
கண்டிப்பாக ஒரு தெளிவான திட்டமில்லாமல் உணர்ச்சிவசப் பட்டு இந்த உணர்வுப் பூர்வமான பிரச்சனையில் இந்த மன மாற்றத்தை அவர் பிரகடனப் படுத்தியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஒரு வேளை பெரும் வெற்றியை அவர் இந்தத் தேர்தலில் பெற்று விட்டால் ஈழப் பிரச்னையும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றி பெற்ற பின் தனது நிலையில் இருந்து பின் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பதையும், அப்படிச் செய்தால் அதனால் அவரது அரசியல் நம்பகத்தன்மைக்குப் பெரும் பங்கம் வந்து விடும் என்பதையும் நன்கு உணர்ந்தே இவ்வளவு தெளிவான ஒரு நிலையை எடுத்து அதை மக்கள் மத்தியில் ஆணித் தனமாக மைய்யப் படுத்திப் பிரச்சாரம் செய்கிறார்.
கூட்டணிப் பங்கீட்டால் நெருடலில் இருந்து வந்த வைகோவுக்கும் மதிமுகவுக்கும் புரட்சித் தலைவியின் இந்த நிலை மாற்றம் இன்ப அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். காங்கிரஸின் தயவில் ஆட்சி நடத்தும் கலைஞருக்கு பெருத்த அதிர்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும். அவரால் அவ்வளவு தெளிவாக இந்த விஷயத்தில் இறங்கிப் போராட முடியாது என்பதையும், அவருடைய இன்றைய உடல் நிலையில் இந்த நிலை மாற்றம் தனக்குப் பெரிய வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பியே ஜெயலலிதா இந்தத் தருணத்தை முறையாகப் பயன்படுத்தியுள்ளார்.
ஈழப் பிரச்சனையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது ஒரு நெருடலான விஷயமாக இருந்தாலும் கூட, அதனை செய்வது தமிழகத்தில் இதுவே முதல் முறை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் வெற்றி அடைந்தாலும், கூடுதல் பொறுப்பை சுமப்பவராக இருந்தாக வேண்டிய கட்டியதில் இருக்கிறார் ஜெயலலிதா.
ஒரு வேளை அந்தக் கட்டாயத்தில் புதிதாக அமையவிருக்கும் மைய அரசை நிர்பந்தித்து ஓரளவேனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க வைத்தால் கடந்த காலத்தில் இழந்த மக்கள் செல்வாக்கைப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றுவிடுவார் புரட்சித் தலைவி என்பதில் ஐயமில்லை. ஆனால், எதிர் பாராத விதமாக இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் நிலை வந்தாலோ அல்லது மத்திய அரசை ஆட்டிப் படைக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போனாலோ இந்த நிலையில் விடாப் பிடியாக இருந்து எவ்வளவு உறுதியாகப் போராடுவார் என்பதே அவரை அறிந்த மக்களுக்கு மத்தியில் எழும் மில்லியன் டாலர் கேள்வி!!!
1 comment:
Good work Mr Kalaipiriyan...keep it going...
Kumar
Post a Comment