
அரவணைக்க அருகில் இல்லை நீ...
ஆனால், துணைக்கு தினமும் வருகிறாய்...
அட்சய த்ரிதிக்கு செய்கூலி சேதாரம் இல்லை... உன்
அன்புக்கோ விலை மதிப்பில்லை.
மே பத்தாம் தேதி "உலக வரி ஏய்ப்பு தினம்" - ஆம்...
நீ கொடுத்த அன்புக்கு வரி கட்டவில்லை எவனும் இன்னும்...
எங்கள் சுகத்துக்கு உன் துக்கம் மறந்தாய்...
எங்கள் நிம்மதிக்கு உன் தூக்கம் தொலைத்தாய்.
ஒவ்வொரு ஆத்திகனும் போற்றுகின்ற பெரியார் நீ...
ஒவ்வொரு நாத்திகனும் கற்கின்ற கடவுள் நீ...
உன் கோபம் - கொட்டுகின்ற தேள் அல்ல, மீட்டுகின்ற விரல்...
உன் குட்டு - "சுறுக்"கென்ற வலி இல்லை, செதுக்குகிற உளி...
மீட்டாமல் இசை வருவதில்லை வீணையிலிருந்து...
உன் கண்டிப்புத் தான் எங்களை ஓவியமாகத் தீட்டியிருக்கிறது...
செதுக்காமல் வடிந்து விடுவதில்லை சிற்பம்... உன்
அக்கறை இல்லாமல் நாங்கள் வெறும் படிக் கற்கள் - சொற்பம்...
இந்நாளில் உன்னை வாழ்த்துவதைக் கூடக் கடமையாய்
எண்ணியிருக்கிறோம் - எங்களில் பலர்...
இனி வருடமெல்லாம் "அன்னையர் தினம்" ஆக இருந்தாலும் -
வரி ஏய்ப்பிலிருந்து தப்ப முடியாது எங்களால்!!!
No comments:
Post a Comment