வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Tuesday, February 8, 2011

முதல்வரின் ஷூவை துடைத்த பாதுகாப்பு அதிகாரி

ஒரு மாநிலத்தில், காவல்துறை உயர் அதிகாரியாக இருக்கக் கூடியவர், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் அவர், யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக, முதல்வரின் செருப்பைத் தன் கைக்குட்டையால் துடைக்கிறார். அதைச் சற்றும் கண்டு கொள்ளாதவராக, முதல்வரும் மற்ற அதிகாரிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில், அரசு நிகழ்ச்சிக்காக ஹெலிகாப்டரில் ஒரு கிராமத்திற்கு முதல்வர் வந்திறங்கியபோதுதான் நிகழ்ந்தது இந்தக் கொடுமை. ஊடகங்களின் வாயிலாக இந்தச் செய்தி அறிந்து பதறிப் போயிருப்பார்கள், இன்றளவிலும் காவல் துறையின் மீது மதிப்பு வைத்திருக்கும் யாவரும். அந்த அதிகாரியின் பணிக் காலம் அண்மையில் முடிந்து, அதனை, முதல்வர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீட்டித்துக் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. தான் வகிக்கும் பொறுப்பான/கண்ணியமான பதவிக்கு சற்றும் ஒவ்வாத இந்த இழி செயலைப் புரியத் துணிகிறார் அந்த அதிகாரி என்றால், அவர் வகிக்கின்ற அந்தப் பதவியால், அந்த முதல்வரால், அவர் பெறுகின்ற பயனானது, நேர்மையாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்தால் அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை, என்பதை எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆயிரமாயிரம் காவல்துறைக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, அங்கிகளை உடலில் சுமந்து கண்ணியமாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இளம் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் இது போன்ற செயல்கள் தவறான முன்னுதாரணங்களாகி  விடுகின்றன. ஆட்சிக் கட்டிலை அலங்கரிப்பவர்கள், கல்வியிலும், துறை சார்ந்த திறமையிலும் தங்களை விட எவ்வளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை வருடிப் பிழைத்தால் மட்டுமே, தத்தம் பணிகளில் மேன்மை அடைய முடியும் என்ற பாடத்தை இது போன்ற நிகழ்வுகளைத் திரும்பத் திரும்பக் கண்டு கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இந்த நிலையை மாற்றக் காவல் துறையை ஏவல் துறையாக மாற்றும் அரசியல்வாதிகள் மாறினால் மட்டும் போதாது. தங்களது தேவைகளையும், பதவி சார்ந்த உயர்வுகளையும் பெறத் தங்கள் திறமையையும், நேர்மையையும், கண்ணியத்தையும் மட்டுமே நம்பாமல், அரசியல்வாதிகளை நம்பி, அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம் மேன்மை அடைய முடியும் என்ற எண்ணத்திலிருந்து அதிகாரிகளும் மாற வேண்டும். மாறுவார்களா?

- கலைபிரியன்

Monday, February 7, 2011

காங்கிரசுக்கும், சோனியாவுக்கும் ஒரு அறிவுரை!!!

செய்தி: தி.மு.க.,வுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச, ஐந்து பேர் கொண்ட குழுவை, காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், டில்லியில் இக்குழுவை இரவு அறிவித்தார்.

கண்ணோட்டம்: முதலில், இந்த ஐந்து தலைவர்களும், கிடைக்கும் தொகுதிகளில், தத்தம் கோஷ்டிக்கு எவ்வளவு சதவீதம் என்று முடிவு செய்ய, மூவர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்தப் பஞ்சாயத்தை முடித்துவிட்டு, அப்புறமாகக் கலைஞரிடம் சென்று பேசட்டும். இல்லாவிட்டால், இந்தப் பஞ்சாயத்தையும், தள்ளாத வயதில், தமிழினத் தலைவரே சமாளிக்க வேண்டி வரும். அப்புறம், குரங்கு அப்பத்தைப் பங்கு வைத்த கதையாகிவிடும். முடிவுக்குப் பின் "அய்யய்யோ, வட போச்சே!" என்று ராகுல், வடிவேலு மாதிரிப் புலம்ப வேண்டியது தான்...

அந்த நாள் ஞாபகம், இல்லையோ?

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் மீதும் குற்றம் சுமத்தி வழக்குப் போட்டிருக்கிறார் சுப்ரமணியம் சுவாமி. அந்த வழக்கை, நீதிமன்றத்திலேயே சந்தித்துத் தான் நிரபராதி என்று நிரூபித்தால், முதல்வரின் அரசியல் நேர்மையை மெச்சிப் பெருமை கொள்ள முடியும். அதை விடுத்து, அவர் தான் சுமத்திய குற்றச்சாட்டுக்களை 24 மணி நேரத்திற்குள்ளாக வாபஸ் பெற வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலமாக சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை வேறு திசைக்குத் திருப்பி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் கலைஞர். தான் தூய்மையானவர் என்றால், வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு நேருக்கு நேர் சந்திக்க முதல்வருக்கு ஏன் தயக்கம்? நீதிமன்றமும் அதனை எளிதாக அனுமத்தித்திருக்கும். கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்துப் போராடிய தைரியசாலிக்கு, இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்க்க யாரும் துணியாத காலத்தில், தானே தெருவில் இறங்கிக் களம் கண்டு எதிர்த்த தன்னிகரில்லாத திராவிடத் தலைவருக்கு, இது ஒரு சர்வ சாதாரணமான விஷயம் இல்லையா? தன்னுடைய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், பக்கம் பக்கமாக, இவர் அளந்து ஆய்ந்திருக்கும் - பெரியார் பாசறையில் தான் பயின்ற, நேர்மைக்கும், தூய்மைக்கும், சுயமரியாதைக் கொள்கைக்கும் நேரெதிரான கலைஞரை அல்லவா, இன்று பார்ப்பதாகத் தோன்றுகிறது?

இந்நிலையில், சமீபத்தில் நான் கேட்ட சில உரைகளும், படித்தறிந்த விஷயங்களும், மேற்கூறிய விஷயத்திற்கு சற்றும் ஒட்டாத பதிவுகளாக எனக்குப் பட்டது.

இன்றைய தமிழகம், மலபார் (கேரளம்), ஆந்திரம், கர்நாடகம் எல்லாம் ஒருங்கினைந்த சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் முதலமைச்சராக, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார். ஒருமுறை, அவர், தனது வாகன ஓட்டுனருடன் குற்றாலம் சென்று, ஒரு சீமானின் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, சில அலுவல் பணிகளையும், தொந்தரவில்லாமல் முடித்துவிட்டு, நான்கு நாட்களில், காரில் திரும்புகிறார். தான் தங்கியிருந்ததற்கான வாடகையைக் கொடுத்து விட்டு, அந்தச் சீமானிடம் இருந்து விடை பெற்றுச் செல்லுகிறார். திரும்புகையில், காரில் "கட கட" என சத்தம்; "கம கம" என மணம். "என்ன", என்று ஓட்டுனரை ரெட்டியார் கேட்க, "ஒன்றுமில்லை", என சமாளிக்கிறார் ஓட்டுனர். வீட்டுக்கு வந்தததும், காரில் இருந்தது பலாப் பழங்கள் எனத் தெரிய வருகிறது, அவருக்கு. ஓட்டுனரிடம் விவரம் கேட்க, அவர், தான் அதை விலை கொடுத்து வாங்கியதாகக் கூறுகிறார். சற்று கடிந்து கேட்கும் பொழுது, தெரியாமல், தான் அந்த சீமானின் தோட்டத்தில் இருந்து எடுத்து வந்து விட்டதாக ஒப்புக் கொண்டார். அவரைக் கடுமையாகக் கண்டித்த ரெட்டியார், அவரிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து (இந்த ஐந்து ரூபாயைக் கொண்டு, அந்தக் காலத்தில் நான்கு நாட்கள் பயணப் பட்டு - வழிச் செலவு உட்பட - சென்னையிலிருந்து குற்றாலம் சென்று திரும்ப முடியும் என்பது வேறு விஷயம்) குற்றாலம் சென்று, அந்தச் சீமானிடம் பழங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு வரும்படி கூறினாராம். தயக்கத்துடன் கிளம்பிய ஓட்டுனரை நிறுத்தி "அந்தச் சீமானிடம், பழங்களைப் பெற்றுக் கொண்டேன் என்று, மறவாமல் எழுதிக் கையொப்பம் பெற்றும் வர வேண்டும்" என்று கூறினாராம். அப்பணியை, அவ்வண்ணமே முடித்து விட்டு வந்த ஓட்டுனர், அடுத்த நாள் காரோட்டிக் கொண்டிருக்கையில், முகம் வாட்டமாகக் காணப் பட்டதைக் கண்ட ரெட்டியார், "என்ன சுப்பையா? ஏன் இப்படி உம்மென்று இருக்கே?" என்று வாஞ்சையாக வினவினாராம். அதற்கு, அவர் "ஐயா, அந்தக் காலணாப் பெறாத பலாப் பழத்துக்காக, ஐந்து ருபாய் செலவு செய்து, நான்கு நாட்களையும் வீணடிக்க வைத்து விட்டீர்களே?" என்று கேட்டாராம் (இப்படி, ஒரு ஓட்டுனர், முதல்வரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கூடிய நிலைமையிலா நாம், இன்று இருக்கிறோம்?). அதற்கு ரெட்டியார், "அவற்றைத் திரும்பக் கொடுத்திருக்காவிட்டால், நாலு நாள் முதல்வர் நம்ம வீட்டில் தங்கி இருந்ததற்கே, அவரின் ஓட்டுனர் பழங்களைத் திருடி விட்டாரே, ஆண்டுக் கணக்காக ஆளும் மாகாணத்தில், முதல்வர் இன்னும் என்னெனத்தைத் திருடுவாரோ என்று நினைத்திருப்பார். அனால், இப்போது, முதல்வர் கையில் இருந்த இந்தக் காலணாப் பெறாத பழங்களே பத்திரமாக வந்து சேர்ந்து விட்டனவே, மாகாணம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்று யோசிப்பார்!!!" என்று விளக்கியவுடன் தான், ஓட்டுனருக்கு வஷயத்தை விளங்கிக் கொள்ள முடிந்ததாம்.

காமராஜர் அமைச்சரவையில் இருந்த மஜீத் என்ற அமைச்சர், விருதுநகருக்கு, ஒரு பணி நிமித்தமாக வந்த போது, அப்படியே, முதல்வர் வீட்டுக்குப் போய், அவரது தாயாரைப் பார்த்து விட்டு வரலாம் என்று வீட்டுக்குச் செல்கிறார். அவர் தாயாருக்கு, இவர் யார் என்று தெரியவில்லை (அப்படிப் பட்டவருக்கு, அமைச்சரவையில் இன்றெல்லாம் இடமே கிடைக்காது என்பது வேறு விஷயம்). தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவுடன், அந்த மூதாட்டி, அவரை வீட்டுக்குள் அழைத்து அமர வைக்கிறார். காமராஜரின் தங்கை, நாகம்மை அம்மையார் எங்கே என்று அமைச்சர் வினவ, அவர் தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளதாக பதில் வருகிறது, அந்த அம்மையாரிடமிருந்து. "முதலமைச்சர் வீட்டுக்குள், குழாய் இணைப்பு இல்லையா" என்று அதிர்ந்த அமைச்சர், இருந்த இடத்தில் இருந்தே, அதிகாரிகளை அழைத்து, குழாய் இணைப்புக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, அதற்குக் கட்டணமாக 24 ரூபாயைக் கட்டி (இன்றைக்கு, லஞ்சமே 24 ஆயிரத்துக்கும் மேல் கொடுக்க வேண்டி வரும்), 12 மணி நேரத்திற்குள்ளாக, முதல்வர் வீட்டில் குழாய் இணைப்புக் கொடுக்கப் பட்டுத் தண்ணீர் வருகிறது.சென்னை திரும்பிய அமைச்சரை, காமராஜர் அழைத்தார். அவர் சற்றும் எதிர்பாராத விதமாக, "மஜீத் பாய், நீங்கள் இந்த நாட்டுக்கு அமைச்சரா, என் வீட்டுக்கு அமைச்சரா? ஏன் என் வீட்டுக்கு, அதிவேகமாய்க் குழாய் இணைப்பு வருவதற்கு, தங்கள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தீர்கள்? இன்னும் 24 மணி நேரத்தில், அந்த இணைப்பைத் துண்டிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து தங்களை விலக்கி வைக்க நேரிடும்" என்று கடிந்து கொண்டு, ஆணையும் பிறப்பித்தார். அவ்வாறே துண்டிக்கப் பட்டது இணைப்பும்.

கொள்கை முழக்கங்கள் இட்டு மேடைகளிலேயே ரத்தம் கக்கும் நிலை வந்த பின்னும், திராவிட/சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்தாமல், அண்ணா காலத்தில் முழக்கமிட்டு வந்தவர் பட்டுக் கோட்டை அழகிரிசாமி (அதே பேரியக்கத்தில், இவரின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப் படும் ஒருவர், இன்றைய மத்திய அமைச்சரவையில், அமைச்சராக இருந்தும், இரண்டாண்டுகளாய் நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட ஒரு கேள்விக்குக் கூட பதில் பேசாத மவுனச் சாமியாராக வீற்றிருக்கிறார் என்பது அந்தப் பெருமகனாரின் பெயருக்கு ஏற்படுத்தப் பட்ட களங்கம் என்பது வேறு விஷயம்). அவர், ஒரு மேடையிலிருந்து, பேசிவிட்டுக் கீழிறங்கியதும் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்டார். தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார். அவருக்கு, அன்றைய தேவைக்கு, சிகிச்சை அளிக்க அண்ணாவிடமோ, கட்சியிடமோ வசதி வாய்ப்பில்லாத நேரம். அந்த சமயத்தில், திருவாரூரில் ஒரு கூட்டத்திற்காக அண்ணாவிடம் தேதி கேட்க, அம்மாவட்டக் கழகச் செயலாளர் வருகிறார். "என்ன செய்ய வேண்டுமோ செய்கிறேன், அண்ணா, தேதி மட்டும் கொடுங்கள்" அன்று கூறிய அவரிடம் அண்ணா வைத்த கோரிக்கை என்ன தேரியுமா? - "பட்டுக்கோட்டை அழகிரிசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கக் கட்சியிடமோ, என்னிடமோ வசதி இல்லை. அவரின் பெயருக்குத் தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனைக்கு 100 ரூபாய்க்கு மணி ஆர்டர் எடுத்து அனுப்பினால், என் கைக்காசைச் செலவழித்து, நானே கூட்டத்துக்கு வருகிறேன்" என்று கூறி அவரை நெகிழ வைத்தாராம் அண்ணா.

மேற்குரிப்பிட்டுள்ளது போல், இன்னும் பற்பல சம்பவங்களைக் குறிப்பிடலாம், அந்தக் காலத்து ஆட்சியாளர்கள், எவ்வளவு நேர்மையாகவும், எளிமையாகவும் ஆட்சிபீடத்தை அலங்கரித்தார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால், இவர்கள் எல்லாம் சொற்ப காலம் அமர்ந்துவிட்டுப் போன நாற்காலியில், ஐந்து முறை அமர்ந்திருப்பவரான இன்றைய முதல்வர், ஏன் இவ்வளவு கீழ்த் தனமாக நடந்து கொள்கிறார் என்பது, அவருக்கும், அவருக்குப் பல்லக்குச் சுமக்கும் ஒரு சிலர்க்கும் மட்டுமே தெரிந்த விஷயம்!!!

- கலைபிரியன்

Sunday, February 6, 2011

தேர்தல்

நாயும், பேயும்
மோதிக் கொள்ள,
ஐந்து மாதங்கள்
கொண்டாட்டம்!!!
ஏதாயினும் ஒன்னு
ஜெயிச்ச பின்னாடி
ஐந்து வருஷம்
திண்டாட்டம்!!!

- கலைபிரியன்

Friday, February 4, 2011

கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்...

கேரளாவில், அந்தக் காலத்திலேயே, பாமாயில் ஊழல், ராசாவுடன் தொலை தொடர்பு செயலாளரா இருந்து ஸ்பெக்ட்ரம் விசாரணையை ஆரம்ப காலத்திலேயே முடக்க முயற்சி செய்தது, மேலும், இப்படிப் பலப் பல "நல்ல" தகுதிகள் வாய்ந்தவரை, அதே ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரித்து வரும் "சிபிஐ"க்கு பொறுப்பான, சக்தி வாய்ந்த, "விஜிலன்ஸ்" துறையின் தலைவராக நியமித்து, "கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்" என்ற புது நடைமுறையைக் கையாண்டிருக்கிறது மத்திய அரசு.

இந்த நியமனத்தைச் செய்யும் பொறுப்பு, பிரதமர் (மன்மோகன் சிங்), நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் (சுஷ்மா ஸ்வராஜ்) மற்றும் உள்துறை அமைச்சர் (ப. சிதம்பரம்) ஆகிய மூவர் அடங்கிய குழுவுக்கு உள்ளது. மேற்கூறிய பிரச்சனைகளைக் குழுவில் தான் எழுப்பி, நியமனத்தை எதிர்த்ததாக, சுஷ்மா சொல்கிறார். அவ்வாறிருந்தும், அவரையே நியானம் செய்வது என்பது ஜனநாயகத்தை இன்றளவும் நம்பும் நெஞ்சங்களை ஈட்டி கொண்டு குத்துவதாக அமைந்துள்ளது. மாற்றுக் கட்சி உறுப்பினர்களை ஒருங்கே கொண்டு செயல்படும் முறை தேய்ந்து வரும் இந்தக் காலத்தில், இது போன்ற நியமனங்களிலாவது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். சோனியாவின் ஆலோசகர்களான வின்சன்ட் ஜார்ஜும், அகமது படேலும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வற்புறுத்தி, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வைத்துள்ளார்கள் என்றொரு செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியப் படுகிறது. நாட்டின் சிறந்த அறிவு ஜீவிகளில் இருவர், அதுவும் அவ்வளவு சக்தி வாய்ந்த பதவிகளில் அமர்ந்திருப்பவர்களே, தனிப் பட்டோரின் விருப்பு வெறுப்பிற்குப் பணிந்து செயல்படுகிறார்கள் என்றால், அவர்களின் கீழ் பணிபுரியும், லட்சக் கணக்கான அதிகாரிகள் எப்படி செயல்பட முடியும், அன்றாடம், நம் நாட்டில். இதில் வல்லரசாகப் போகிறோம் என வாய் கிழியப் பேச்சு வேறு. இப்படிப் பட்ட ஒரு சர்ச்சை மிக்க நியமனத்துக்கு, ஒப்புதலும் அளித்து, அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஜனாதிபதி, இருந்தும், இல்லாததற்குச் சமம். அவர் நம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக இருந்தாலும், அதை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. சுப்ரீம் கோர்ட், சில மாதங்களாக, தனது சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது, இந்த அரசுக்கு எதிராக, இது போன்ற விவகாரங்களில். தாமதமாக நடந்தாலும், அந்த உயரிய நீதி ஆலயமாயினும், சட்டத்தின் மாண்பையும், ஜனநாயகத்தின் மேன்மையையும் உயர்த்திப் பிடிக்கும் என நம்புவோம்.

- கலைபிரியன்

நீ வருவாய் என...

தோன்றுவாய் நீ எனத்
தொடுவானம் பார்த்திருந்தேன்,
தை மாதம் நகர்ந்தபின்னும்
தேடித் திரிந்தேன்,
தெரியவில்லை, நீ எங்கென்று!
தூரலில் நனைந்து, நாம்
துள்ளித் திரிந்த நாட்கள்,
தீக் குச்சி சுண்டிவிட்டுத்,
திண்ணையில் கழித்த காலம், எல்லாம்
தாவி வந்தென், மனதைத்
டவிச் செல்லுதடா...

"வந்துடுரேண்டா", என்று வாஞ்சையாய்ச்
சொல்லிவிட்டுப் போன, என்
நண்பா, என்று திரும்புவாய்
நீ, உன் விடுமுறை முடிந்து?

- கலைபிரியன்

Thursday, February 3, 2011

தமிழக மீனவர் நிலை!!! ஆட்சியாளர்களுக்கு சில கேள்விகள்...

செய்தி - 'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.

கண்ணோட்டம்
- கச்சத் தீவு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டதால்தானே இன்றும் ஈழத்துச் தமிழச்சி மட்டுமல்லாமல், என் தாயகத்தில் உள்ள தமிழச்சியும், அன்றாடம், தாலி அறுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது!!! இன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டு, என்ன, தமிழகத்துக்கே இலங்கைக் கடற் படையினர் வந்து கொலை செய்துவிட்டுச் செல்ல வழி வகுக்கப் போகிறார்களா? அமெரிக்கர்களுக்கும் சீனர்களுக்கும் சற்றும் சளைக்காத, மனித வளத்தைக் கொண்டு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகப் பறந்து விரிந்து கிடக்கும் இம்மண்ணில், என் மீனவ நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? ரேஷன் அட்டை கிடையாதா? என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? பரம எதிரி நாடான பாகிஸ்தானோ, ஏன், பங்களாதேஷோ கூட செய்யத் துணியாத காரியத்தைச் செய்ய, சுண்டைக்காய் தேசமான இலங்கைக்கு எப்படி வந்தது தைரியம்? நம் மீனவன் தமிழ் பேசுகிறவன் என்ற ஒரே காரணத்தினால் தானே இந்தக் கேவலமான கொலை பாதகச் செயலை செய்யத் துணிகிறான் அந்த இன வெறியன்? அவனுடன் கொஞ்சி விளையாடி ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்வது இந்தியாவுக்கும், அதன் குடிமக்களான எமக்கும் நீங்கள் இழைக்கும் வெட்கக் கேடான, துரோகச் செயல் இல்லையா? இப்படிப் பட்ட இழி நிலைக்குப் பின், நாம் வல்லரசாக மாறினால் என்ன? மாறாவிட்டால்தான் என்ன? தமிழ் செம்மொழியானால் மட்டும், தமிழன் மேன்மை அடைந்துவிட்டான் என்று படம் காட்டலாம் என்று எண்ணமா? இதை விட மேலும் கேவலமான எவ்வளவோ கேள்விகளைக் கேட்கத் தோன்றினாலும், இறையாண்மைக்கு உண்மையில் மரியாதை கொடுத்து, என் இடுகைப் பதிவை அழுக்காக்கிக் கொள்ள விரும்பாமல் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்...