வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, February 7, 2011

அந்த நாள் ஞாபகம், இல்லையோ?

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் மீதும் குற்றம் சுமத்தி வழக்குப் போட்டிருக்கிறார் சுப்ரமணியம் சுவாமி. அந்த வழக்கை, நீதிமன்றத்திலேயே சந்தித்துத் தான் நிரபராதி என்று நிரூபித்தால், முதல்வரின் அரசியல் நேர்மையை மெச்சிப் பெருமை கொள்ள முடியும். அதை விடுத்து, அவர் தான் சுமத்திய குற்றச்சாட்டுக்களை 24 மணி நேரத்திற்குள்ளாக வாபஸ் பெற வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலமாக சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை வேறு திசைக்குத் திருப்பி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் கலைஞர். தான் தூய்மையானவர் என்றால், வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு நேருக்கு நேர் சந்திக்க முதல்வருக்கு ஏன் தயக்கம்? நீதிமன்றமும் அதனை எளிதாக அனுமத்தித்திருக்கும். கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்துப் போராடிய தைரியசாலிக்கு, இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்க்க யாரும் துணியாத காலத்தில், தானே தெருவில் இறங்கிக் களம் கண்டு எதிர்த்த தன்னிகரில்லாத திராவிடத் தலைவருக்கு, இது ஒரு சர்வ சாதாரணமான விஷயம் இல்லையா? தன்னுடைய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், பக்கம் பக்கமாக, இவர் அளந்து ஆய்ந்திருக்கும் - பெரியார் பாசறையில் தான் பயின்ற, நேர்மைக்கும், தூய்மைக்கும், சுயமரியாதைக் கொள்கைக்கும் நேரெதிரான கலைஞரை அல்லவா, இன்று பார்ப்பதாகத் தோன்றுகிறது?

இந்நிலையில், சமீபத்தில் நான் கேட்ட சில உரைகளும், படித்தறிந்த விஷயங்களும், மேற்கூறிய விஷயத்திற்கு சற்றும் ஒட்டாத பதிவுகளாக எனக்குப் பட்டது.

இன்றைய தமிழகம், மலபார் (கேரளம்), ஆந்திரம், கர்நாடகம் எல்லாம் ஒருங்கினைந்த சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் முதலமைச்சராக, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார். ஒருமுறை, அவர், தனது வாகன ஓட்டுனருடன் குற்றாலம் சென்று, ஒரு சீமானின் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, சில அலுவல் பணிகளையும், தொந்தரவில்லாமல் முடித்துவிட்டு, நான்கு நாட்களில், காரில் திரும்புகிறார். தான் தங்கியிருந்ததற்கான வாடகையைக் கொடுத்து விட்டு, அந்தச் சீமானிடம் இருந்து விடை பெற்றுச் செல்லுகிறார். திரும்புகையில், காரில் "கட கட" என சத்தம்; "கம கம" என மணம். "என்ன", என்று ஓட்டுனரை ரெட்டியார் கேட்க, "ஒன்றுமில்லை", என சமாளிக்கிறார் ஓட்டுனர். வீட்டுக்கு வந்தததும், காரில் இருந்தது பலாப் பழங்கள் எனத் தெரிய வருகிறது, அவருக்கு. ஓட்டுனரிடம் விவரம் கேட்க, அவர், தான் அதை விலை கொடுத்து வாங்கியதாகக் கூறுகிறார். சற்று கடிந்து கேட்கும் பொழுது, தெரியாமல், தான் அந்த சீமானின் தோட்டத்தில் இருந்து எடுத்து வந்து விட்டதாக ஒப்புக் கொண்டார். அவரைக் கடுமையாகக் கண்டித்த ரெட்டியார், அவரிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து (இந்த ஐந்து ரூபாயைக் கொண்டு, அந்தக் காலத்தில் நான்கு நாட்கள் பயணப் பட்டு - வழிச் செலவு உட்பட - சென்னையிலிருந்து குற்றாலம் சென்று திரும்ப முடியும் என்பது வேறு விஷயம்) குற்றாலம் சென்று, அந்தச் சீமானிடம் பழங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு வரும்படி கூறினாராம். தயக்கத்துடன் கிளம்பிய ஓட்டுனரை நிறுத்தி "அந்தச் சீமானிடம், பழங்களைப் பெற்றுக் கொண்டேன் என்று, மறவாமல் எழுதிக் கையொப்பம் பெற்றும் வர வேண்டும்" என்று கூறினாராம். அப்பணியை, அவ்வண்ணமே முடித்து விட்டு வந்த ஓட்டுனர், அடுத்த நாள் காரோட்டிக் கொண்டிருக்கையில், முகம் வாட்டமாகக் காணப் பட்டதைக் கண்ட ரெட்டியார், "என்ன சுப்பையா? ஏன் இப்படி உம்மென்று இருக்கே?" என்று வாஞ்சையாக வினவினாராம். அதற்கு, அவர் "ஐயா, அந்தக் காலணாப் பெறாத பலாப் பழத்துக்காக, ஐந்து ருபாய் செலவு செய்து, நான்கு நாட்களையும் வீணடிக்க வைத்து விட்டீர்களே?" என்று கேட்டாராம் (இப்படி, ஒரு ஓட்டுனர், முதல்வரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கூடிய நிலைமையிலா நாம், இன்று இருக்கிறோம்?). அதற்கு ரெட்டியார், "அவற்றைத் திரும்பக் கொடுத்திருக்காவிட்டால், நாலு நாள் முதல்வர் நம்ம வீட்டில் தங்கி இருந்ததற்கே, அவரின் ஓட்டுனர் பழங்களைத் திருடி விட்டாரே, ஆண்டுக் கணக்காக ஆளும் மாகாணத்தில், முதல்வர் இன்னும் என்னெனத்தைத் திருடுவாரோ என்று நினைத்திருப்பார். அனால், இப்போது, முதல்வர் கையில் இருந்த இந்தக் காலணாப் பெறாத பழங்களே பத்திரமாக வந்து சேர்ந்து விட்டனவே, மாகாணம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்று யோசிப்பார்!!!" என்று விளக்கியவுடன் தான், ஓட்டுனருக்கு வஷயத்தை விளங்கிக் கொள்ள முடிந்ததாம்.

காமராஜர் அமைச்சரவையில் இருந்த மஜீத் என்ற அமைச்சர், விருதுநகருக்கு, ஒரு பணி நிமித்தமாக வந்த போது, அப்படியே, முதல்வர் வீட்டுக்குப் போய், அவரது தாயாரைப் பார்த்து விட்டு வரலாம் என்று வீட்டுக்குச் செல்கிறார். அவர் தாயாருக்கு, இவர் யார் என்று தெரியவில்லை (அப்படிப் பட்டவருக்கு, அமைச்சரவையில் இன்றெல்லாம் இடமே கிடைக்காது என்பது வேறு விஷயம்). தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவுடன், அந்த மூதாட்டி, அவரை வீட்டுக்குள் அழைத்து அமர வைக்கிறார். காமராஜரின் தங்கை, நாகம்மை அம்மையார் எங்கே என்று அமைச்சர் வினவ, அவர் தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளதாக பதில் வருகிறது, அந்த அம்மையாரிடமிருந்து. "முதலமைச்சர் வீட்டுக்குள், குழாய் இணைப்பு இல்லையா" என்று அதிர்ந்த அமைச்சர், இருந்த இடத்தில் இருந்தே, அதிகாரிகளை அழைத்து, குழாய் இணைப்புக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, அதற்குக் கட்டணமாக 24 ரூபாயைக் கட்டி (இன்றைக்கு, லஞ்சமே 24 ஆயிரத்துக்கும் மேல் கொடுக்க வேண்டி வரும்), 12 மணி நேரத்திற்குள்ளாக, முதல்வர் வீட்டில் குழாய் இணைப்புக் கொடுக்கப் பட்டுத் தண்ணீர் வருகிறது.சென்னை திரும்பிய அமைச்சரை, காமராஜர் அழைத்தார். அவர் சற்றும் எதிர்பாராத விதமாக, "மஜீத் பாய், நீங்கள் இந்த நாட்டுக்கு அமைச்சரா, என் வீட்டுக்கு அமைச்சரா? ஏன் என் வீட்டுக்கு, அதிவேகமாய்க் குழாய் இணைப்பு வருவதற்கு, தங்கள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தீர்கள்? இன்னும் 24 மணி நேரத்தில், அந்த இணைப்பைத் துண்டிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து தங்களை விலக்கி வைக்க நேரிடும்" என்று கடிந்து கொண்டு, ஆணையும் பிறப்பித்தார். அவ்வாறே துண்டிக்கப் பட்டது இணைப்பும்.

கொள்கை முழக்கங்கள் இட்டு மேடைகளிலேயே ரத்தம் கக்கும் நிலை வந்த பின்னும், திராவிட/சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்தாமல், அண்ணா காலத்தில் முழக்கமிட்டு வந்தவர் பட்டுக் கோட்டை அழகிரிசாமி (அதே பேரியக்கத்தில், இவரின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப் படும் ஒருவர், இன்றைய மத்திய அமைச்சரவையில், அமைச்சராக இருந்தும், இரண்டாண்டுகளாய் நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட ஒரு கேள்விக்குக் கூட பதில் பேசாத மவுனச் சாமியாராக வீற்றிருக்கிறார் என்பது அந்தப் பெருமகனாரின் பெயருக்கு ஏற்படுத்தப் பட்ட களங்கம் என்பது வேறு விஷயம்). அவர், ஒரு மேடையிலிருந்து, பேசிவிட்டுக் கீழிறங்கியதும் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்டார். தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார். அவருக்கு, அன்றைய தேவைக்கு, சிகிச்சை அளிக்க அண்ணாவிடமோ, கட்சியிடமோ வசதி வாய்ப்பில்லாத நேரம். அந்த சமயத்தில், திருவாரூரில் ஒரு கூட்டத்திற்காக அண்ணாவிடம் தேதி கேட்க, அம்மாவட்டக் கழகச் செயலாளர் வருகிறார். "என்ன செய்ய வேண்டுமோ செய்கிறேன், அண்ணா, தேதி மட்டும் கொடுங்கள்" அன்று கூறிய அவரிடம் அண்ணா வைத்த கோரிக்கை என்ன தேரியுமா? - "பட்டுக்கோட்டை அழகிரிசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கக் கட்சியிடமோ, என்னிடமோ வசதி இல்லை. அவரின் பெயருக்குத் தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனைக்கு 100 ரூபாய்க்கு மணி ஆர்டர் எடுத்து அனுப்பினால், என் கைக்காசைச் செலவழித்து, நானே கூட்டத்துக்கு வருகிறேன்" என்று கூறி அவரை நெகிழ வைத்தாராம் அண்ணா.

மேற்குரிப்பிட்டுள்ளது போல், இன்னும் பற்பல சம்பவங்களைக் குறிப்பிடலாம், அந்தக் காலத்து ஆட்சியாளர்கள், எவ்வளவு நேர்மையாகவும், எளிமையாகவும் ஆட்சிபீடத்தை அலங்கரித்தார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால், இவர்கள் எல்லாம் சொற்ப காலம் அமர்ந்துவிட்டுப் போன நாற்காலியில், ஐந்து முறை அமர்ந்திருப்பவரான இன்றைய முதல்வர், ஏன் இவ்வளவு கீழ்த் தனமாக நடந்து கொள்கிறார் என்பது, அவருக்கும், அவருக்குப் பல்லக்குச் சுமக்கும் ஒரு சிலர்க்கும் மட்டுமே தெரிந்த விஷயம்!!!

- கலைபிரியன்

2 comments:

மதுரை சரவணன் said...

nalla uthaaranakaludan sariyaana kelvikal. intha kaalaththu arasiyal vera... pakirvukku vaalththukkal

Nathan Ram said...

வாழ்த்துக்கு நன்றி, சரவணன்...