளக்கங்கள் அளிப்பதன் மூலமே அகற்ற முடியும். அந்தப் பொறுப்பும், கடமையும், அவருக்கு உள்ளது என்பதை அவரால் மறுக்க முடியாது. செய்வாரா பிரதமர்? செய்ய விடுவார்களா, அவரைக் கட்டிப் போட்டிருப்போர்?

- கலைபிரியன்

Friday, February 11, 2011

அரசியல் தமாசுக் கச்சேரி... (முழுக்க முழுக்க கற்பனை)

ஒரு சில அரசியல்வாதிகளின் இன்றைய நிலைமையில், கற்பனையாக அவர்கள் பேசுவது போல எண்ணிப் பார்த்தேன்... படிங்க...

புதிதாக தோசைக் கடை ஆரம்பித்திருக்கும் ஆ. ராசா, எதிரில் காலிக் கடையில் தோசை சுட்டுக் கொண்டிருக்கும் தயாநிதி மாறனிடம் - "கண்ணா, நான் ஒரு தோசே சுட்டா, 176,000 கோடி தோசே சுட்டா மாதிரி... நீ எல்லாம் என்ன, ஜூஜூபி, வ்வர்ட்டா..."

ஐந்து நபர் குழுவில் இல்லாத இளங்கோவன் போராட்டம் நடத்தத் துவங்கியவுடன், தங்கபாலு, தன் சகாக்களிடம் - "டேய், ஆரம்பிச்சுட்டாங்கடா... இனி, ஒரு பக்கி சட்ட வேட்டியோட உருப்படியாப் போய்ச் சேர முடியாது... சூதானமா இருந்துக்குங்கடா... அம்புட்டு தான்... சொல்லிப் புட்டேன்... ஆமா..."

சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ், சிபிஐ மற்றும் பிரதமரிடம், அவ்வப்போது அவர்கள் அலுவலகத்துக்கு முன் வந்து நின்று கொண்டு, "முதல் மரியாதை" ஸ்டைலில் உடுக்கை அடித்துக் கொண்டே, "அய்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..."

கருணாநிதி, அண்ணா சமாதியில் தனிமையில் - "அண்ணைக்கே, உங்களுக்கப்புறம் நாவலரை வுட்ருந்தா, அண்ட்ராயராவது எஞ்சி இருக்கும்... இன்னைக்கு அதுக்கும்ல வேட்டு வச்சுருச்சு இந்த ஆக்கங்கெட்ட கூவ... மகன்னு செல்லம் கொடுத்தது தப்பாவுல்ல போச்சு... மாமியா கண்ணுல, நான் வெரல வுட்டு ஆட்டுனேன், ஒரு காலத்துல... இன்னிக்கு என்னடான்னா, எம் பய புள்ளைகளால, மருமகளும், பேரனும் என்னையப் பாடாப் படுத்திப் பச்சடி வைக்குதுங்களே... ஐயோ, ஆண்டவா..." சுத்தி முத்திப் பார்த்துவிட்டு, "நல்ல வேளை, எவனும் இல்லை... இல்லாட்டி, கருணாநிதியின் ஆத்திக முகம்னு எழுதி, உள்ளதுக்கும் வேட்டு வச்சுருவானுவ..."

கார்த்திக், கூட்டணிப் பேச்சு வார்த்தையின் போது, "எனக்கு மூணு தொகுதி குடுத்தாலே ஆச்சு"ன்னு அடம் புடிக்குறத பாத்துப் பதறி, கூட இருந்த அவர் கட்சிப் பொதுச் செயலாளர் தனியாக அழைக்கிறார்... "சார், நான், நீங்க - ரெண்டு தொகுதி சரி... அந்தம்மா பாட்டுக்கு ஒரு நல்ல மூடுல மூணு தொகுதியைக் குடுக்குறேன்னு சொல்லிட்டா, நம்ம கட்சிக்கு மூணாவதா ஒரு உறுப்பினரைச் சேர்க்கணும்... இந்த ஆட்டைக்கு நான் வரல... நீங்க எறங்கி வந்து ரெண்டையே பேசி முடிக்குற வழியப் பாருங்க..."

டி ராஜேந்தர், கட்சியனரிடம்... "வர்ற தேர்தல்ல நம்ம கட்சி 234 தொகுதிலயும் தனியா நிக்குறதா அறிவிக்கப் போறேன்... என்ன சொல்றீங்க"... கட்சிக் காரர் சொலிறார்... "சார், மொதல்ல ஆபீசை காலி பண்ணுங்க... ஒங்க கட்சியிலேயே, நீங்க மட்டும் தான் தனியா, உறுப்பினரா நிக்குறீங்க... உங்க கட்சிக்கு உறுப்பினர் இருக்கா மாதிரிக் காட்டணும்னு, எங்க கட்சி அலுவலகத்துக்கு வந்து, ஏன் சார், எங்கக்கிட்ட இந்த அலப்பறை..."

ஆற்காடு வீராசாமி, கலைஞரிடம் ஓடி வந்து - "தலைவரே, கட்சி மீட்டிங்குக்கு கொக்கி போட்டுக், கரண்ட் திருடுனவனப் புடுச்சுக் கொண்டாந்திருக்கேன்..." கலைஞர் சொல்கிறார்... "அடேடே, பக்கத்து மாநிலத்துலேருந்தா... நம்ம மாநிலத்துல தான், கரண்ட் கம்பில கரண்ட் வர்றத நிப்பாட்டி நாலரை வருஷமாச்சே"

விஜயகாந்த், பிரேமலதாவிடம் சொல்கிறார்... "கூட்டணி விஷயத்துல இன்னும் குழப்பமாவே இருக்குடி..." பிரேமலதா பதிலுக்கு சொல்கிறார், "விடுங்க, இன்னும் நாலரை வருஷம் இருக்கே..." விஜயகாந்த் பதறிப் போய், "என்னடி சொல்றே..." எனக் கேட்க, அலட்டிக் கொள்ளாமல் பிரேமலதா சொல்கிறார்... "பின்ன, நீங்க முடிவெடுக்குற வரைக்கும் தேர்தல் கமிஷன் காத்துருக்குமா என்ன... எலக்ஷன் முடிஞ்சு அந்தம்மா பதவிக்கு வந்து ஆறு மாசம் ஆச்சு... காலண்டரப் பாருங்க, இப்ப 2012 ஜனவரியில இருக்கோம்". விஜயகாந்த் "அய்யய்யோ, வட போச்சே!!!"

- கலைபிரியன்

Thursday, February 10, 2011

சுயமரியாதைச் சூரியனின் சோகக் கதை...


எதுகைகளுக்கு என்றுமே ஏங்கியதில்லை இவன்...
மோனைகள், இவனுக்கு மட்டும் முச்சந்தியிலும் கிட்டின...
பசித்திருந்தான் என்றும், ஒரு படைப்பாளியாய்...
விழித்திருந்தான் வேரூன்றி, ஆல விருட்சமாய்...
வேர்களே, இவனை வேறாய் மாற்றிவிட்டன...
வாழ்ந்து முடித்த பின், வரலாறாய்ப் போற்றப்பட வேண்டியவன்...
வீழ்வதற்கு முன், இன்று, விலை பேசப் படுகிறான் - அவனுடைய விழுதுகளால்...
தொப்பையில் சறுக்கி விளையாடிய சருகுகள் கூட, அவனை இன்று...
பணம் காய்ச்சி மரமாகவே பார்க்கின்றன...
இடம் கொடுத்தான், மடம் போச்சு... மக்கி மண்ணாய்ப்
போகும் வேளையில், மானத்தின் விலையை
மட்டும் மதிக்கமுடியவில்லை அவனால்!!!

- கலைபிரியன்

கேள்விப் பட்டது...

கவிஞர் வாலி ஒரு முறை கம்பன் விழாவில், "கம்பன் சைவமா, வைணவமா" என்ற தலைப்பில் கவியரங்கத்தில் கவி பாடினார். அவர் முடித்ததும் அவர் அருகில் வந்த பெரியவர் கேட்டாராம் "இவ்வளவு அருமையாகக் கவி பாடுகிறீர்களே... திரைப்படங்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கத்தில் பாடல் எழுதுகிறீர்கள்?" என்று. அதற்கு வாலி கூறினாராம் - "இங்கே, நான் தீஞ்சுவைத் தமிழுக்குப் பாலூட்டும் தாய்! அங்கோ, நான், விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்!!" என்று... "வாலி என்ற புனைப் பெயர் ஏன் வைத்தாய்? உனக்குத் தான் வாலில்லையே?" என்று அவரது தமிழாசிரியர் ஒரு முறை வேடிக்கையாகக் கேட்டாராம், அதற்கு வாலி கூறிய பதில் - "வால் இல்லை என்பதனால் வாலி ஆக முடியாதா? ஏன், கால் இல்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?"...

Wednesday, February 9, 2011

தேர்தல் - எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்...

2009 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நான் எழுதிய இந்த இடுகையையும், "49O" பற்றி நான் எழுதிய கவிதையையும், வர இருக்கின்ற தேர்தலுக்காக மறுபடி தூசி தட்டி, எடுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இன்னும் எவ்வளவு தேர்தல்களுக்கு இதே அவல நிலை தொடரப் போகிறது என்று தான் பார்ப்போமே:

"எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"ன்ற கதையாக, "நாங்களும் வாக்களித்தோம்"னு சொல்லிக் கொள்கிற பொது ஜனத்தைத் தான் இன்றைக்குக் காண முடிகிறது...

நாம் வாக்களித்த வேட்பாளர் எவராவது ஒருவர், என்றாவது ஒரு நாள், தான் சொன்னதை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்று புள்ளி விவரத்துடன் வாக்காளர் மத்தியில் எடுத்துரைத்ததுண்டா? அல்லது வாக்காளர்கள் தான் அவர்களைக் கேள்வி கேட்கும் அளவுக்கு சிரமங்கள் எடுத்ததுண்டா?

போகிற போக்கில், காற்றில் கப்பல் விடுவேன் என்றும் கேப்பையில் இருந்து நெய் எடுப்பேன் என்றும் சொன்னால் கூட நமது வாக்காளர்கள் வாக்களித்து வெற்றிக் கனியை அவர்கள் தத்தம் தலைமையின் காலில் சமர்ப்பிதுவிதுவிட்டு வாக்களித்த நம்மையே சுரண்டக் கிளம்பிவிடுவார்கள்... இது தான் ஜனநாயக மரபு என்றே நம்மை இக்காலத் தலைவர்களும் நம்ப வைத்தும் விட்டார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க கூட திருவாளர் பொது ஜனங்களுக்கு நேரமும் இருப்பதில்லை...

செய்தித் தாள்களைப் புரட்டி, உலக நடப்பு தெரிந்து, இவ்வளவு காலம் நடந்ததை திரும்பிப் பார்க்க நேர்ந்தால், இவைகளெல்லாம் பொது ஜனங்களுக்குப் புலப் படும்:

1. குற்றப் பின்னணி உடையவர்கள் எந்தனை பேரைத் வெற்றி பெற வைத்துள்ளோம்?
2. ஊழல் பெருச்சாளிகள் எத்தனை பேரிடம் ஏமார்ந்துள்ளோம்?
3. சபையில் நமக்காக ஒரு கேள்வி கேட்கக் கூட நேரமில்லாமல் உழைத்தே ஓடாய்த் தேய்ந்து போன (யாருக்காக?) எத்தனை பேரை மறுபடி வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்துள்ளோம்?
4. கொள்கையும் கட்சியும் மாறி மாறி நம்மிடம் மறுபடி மறுபடி வாக்குப் பெற வரும் எத்தனை பதவி வெறியர்களை நாம் தாங்கிப் பிடித்துள்ளோம்?
5. வெற்றி பெறுவதற்கு முன்னும் வெற்றி பெற்ற பின்னும் இவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களை ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்துகிறார்கள்?
6. கட்சித் தலைமைக்குக் காட்டுகின்ற விசுவாசத்தில் நூற்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காட்டுகிறார்களா இவர்கள்?
7. காமராஜர் வழி, கக்கன் வழி வந்ததாகக் கூறும் இவர்களில் எத்தனை பேர் சுயநலத்தை விடப் பொது நலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
8. பொது மருத்துவமனையில் இவர்களில் எவ்வளவு பேர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சிகிச்சை பெறுகிறார்கள்? அரசு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள்? அரசு பள்ளிகளில் எவ்வளவு பேரின் குழந்தைகள் பயிலுகிறார்கள்? இதற்கெல்லாம் பதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்க, இவர்களில் எத்தனை பேருக்கு மக்களுக்கு சேவை ஆற்றுகின்ற மனப் பக்குவம் வரும்?
9. இவர்களில் எத்தனை பேர் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டவர்கள்?
10. தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை இவர்களில் யாராவது பத்திரமாக எழுதித் தரத் தயாரா?

குறிப்பு - இந்தக் கேள்விகள் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ சாராரையோ மனதில் வைத்துத் தொகுக்கப் பட்டவை அல்ல. இதற்காக என்னைச் சாடும் பொழுதாவது பேதம் பார்க்காமல் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பார்களே எனில், அதை என் வாழ் நாள் சாதனையாகக் கருதுவேன்...

இவற்றை விட இன்னும் எவ்வளவோ கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்க, இதோ இந்தத் தேர்தலும் வந்து இவற்றுக்கு நல்ல பதில்கள் கிடைக்காமலேயே விடை பெறவும் போகிறது... எத்தனை பேர் இன்னும் "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"னு சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை!!!

சிந்திப்பீர் செயல் படுவீர்...


மை இட்டனர்
விரலில் -
ஒப்பமிட்டான்,
கருவி கண்டதும்
குழப்பம்...

கை நீட்டி
வாங்கிய
காந்தி -
பல்லிளித்தார்
பையிலிருந்து...

பொத்தானை
அழுத்திடத்தான்...
விரல் நீள
முனையும்
போது...

கரை
படிந்த
மனசாட்சி...
காரி
உமிழ்ந்தது...

இத்தனை
நாட்கள்
உன்னை ஏமாற்ற
யோசிக்காத
"இவர்"களை...

ஏமாற்ற
நீ - ஏன்
பட
வேண்டும் -
வெட்கம்...

கயவர்கள்
காந்தியை
நம்புவதே
துரோகம்
இழைக்கத்தான்...

அவர்கள்
கையில் இருந்து
அவன் பைக்கு
வந்த
காந்தி...

இனி ஒரு
முறை நாம்
ஏமாற்றப்
பயன்பட
மாட்டோம்...

என்றுதிர்த்த
புன்னகை
தான்...
அவனைக்
குழப்பியது...

அவர் வடிக்கும்
ஆனந்தக்
கண்ணீர்
வியர்வையாய் வடிகிறது -
கிழிந்த சட்டையில் ...

யோசித்தான் -
வட்டியும்
முதலுமாகத்
திருப்பிக் கொடுக்க
இதுவே சந்தர்ப்பம்...

உத்தமன் -
"49O" படிவத்தில்...
வாந்தி எடுக்கத்
தொடங்கினான் -
தன் மனசாட்சியை...

இன்னும் ஐந்து
வருடம்
கழித்துத்தான்
இனி மீண்டும் ஒரு
சந்தர்ப்பம்...

இனியாவது -
சிந்திப்பீர்
செயல்
படுவீர்...

- கலைபிரியன்

நேற்று, இன்று, நாளை...


நேற்று, கோகிலாவைக்
"கரெக்ட்" பண்ணக்
கோவில் வாசலில்
கால் கடுக்க நின்றவன்,
இன்று, செலினாவுக்குச்
"செக்" வைக்கச்
சர்ச் பக்கம்
சுற்றித் திரிகிறான்...
நாளை, அவன்
மசூதியில் மையம்
கொண்டிருந்தாலும்
ஆச்சரியம் இல்லை!!!
இவன் தான்
"சமத்துவம்" படித்த,
இன்றைய, இளைஞன்...

- கலைபிரியன்

Tuesday, February 8, 2011

முதல்வரின் ஷூவை துடைத்த பாதுகாப்பு அதிகாரி

ஒரு மாநிலத்தில், காவல்துறை உயர் அதிகாரியாக இருக்கக் கூடியவர், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் அவர், யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக, முதல்வரின் செருப்பைத் தன் கைக்குட்டையால் துடைக்கிறார். அதைச் சற்றும் கண்டு கொள்ளாதவராக, முதல்வரும் மற்ற அதிகாரிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில், அரசு நிகழ்ச்சிக்காக ஹெலிகாப்டரில் ஒரு கிராமத்திற்கு முதல்வர் வந்திறங்கியபோதுதான் நிகழ்ந்தது இந்தக் கொடுமை. ஊடகங்களின் வாயிலாக இந்தச் செய்தி அறிந்து பதறிப் போயிருப்பார்கள், இன்றளவிலும் காவல் துறையின் மீது மதிப்பு வைத்திருக்கும் யாவரும். அந்த அதிகாரியின் பணிக் காலம் அண்மையில் முடிந்து, அதனை, முதல்வர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீட்டித்துக் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. தான் வகிக்கும் பொறுப்பான/கண்ணியமான பதவிக்கு சற்றும் ஒவ்வாத இந்த இழி செயலைப் புரியத் துணிகிறார் அந்த அதிகாரி என்றால், அவர் வகிக்கின்ற அந்தப் பதவியால், அந்த முதல்வரால், அவர் பெறுகின்ற பயனானது, நேர்மையாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்தால் அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை, என்பதை எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆயிரமாயிரம் காவல்துறைக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, அங்கிகளை உடலில் சுமந்து கண்ணியமாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இளம் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் இது போன்ற செயல்கள் தவறான முன்னுதாரணங்களாகி  விடுகின்றன. ஆட்சிக் கட்டிலை அலங்கரிப்பவர்கள், கல்வியிலும், துறை சார்ந்த திறமையிலும் தங்களை விட எவ்வளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை வருடிப் பிழைத்தால் மட்டுமே, தத்தம் பணிகளில் மேன்மை அடைய முடியும் என்ற பாடத்தை இது போன்ற நிகழ்வுகளைத் திரும்பத் திரும்பக் கண்டு கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இந்த நிலையை மாற்றக் காவல் துறையை ஏவல் துறையாக மாற்றும் அரசியல்வாதிகள் மாறினால் மட்டும் போதாது. தங்களது தேவைகளையும், பதவி சார்ந்த உயர்வுகளையும் பெறத் தங்கள் திறமையையும், நேர்மையையும், கண்ணியத்தையும் மட்டுமே நம்பாமல், அரசியல்வாதிகளை நம்பி, அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம் மேன்மை அடைய முடியும் என்ற எண்ணத்திலிருந்து அதிகாரிகளும் மாற வேண்டும். மாறுவார்களா?

- கலைபிரியன்

Monday, February 7, 2011

காங்கிரசுக்கும், சோனியாவுக்கும் ஒரு அறிவுரை!!!

செய்தி: தி.மு.க.,வுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச, ஐந்து பேர் கொண்ட குழுவை, காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், டில்லியில் இக்குழுவை இரவு அறிவித்தார்.

கண்ணோட்டம்: முதலில், இந்த ஐந்து தலைவர்களும், கிடைக்கும் தொகுதிகளில், தத்தம் கோஷ்டிக்கு எவ்வளவு சதவீதம் என்று முடிவு செய்ய, மூவர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்தப் பஞ்சாயத்தை முடித்துவிட்டு, அப்புறமாகக் கலைஞரிடம் சென்று பேசட்டும். இல்லாவிட்டால், இந்தப் பஞ்சாயத்தையும், தள்ளாத வயதில், தமிழினத் தலைவரே சமாளிக்க வேண்டி வரும். அப்புறம், குரங்கு அப்பத்தைப் பங்கு வைத்த கதையாகிவிடும். முடிவுக்குப் பின் "அய்யய்யோ, வட போச்சே!" என்று ராகுல், வடிவேலு மாதிரிப் புலம்ப வேண்டியது தான்...

அந்த நாள் ஞாபகம், இல்லையோ?

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் மீதும் குற்றம் சுமத்தி வழக்குப் போட்டிருக்கிறார் சுப்ரமணியம் சுவாமி. அந்த வழக்கை, நீதிமன்றத்திலேயே சந்தித்துத் தான் நிரபராதி என்று நிரூபித்தால், முதல்வரின் அரசியல் நேர்மையை மெச்சிப் பெருமை கொள்ள முடியும். அதை விடுத்து, அவர் தான் சுமத்திய குற்றச்சாட்டுக்களை 24 மணி நேரத்திற்குள்ளாக வாபஸ் பெற வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலமாக சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை வேறு திசைக்குத் திருப்பி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் கலைஞர். தான் தூய்மையானவர் என்றால், வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு நேருக்கு நேர் சந்திக்க முதல்வருக்கு ஏன் தயக்கம்? நீதிமன்றமும் அதனை எளிதாக அனுமத்தித்திருக்கும். கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்துப் போராடிய தைரியசாலிக்கு, இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்க்க யாரும் துணியாத காலத்தில், தானே தெருவில் இறங்கிக் களம் கண்டு எதிர்த்த தன்னிகரில்லாத திராவிடத் தலைவருக்கு, இது ஒரு சர்வ சாதாரணமான விஷயம் இல்லையா? தன்னுடைய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், பக்கம் பக்கமாக, இவர் அளந்து ஆய்ந்திருக்கும் - பெரியார் பாசறையில் தான் பயின்ற, நேர்மைக்கும், தூய்மைக்கும், சுயமரியாதைக் கொள்கைக்கும் நேரெதிரான கலைஞரை அல்லவா, இன்று பார்ப்பதாகத் தோன்றுகிறது?

இந்நிலையில், சமீபத்தில் நான் கேட்ட சில உரைகளும், படித்தறிந்த விஷயங்களும், மேற்கூறிய விஷயத்திற்கு சற்றும் ஒட்டாத பதிவுகளாக எனக்குப் பட்டது.

இன்றைய தமிழகம், மலபார் (கேரளம்), ஆந்திரம், கர்நாடகம் எல்லாம் ஒருங்கினைந்த சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் முதலமைச்சராக, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார். ஒருமுறை, அவர், தனது வாகன ஓட்டுனருடன் குற்றாலம் சென்று, ஒரு சீமானின் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, சில அலுவல் பணிகளையும், தொந்தரவில்லாமல் முடித்துவிட்டு, நான்கு நாட்களில், காரில் திரும்புகிறார். தான் தங்கியிருந்ததற்கான வாடகையைக் கொடுத்து விட்டு, அந்தச் சீமானிடம் இருந்து விடை பெற்றுச் செல்லுகிறார். திரும்புகையில், காரில் "கட கட" என சத்தம்; "கம கம" என மணம். "என்ன", என்று ஓட்டுனரை ரெட்டியார் கேட்க, "ஒன்றுமில்லை", என சமாளிக்கிறார் ஓட்டுனர். வீட்டுக்கு வந்தததும், காரில் இருந்தது பலாப் பழங்கள் எனத் தெரிய வருகிறது, அவருக்கு. ஓட்டுனரிடம் விவரம் கேட்க, அவர், தான் அதை விலை கொடுத்து வாங்கியதாகக் கூறுகிறார். சற்று கடிந்து கேட்கும் பொழுது, தெரியாமல், தான் அந்த சீமானின் தோட்டத்தில் இருந்து எடுத்து வந்து விட்டதாக ஒப்புக் கொண்டார். அவரைக் கடுமையாகக் கண்டித்த ரெட்டியார், அவரிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து (இந்த ஐந்து ரூபாயைக் கொண்டு, அந்தக் காலத்தில் நான்கு நாட்கள் பயணப் பட்டு - வழிச் செலவு உட்பட - சென்னையிலிருந்து குற்றாலம் சென்று திரும்ப முடியும் என்பது வேறு விஷயம்) குற்றாலம் சென்று, அந்தச் சீமானிடம் பழங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு வரும்படி கூறினாராம். தயக்கத்துடன் கிளம்பிய ஓட்டுனரை நிறுத்தி "அந்தச் சீமானிடம், பழங்களைப் பெற்றுக் கொண்டேன் என்று, மறவாமல் எழுதிக் கையொப்பம் பெற்றும் வர வேண்டும்" என்று கூறினாராம். அப்பணியை, அவ்வண்ணமே முடித்து விட்டு வந்த ஓட்டுனர், அடுத்த நாள் காரோட்டிக் கொண்டிருக்கையில், முகம் வாட்டமாகக் காணப் பட்டதைக் கண்ட ரெட்டியார், "என்ன சுப்பையா? ஏன் இப்படி உம்மென்று இருக்கே?" என்று வாஞ்சையாக வினவினாராம். அதற்கு, அவர் "ஐயா, அந்தக் காலணாப் பெறாத பலாப் பழத்துக்காக, ஐந்து ருபாய் செலவு செய்து, நான்கு நாட்களையும் வீணடிக்க வைத்து விட்டீர்களே?" என்று கேட்டாராம் (இப்படி, ஒரு ஓட்டுனர், முதல்வரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கூடிய நிலைமையிலா நாம், இன்று இருக்கிறோம்?). அதற்கு ரெட்டியார், "அவற்றைத் திரும்பக் கொடுத்திருக்காவிட்டால், நாலு நாள் முதல்வர் நம்ம வீட்டில் தங்கி இருந்ததற்கே, அவரின் ஓட்டுனர் பழங்களைத் திருடி விட்டாரே, ஆண்டுக் கணக்காக ஆளும் மாகாணத்தில், முதல்வர் இன்னும் என்னெனத்தைத் திருடுவாரோ என்று நினைத்திருப்பார். அனால், இப்போது, முதல்வர் கையில் இருந்த இந்தக் காலணாப் பெறாத பழங்களே பத்திரமாக வந்து சேர்ந்து விட்டனவே, மாகாணம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்று யோசிப்பார்!!!" என்று விளக்கியவுடன் தான், ஓட்டுனருக்கு வஷயத்தை விளங்கிக் கொள்ள முடிந்ததாம்.

காமராஜர் அமைச்சரவையில் இருந்த மஜீத் என்ற அமைச்சர், விருதுநகருக்கு, ஒரு பணி நிமித்தமாக வந்த போது, அப்படியே, முதல்வர் வீட்டுக்குப் போய், அவரது தாயாரைப் பார்த்து விட்டு வரலாம் என்று வீட்டுக்குச் செல்கிறார். அவர் தாயாருக்கு, இவர் யார் என்று தெரியவில்லை (அப்படிப் பட்டவருக்கு, அமைச்சரவையில் இன்றெல்லாம் இடமே கிடைக்காது என்பது வேறு விஷயம்). தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவுடன், அந்த மூதாட்டி, அவரை வீட்டுக்குள் அழைத்து அமர வைக்கிறார். காமராஜரின் தங்கை, நாகம்மை அம்மையார் எங்கே என்று அமைச்சர் வினவ, அவர் தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளதாக பதில் வருகிறது, அந்த அம்மையாரிடமிருந்து. "முதலமைச்சர் வீட்டுக்குள், குழாய் இணைப்பு இல்லையா" என்று அதிர்ந்த அமைச்சர், இருந்த இடத்தில் இருந்தே, அதிகாரிகளை அழைத்து, குழாய் இணைப்புக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, அதற்குக் கட்டணமாக 24 ரூபாயைக் கட்டி (இன்றைக்கு, லஞ்சமே 24 ஆயிரத்துக்கும் மேல் கொடுக்க வேண்டி வரும்), 12 மணி நேரத்திற்குள்ளாக, முதல்வர் வீட்டில் குழாய் இணைப்புக் கொடுக்கப் பட்டுத் தண்ணீர் வருகிறது.சென்னை திரும்பிய அமைச்சரை, காமராஜர் அழைத்தார். அவர் சற்றும் எதிர்பாராத விதமாக, "மஜீத் பாய், நீங்கள் இந்த நாட்டுக்கு அமைச்சரா, என் வீட்டுக்கு அமைச்சரா? ஏன் என் வீட்டுக்கு, அதிவேகமாய்க் குழாய் இணைப்பு வருவதற்கு, தங்கள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தீர்கள்? இன்னும் 24 மணி நேரத்தில், அந்த இணைப்பைத் துண்டிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து தங்களை விலக்கி வைக்க நேரிடும்" என்று கடிந்து கொண்டு, ஆணையும் பிறப்பித்தார். அவ்வாறே துண்டிக்கப் பட்டது இணைப்பும்.

கொள்கை முழக்கங்கள் இட்டு மேடைகளிலேயே ரத்தம் கக்கும் நிலை வந்த பின்னும், திராவிட/சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்தாமல், அண்ணா காலத்தில் முழக்கமிட்டு வந்தவர் பட்டுக் கோட்டை அழகிரிசாமி (அதே பேரியக்கத்தில், இவரின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப் படும் ஒருவர், இன்றைய மத்திய அமைச்சரவையில், அமைச்சராக இருந்தும், இரண்டாண்டுகளாய் நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட ஒரு கேள்விக்குக் கூட பதில் பேசாத மவுனச் சாமியாராக வீற்றிருக்கிறார் என்பது அந்தப் பெருமகனாரின் பெயருக்கு ஏற்படுத்தப் பட்ட களங்கம் என்பது வேறு விஷயம்). அவர், ஒரு மேடையிலிருந்து, பேசிவிட்டுக் கீழிறங்கியதும் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்டார். தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார். அவருக்கு, அன்றைய தேவைக்கு, சிகிச்சை அளிக்க அண்ணாவிடமோ, கட்சியிடமோ வசதி வாய்ப்பில்லாத நேரம். அந்த சமயத்தில், திருவாரூரில் ஒரு கூட்டத்திற்காக அண்ணாவிடம் தேதி கேட்க, அம்மாவட்டக் கழகச் செயலாளர் வருகிறார். "என்ன செய்ய வேண்டுமோ செய்கிறேன், அண்ணா, தேதி மட்டும் கொடுங்கள்" அன்று கூறிய அவரிடம் அண்ணா வைத்த கோரிக்கை என்ன தேரியுமா? - "பட்டுக்கோட்டை அழகிரிசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கக் கட்சியிடமோ, என்னிடமோ வசதி இல்லை. அவரின் பெயருக்குத் தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனைக்கு 100 ரூபாய்க்கு மணி ஆர்டர் எடுத்து அனுப்பினால், என் கைக்காசைச் செலவழித்து, நானே கூட்டத்துக்கு வருகிறேன்" என்று கூறி அவரை நெகிழ வைத்தாராம் அண்ணா.

மேற்குரிப்பிட்டுள்ளது போல், இன்னும் பற்பல சம்பவங்களைக் குறிப்பிடலாம், அந்தக் காலத்து ஆட்சியாளர்கள், எவ்வளவு நேர்மையாகவும், எளிமையாகவும் ஆட்சிபீடத்தை அலங்கரித்தார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால், இவர்கள் எல்லாம் சொற்ப காலம் அமர்ந்துவிட்டுப் போன நாற்காலியில், ஐந்து முறை அமர்ந்திருப்பவரான இன்றைய முதல்வர், ஏன் இவ்வளவு கீழ்த் தனமாக நடந்து கொள்கிறார் என்பது, அவருக்கும், அவருக்குப் பல்லக்குச் சுமக்கும் ஒரு சிலர்க்கும் மட்டுமே தெரிந்த விஷயம்!!!

- கலைபிரியன்

Sunday, February 6, 2011

தேர்தல்

நாயும், பேயும்
மோதிக் கொள்ள,
ஐந்து மாதங்கள்
கொண்டாட்டம்!!!
ஏதாயினும் ஒன்னு
ஜெயிச்ச பின்னாடி
ஐந்து வருஷம்
திண்டாட்டம்!!!

- கலைபிரியன்

Friday, February 4, 2011

கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்...

கேரளாவில், அந்தக் காலத்திலேயே, பாமாயில் ஊழல், ராசாவுடன் தொலை தொடர்பு செயலாளரா இருந்து ஸ்பெக்ட்ரம் விசாரணையை ஆரம்ப காலத்திலேயே முடக்க முயற்சி செய்தது, மேலும், இப்படிப் பலப் பல "நல்ல" தகுதிகள் வாய்ந்தவரை, அதே ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரித்து வரும் "சிபிஐ"க்கு பொறுப்பான, சக்தி வாய்ந்த, "விஜிலன்ஸ்" துறையின் தலைவராக நியமித்து, "கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்" என்ற புது நடைமுறையைக் கையாண்டிருக்கிறது மத்திய அரசு.

இந்த நியமனத்தைச் செய்யும் பொறுப்பு, பிரதமர் (மன்மோகன் சிங்), நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் (சுஷ்மா ஸ்வராஜ்) மற்றும் உள்துறை அமைச்சர் (ப. சிதம்பரம்) ஆகிய மூவர் அடங்கிய குழுவுக்கு உள்ளது. மேற்கூறிய பிரச்சனைகளைக் குழுவில் தான் எழுப்பி, நியமனத்தை எதிர்த்ததாக, சுஷ்மா சொல்கிறார். அவ்வாறிருந்தும், அவரையே நியானம் செய்வது என்பது ஜனநாயகத்தை இன்றளவும் நம்பும் நெஞ்சங்களை ஈட்டி கொண்டு குத்துவதாக அமைந்துள்ளது. மாற்றுக் கட்சி உறுப்பினர்களை ஒருங்கே கொண்டு செயல்படும் முறை தேய்ந்து வரும் இந்தக் காலத்தில், இது போன்ற நியமனங்களிலாவது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். சோனியாவின் ஆலோசகர்களான வின்சன்ட் ஜார்ஜும், அகமது படேலும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வற்புறுத்தி, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வைத்துள்ளார்கள் என்றொரு செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியப் படுகிறது. நாட்டின் சிறந்த அறிவு ஜீவிகளில் இருவர், அதுவும் அவ்வளவு சக்தி வாய்ந்த பதவிகளில் அமர்ந்திருப்பவர்களே, தனிப் பட்டோரின் விருப்பு வெறுப்பிற்குப் பணிந்து செயல்படுகிறார்கள் என்றால், அவர்களின் கீழ் பணிபுரியும், லட்சக் கணக்கான அதிகாரிகள் எப்படி செயல்பட முடியும், அன்றாடம், நம் நாட்டில். இதில் வல்லரசாகப் போகிறோம் என வாய் கிழியப் பேச்சு வேறு. இப்படிப் பட்ட ஒரு சர்ச்சை மிக்க நியமனத்துக்கு, ஒப்புதலும் அளித்து, அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஜனாதிபதி, இருந்தும், இல்லாததற்குச் சமம். அவர் நம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக இருந்தாலும், அதை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. சுப்ரீம் கோர்ட், சில மாதங்களாக, தனது சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது, இந்த அரசுக்கு எதிராக, இது போன்ற விவகாரங்களில். தாமதமாக நடந்தாலும், அந்த உயரிய நீதி ஆலயமாயினும், சட்டத்தின் மாண்பையும், ஜனநாயகத்தின் மேன்மையையும் உயர்த்திப் பிடிக்கும் என நம்புவோம்.

- கலைபிரியன்

நீ வருவாய் என...

தோன்றுவாய் நீ எனத்
தொடுவானம் பார்த்திருந்தேன்,
தை மாதம் நகர்ந்தபின்னும்
தேடித் திரிந்தேன்,
தெரியவில்லை, நீ எங்கென்று!
தூரலில் நனைந்து, நாம்
துள்ளித் திரிந்த நாட்கள்,
தீக் குச்சி சுண்டிவிட்டுத்,
திண்ணையில் கழித்த காலம், எல்லாம்
தாவி வந்தென், மனதைத்
டவிச் செல்லுதடா...

"வந்துடுரேண்டா", என்று வாஞ்சையாய்ச்
சொல்லிவிட்டுப் போன, என்
நண்பா, என்று திரும்புவாய்
நீ, உன் விடுமுறை முடிந்து?

- கலைபிரியன்

Thursday, February 3, 2011

தமிழக மீனவர் நிலை!!! ஆட்சியாளர்களுக்கு சில கேள்விகள்...

செய்தி - 'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.

கண்ணோட்டம்
- கச்சத் தீவு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டதால்தானே இன்றும் ஈழத்துச் தமிழச்சி மட்டுமல்லாமல், என் தாயகத்தில் உள்ள தமிழச்சியும், அன்றாடம், தாலி அறுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது!!! இன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டு, என்ன, தமிழகத்துக்கே இலங்கைக் கடற் படையினர் வந்து கொலை செய்துவிட்டுச் செல்ல வழி வகுக்கப் போகிறார்களா? அமெரிக்கர்களுக்கும் சீனர்களுக்கும் சற்றும் சளைக்காத, மனித வளத்தைக் கொண்டு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகப் பறந்து விரிந்து கிடக்கும் இம்மண்ணில், என் மீனவ நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? ரேஷன் அட்டை கிடையாதா? என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? பரம எதிரி நாடான பாகிஸ்தானோ, ஏன், பங்களாதேஷோ கூட செய்யத் துணியாத காரியத்தைச் செய்ய, சுண்டைக்காய் தேசமான இலங்கைக்கு எப்படி வந்தது தைரியம்? நம் மீனவன் தமிழ் பேசுகிறவன் என்ற ஒரே காரணத்தினால் தானே இந்தக் கேவலமான கொலை பாதகச் செயலை செய்யத் துணிகிறான் அந்த இன வெறியன்? அவனுடன் கொஞ்சி விளையாடி ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்வது இந்தியாவுக்கும், அதன் குடிமக்களான எமக்கும் நீங்கள் இழைக்கும் வெட்கக் கேடான, துரோகச் செயல் இல்லையா? இப்படிப் பட்ட இழி நிலைக்குப் பின், நாம் வல்லரசாக மாறினால் என்ன? மாறாவிட்டால்தான் என்ன? தமிழ் செம்மொழியானால் மட்டும், தமிழன் மேன்மை அடைந்துவிட்டான் என்று படம் காட்டலாம் என்று எண்ணமா? இதை விட மேலும் கேவலமான எவ்வளவோ கேள்விகளைக் கேட்கத் தோன்றினாலும், இறையாண்மைக்கு உண்மையில் மரியாதை கொடுத்து, என் இடுகைப் பதிவை அழுக்காக்கிக் கொள்ள விரும்பாமல் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்...

உன் விரலோரக் கவிதைகள்!!!

உன் விரல்களிலிருந்து
வெட்டப் பட்ட
மூன்றாம் பிறைகளில்,
ஒன்றைக் காணவில்லை
என்று, என்
பாழாய்ப் போன
மனதில், புலனாய்வுக்குழு
அமைத்துத் தேடுகிறேன்...
என் கையிலிருந்து
அதைத் தட்டிப்
பறித்துச் சென்ற
காற்றின் மீது,
குண்டர் தடுப்புச்
சட்டம் போடலாம்
என்று உத்தேசம்!!!
அதை ஒருகாலத்தில்,
பதம் பார்த்தது
உன்னுடைய பற்கள்
என்பதால், அவைக்கு
மட்டும் விதி விலக்கு!!!
அந்த விரலோரக்
கவிதை, வருடிப்
போன என்
விரல்களும், கன்னமும்
ஏக்கமாய்க் காத்துக்
கிடக்கின்றன, என்று
கிட்டும் என்று!!!

- கலைபிரியன்

Wednesday, February 2, 2011

நம்ம ராஜாவுக்குத் (CMமுக்குத் தான்) திரும்பிய பக்கமெல்லாம் செக்...

1. மத்திய ஆட்சி முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், தொகுதிப் பங்கீட்டில் முறைத்துக் கொண்டு, அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து விட முடியாது, அப்படியே வந்து விட்டாலும், ராஜாவுக்கு ஆப்புத் தான் (நான் ஆ. ராசாவைச் சொன்னேன், நீங்க வேற... மூத்த தமிழறிஞரைப் பத்தி அப்படிச் சொல்ல முடியுமா... சொன்னால், நமக்குப் புரியாமல், அவருக்கு மட்டுமே புரிந்த தமிழில், முரசொலியில் நம்மளைப் பத்திக் கவிதை எழுதுவார்... நமக்கேன் வம்பு...).

2. காங்கிரசிடம் பிகு செய்வதற்காக, பாமக நம்மக்கிட்ட இருக்குன்னு சும்மானாச்சுக்கும் சொல்லிவச்சு, டாக்டர் அய்யா காண்டாயி மறுப்புத் தெரிவித்து விட்டார். வயசுக் கோளாறுல, அவரு மேல கோபப் பட்டு, "கூட்டணியில் அவர்கள் சேர வாய்ப்பில்லைன்னு" வேற சொல்லிட்டாரு. ராசாவைக் கைது செஞ்சு காங்கிரஸ் பேரம் பேச ஆரபிச்சதும், வடிவேலு ஸ்டைல்ல "அய்யய்யோ, வட போச்சே"ன்னா, யாரு என்ன பண்ண முடியும்...

3. காங்கிரஸ் கோச்சுக்குட்டு போயி கேப்டனோட மூணாவது அணி கச்சேரி வச்சா, அந்தம்மா, டாக்டரை வளைச்சுப் போட்டுக்குச்சுன்னா, அண்ணாவின் தம்பியும், சிறுத்தைகளும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் நிற்கறதுக்கு ஆள் தேடுறதுக்குள்ள, தாவு தீந்து போகும்...

4. இது பத்தாதுன்னு, "மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் தான் இடி, நமக்குத் திரும்பிய பக்கமெல்லாம் தாரை தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்குகிற மாதிரி இடி மேல் இடி"ன்னு, குடும்பத்துல எல்லா சைடுலேருந்தும் ஏகத்துக்கு குத்து விழுகுது...

87 வயசுல இதெல்லாம் ஆவுற கதையா? இவரு வயசுக்கு இருந்திருந்தா, சாணக்கியரே ஒதுங்கி ஓய்வெடுத்துக்கிட்டு இருப்பார்... இவர்னால, அந்தக் கருமத்தையும் எடுக்க முடியாம, ப்ச், பாவமாத் தான்யா இருக்கு...

நம்ம ஆட்சியில, நெடுஞ்செழியனுக்கு (அண்ணாவுக்குப் பின்னாடி, அவரு ஒதுங்கி நமக்கு வழி விட்டாரேங்குற ஒரே மரியாதைக்காவது...) மெரினா பீச்ல இடம் ஒதுக்கி இருந்தா, அந்தம்மாவவது, நமக்கு இடம் ஒதுக்குவது பத்திப் பரிசீலிக்கலாம், இப்ப அதுக்கும், "அய்யய்யோ, வட போச்சே" கத தான்...

யார் ஊனம்!!!

உண்மை பேச மறுப்பவன், "நா" இருந்தும் "ஊமை"...
சூழ்ச்சிக்கு செவிமடுப்பவன், "காது" இருந்தும் "செவிடன்"...
கேடுகளை மட்டுமே காண்பவன், "கண்கள்" இருந்தும் "குருடன்"...
ஓடி ஆடி உழைக்காதவன், "கை கால்கள்" இருந்தும் "ஊனமுற்றவன்"...

"ஊனமுற்றவன்" என்று நாம் யாரைப் பார்த்துச் சொல்லித் திரிகிறோமோ,
உண்மையில், அவனே, இறைவனின் ஞானம் பெற்றவன்...
அவன் தான் மனதில் ஈரமும், மானமும் ஒருங்கே உள்ளவன்...
அவனிடம் கருணை கொண்டு, இனியாவது வாழ்வோம், ஊனமில்லாதவர்களாய்!!!

- கலைபிரியன்