
வேக வேகமாக டையை சுற்றிக் கொண்டு, லேப்டாப்பைப் பற்றிக் கொண்டு, காரை நோக்கிச் சென்றான் நிகில். மனதுக்குள் "மணி ஆறரை ஆகுது, நிதானமாகப் போனாலே ஏழு மணி ட்ரெய்னைப் புடிச்சுடலாம்..." என்று சொல்லிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான். அன்றைய ஷேர் மார்க்கெட் செய்திகளில் மூழ்கிக்கொண்டே, மனதில் பலவாறான கணக்கு ஓடிக் கொண்டிருக்க, சீராகப் பயணித்துக் கொண்டிருந்தது கார்.
அவனையும் அறியாமல், வேகம் அதிகரித்து, ஸ்பீட் லிமிட் தாண்டி விட, பின்னால், சைரன் ஓசையுடன், போலீஸ் காரர் வண்டியை நிறுத்தினார். சட்டென்று இவ்வுலகத்துக்கு மீண்டு வந்து, தலையில் அடித்துக் கொண்டே வண்டியை நிறுத்தினான். லைசென்சை வாங்கிப் பார்த்து, பத்து நிமிட நேரம் யாருடனோ வாக்கி டாக்கியில் அளவளாவி விட்டு, டிக்கெட் கிழித்து நீட்டினார். எவ்வளவோ சமாதானம் சொல்லியும், ரோபோட் மாதிரி சொன்னதையே திருப்பி சொல்லிவிட்டு, மெதுவாகப் போகச் சொல்லி அறிவுறுத்திவிட்டுக் கிளம்பினார். நிகில் தன் விதியை நொந்த படியே, மெதுவாக வண்டியைச் செலுத்தினான்.
ஸ்டேஷனில் பார்க் செய்யும் போது மணி ஏழு பத்து. ஏழரை மணி வண்டிக்காகக் காத்திருந்தான். அறிவிப்புப் பலகையில் ஓடியதைப் பார்த்து முகம் சுளித்தான். யாரோ ரயில்வே ட்ராக் குறுக்கே விழுந்ததால் ஏழரை வண்டி விபத்து ஏற்பட்டு விட, 20 நிமிடம் தாமதம் என்று வந்தது. "தற்கொலை செய்து கொள்ள, இவனுக்கு, திங்கள் கிழமை காலை, அதுவும், நம்ம வண்டி தானா கிடைச்சுது. ச்சை. நம்ம நேரம் இன்னைக்கு சரியே இல்லை" என்று நொந்து கொண்டே போனில் ஈமெயில்களைப் புரட்டினான். சற்று நேரத்தில் "பேட்டரி டவுன்" என்று அதுவும் பல்லை இளித்தது. போனை அமர்த்தி விட்டு சற்றே கண் அயர்ந்தான்.
எட்டு மணி ஆனது, மெதுவாக எட்டிப் பார்த்தது அவன் காத்திருந்த ஏழரை மணி வண்டி. அதில் ஏறி ஜன்னல் ஓரமாக ஒரு சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்க வசதியாக சாய்ந்து கொண்டான். ஐ பாட் இருக்கும் நினைவு அப்போது தான் வந்தது. ஆன் செய்து காதில் மாட்டிக் கொண்டான். "Autograph" பாடல் ஓலித்துக் கொண்டிருந்தது.
"எந்த மனிதன் நெஞ்சுக்குள், காயம் இல்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயம் எல்லாம், மறந்து போகும் மாயங்கள்..."
எவ்வளவு யதார்த்தமான வாக்கியம். நினைவலைகளில் மிதக்கத் தொடங்கினான் நிகில். இன்று காலை நடந்த விஷயங்களை விட, மிக மிக கொடூரமான பல திருப்பு முனைகள் அவன் வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக நடந்தேறியிருக்கின்றன. அவ்வளவும் அவன் கனவில் தோன்ற, கண்ணயர்ந்து உறங்கிப் போனான், அவற்றை அசை போட்டுக் கொண்டே. கழுத்திலே மாதாந்திர டிக்கெட்டைத் தொங்க விட்டுக் கொண்டே அவன் அசந்து தூங்கியதால், டிக்கெட் பரிசோதகரும் அவனை எழுப்பாமல் தன் வேலையைத் தொடர்ந்தார்.
ஒரு மணி நேர பயணத்துக்குப் பின், வாஷிங்டன் நகரத்தின் மையப் பகுதியில் தன்னுடைய கடைசி நிறுத்தத்தில் ஒரு பெரிய "க்ரீச்" சத்தத்துடன் நின்றது ட்ரெய்ன். தூக்கம் களைந்து எழுந்த நிகில், அங்குள்ள வாஷ் ரூம் சென்று, முகம் கழுவி விட்டு, நடக்கத் தொடங்கினான். ஏனோ பலவாறான எண்ணம் ஓடிக் கொண்டிருந்ததால், நடையில் ஒரு விதமான தளர்வு.
ஐ பாட் அடுத்த பாடலுக்குத் தாவியது, "எந்திரன்" படத்திலிருந்து...
"புதிய மனிதா... பூமிக்கு வா..."
கேட்டு கொண்டே பாடலில் ஆழ்ந்த நிகில், நடையில் துள்ளலும் சேர்ந்து கொண்டது... தனக்குள்ளே சத்தமாக ஓலித்துக் கொண்டான்... "ஆம், இன்று புதிய நாள்... இதுவும் கடந்து போகும்"!!
- கலை பிரியன்