வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, March 9, 2011

விவாதக் களம் I... வள்ளுவன் பெண்ணுரிமையில் வரலாற்றுப் பிழை செய்துவிட்டானா?

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"

என்று ஆண்பாலைச் சுட்டி வள்ளுவன் எழுதிய குறளின், அதே பொருளுக்கொத்த பாரதியின் பாடற் பகுதி...

"... மெச்சி உனை ஊரார் புகழும் போதே, என் மேனி சிலிர்க்குதடி..."

எனப் பெண்டிரைச் சுட்டிப் பாடியிருக்கிறான் முண்டாசுக் கவிஞன்.

வள்ளுவனின் பிழையைச் சரி செய்யவே இப்பதிவை பாரதி செய்தானா?

வள்ளுவனுக்கென்ன பாலைக் குறிக்காமல் கருத்தைப் பதிவு செய்ய வார்த்தைக்கா பஞ்சம்? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது... உங்கள் கருத்துக்களை இவ்விடுகையின் மறுமொழியாகப் பதிவு செய்யுங்களேன்?

- கலைபிரியன்

கேள்விப்பட்டது...

சமீபத்தில் ஒரு சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது... அதில் நான் கேட்ட இரண்டு மிகச் சிறந்த கவிகளின் வாழ்வில் ஏற்பட்ட மிக சுவாரஸ்யமான சம்பவங்களை இவ்விடுகையில் பதிவு செய்ய விழைகிறேன்...

1. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இவர்,  இளம் பிராயத்தில், கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். அவர்கள் இல்லத்தில் ஒரு பழக்கம். யாருக்கேனும் பிறந்த நாள் என்றால், வீட்டுக் கூடத்தின் நடுவே வைக்கப் பட்டுள்ள ஏட்டில், எல்லோரும் தத்தம் வாழ்த்துக்களை, பிறந்தநாள் கொண்டாடுவோருக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரின் பிறந்த நாள் அன்று அவரது தாயார் என்ன எழுதினார் தெரியுமா? - "ஆண்டவா, எனது மற்ற பிள்ளைகள் எல்லாம் மருத்துவர், வக்கீல், பொறியாளர் என ஏதோ வகையில் பொறுப்பானவர்களாக திகழ்கிறார்கள். இவன் மட்டும் ஏனோ கவிதை. கவிதை என்று பொழுதைக் கழிக்கிறானே... இவன் விரைவில் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய அருள் புரியுங்கள், இறைவா..." என்று தனது விருப்பத்தையும், வேண்டுதலையும், வாழ்த்தையும், ஒரு கவலையான தாயின் கோணத்தில் பதிவு செய்திருந்தார்...

இது நடந்து கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், நமக்கு அந்தக் குடும்பத்திலிருந்து நீங்காமல் நினைவில் இருப்பவர், இந்தக் கவி மட்டும் தான். அந்தக் குடும்பத்தில், மற்றவர்கள் அன்றைய நிலையில் எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்திருந்தாலும், அவர்கள் யாரையும் நாம் நினைத்துக் கூடப் பார்க்க வாய்ப்பில்லை. "உனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை, விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி, மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் இல்லாமல், உன்னுடைய மனசாட்சியின் படி, பின் தொடர்ந்து, முயற்சி செய்து நிறைவேற்றுவாயாயின், அதுவே சுயதர்மத்தின் அடிப்படையில் நீ வாழ்பவன் என்பதற்கு அடையாளம்" என்ற கீதோபதேசத்துக்கேற்ப வாழ்ந்த அந்தக் கவி...

இரண்டு நாடுகளுக்குத் தேசிய கீதம் படைத்த, (ஆம் - உலகில் வேறு யாருக்குமே இல்லாத புகழ் இவருக்கு உண்டு - இந்தியாவுக்கும், வந்காளதேசத்துக்கும், இவர் எழுதிய பாடல்கள் தான் தேசிய கீதங்கள்), "ரபீந்திரநாத் தாகூர்"...

2. இளம் வயதில் மறைந்தவர் இவர். இவரது மனைவி, பின்னாளில் எழுதிய சுயசரிதையில் இவர்களது வாழ்வில் நிகழ்ந்த, ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பதிவு செய்கிறார். இருவரும் திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலைக்குச் செல்கிறார்கள். கவி சற்று உணர்ச்சி (எவ்வித உணர்ச்சியாக இருந்தாலும்) மிகுதியானவர். புலிக் கூண்டுக்கு அருகில் அவர்கள் செல்கையில், புலி தூங்கிக் கொண்டிருந்தது. நமது கவி அதனருகில் சென்று, "நீ காட்டுக்கு ராஜா, நான் நாட்டுக்கு ராஜா... ஹை... ராஜாவுக்கு ராஜ தொட்டுப் பேசிக்கொள்ளலாமா..." என்று கூண்டுக்குள் கை விட்டுத் தொடப் போனார்... மனைவிக்கு வியர்த்துப் போனது... அவரிடம் பயம் வேறு... மெதுவாக அவரிடம்.. "அதெல்லாம் வேண்டாமே, எதனா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போறது..." என்று சொல்லியிருக்கிறார்... "நீ சும்மா இரு..." என்று செல்லமாகக் கடிந்து கொண்டு, தொடும் தன் முயற்சியைத் தொடர்ந்தார் கவி... மனைவி தன் மனதுக்குள்ளேயே எண்ணிக் கொண்டாராம் - "அய்யோ, ஆண்டவா... இவருக்கு இல்லா விட்டாலும், அந்தப் புலிக்காவது நல்ல புத்தியைக் கொடு" என்று...

பதிவு செய்தவர் - "செல்லம்மாள் பாரதி" கவி - "மகாகவி சுப்ரமணிய பாரதி"

- கலைபிரியன்

Tuesday, March 8, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள்


தாயின் தண்ணீர்க் குடம் உடையத்
தளிர்களாய்த் தவழ்ந்தோம் நாம், இப்பூவுலகில்...
ஈரைந்து மாதங்கள் நம்மை, சுகமாய்ச் சுமப்பதற்கும்,
இரும்பு மனமன்றோ படைத்தாள் அன்று...

தமக்கையாய்த் தாங்கி நின்றாள், தங்கையாய்ப்
பாசம் காட்டித் தோழியாய்த் தினமும் வந்தாள்...
நம்மிடம் காதலியாய்த் தன்னை இழந்தவள்,
பின்னர் மனையாளாய் முற்றும் துறந்தாள்...

நமக்கவள் மகளாய்ப் பிறக்கையிலே, மட்டற்ற
மகிழ்ச்சி... மா தவம் வென்றது போல் ஒரு உணர்ச்சி...
கொடுத்துச் சிவந்த கரம் கர்ணனுக்குப் பின், நம்
வாழ்வில் வந்து போகும் மகளிர்க்குத் தானுண்டு...

தன்னைக் கொடுக்கும் தாய்க்குப் பின், அன்பைப்
பொழியும் தமக்கையாய்/தங்கையாய் உருப்பெற்று,
தோழியாய்த் தோள் கொடுத்துக், காதலியாய்க் கணை
தொடுத்து, மனையாளாய் மொத்தமும் தந்து...

பின்பு மகளாய்க் குலம் தழைக்கும் - மகளிற்கு வாழ்த்துச் சொல்ல,
நேரம் ஒதுக்குவோம் இன்று... மூன்றில் ஒரு பங்கை
ஒதுக்க (33%) அதிகாரம் நமக்கில்லை... நம் இதயத்தை
முழுதாய் ஒதுக்கிடுவோம் அவளுக்கென்று...

- கலைபிரியன்

Monday, March 7, 2011

கலைஞர் பராசக்தி ரேஞ்சுக்கு ஒரு சின்ன வசனம் பேசுறார் கேளுங்கோ (ஒன்லி சேம்பிள்)...


நீதிபதி - உங்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றத்துக்கு என்ன சொல்கிறீர்கள்?

கலைஞர் - மக்கள் மன்றம், பல மெர்சலான டுபாகூருங்களப் பாத்துக்கீது. ஆனால், இந்த மேட்டர் ஒண்ணியும் புச்சில்ல, நான்காட்டியும் ஒண்ணியும் பெரிய பிச்கோத்தில்ல. ஒரு நாலு ஜென்ரேஷனா, பாக்கிட்டு அச்சினுகீரேன்... ச்பெக்ற்றத்துல யாருக்கும் குட்காம சுட்டிகினேன், சீட்டுக் கேட்டா ரப்சரு பண்றேன், லெட்டரு எழுதியே வீணாப் போனேன் - இப்புடீன்னேல்லாம் கட்டம் கட்டிக்குரீங்கோ எம்மேல... நான் செய்லன்னு சொல்லிகுவேன்னு நென்சியா? அத்தான் கெடயாது... நான்தாண்டா செஞ்சிகுனேன்... நான் இன்ன, என்கு மட்டுமா சுட்டேன்... கட்டிகினது, பெத்துக்கினது, அதுங்க பெத்துக்கினதுக்கெல்லாம், யாரு - உங்கப்பனா வந்து சுடுவான்? ரப்சரு தாண்டா பண்றேன்... ஏன் குடும்பத்துல குடுக்குற கொட்சலுக்கு, அமெரிக்காவுல தமிழ் நாடு எலக்ஷன நட்துனாக் கூட, அதுங்க ரெகமண்டேஷனுக்கே தொகுதீங்க பத்தாது... உன்கிட்ட குட்துட்டு, அதுங்க கைல யாரு வை வாங்கறது... அப்புறமா என்னமோ சொல்லிகுனியே... ஆங், ஞாபகம் வந்துட்ச்சு... லெட்டரு - யோவ், இம்மாங்காலமா அர்சியல்ல ஒட்டிகினதுக்கு, இத மட்டும் தான் நான் சொந்தமா செய்யுறேன்... அதுவும் கூடாதுன்னா - பட்டா, தார் தாரக் கீசிக் கூவத்துல கடாசீடுவேன்... இன்னா நென்சிக்குன நீயி... இன்னும் நெறைய கீதுயா, நான் எழுதினது... ஆனா பச்ச பச்சையாக் கீது... அதனால இத்தோட அபீட்டாயிக்குரேன்... உன்னால ஆனத செஞ்சிக்க...

- கலைபிரியன்

அதிகார வர்க்கத்தின் கைப் பாவைகளாய்த் தனி அதிகாரம் கொண்ட உயர் அமைப்புகள்... மாறுமா இந்தியாவின் நிலைமை?

  • என் தலைவர் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு எனக்கு வாக்களியுங்கள்...
  • எதிர்க் கட்சித் தலைவர் சரியில்லை...
  • எதிர்க் கட்சியினருக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை...
  • அவர்கள், தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்...
  • அன்று அவர்கள் செய்ததை விட நாங்கள் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை...
  • என்னுடைய வாக்குறுதிகள் சாத்தியமானதா இல்லையா என்று தெரியாவிட்டாலும், எனக்கு வாக்களித்தால், அவற்றை நிறைவேற்றுவேன்...
  • காமராஜர் ஆட்சி அமைக்கக் கை கொடுங்கள்...
  • எம் ஜி ஆர் ஆட்சி அமைய ஆதரவளியுங்கள்...
  • வாஜ்பாய் ஆட்சி அமைய வழி விடுங்கள்...
  • எங்கள் ஆட்சி வந்தால் தமிழகம் அமைதிப் பூங்காவாய்த் திகழும்... பாலாரும் தேனாறும் ஓடும்...
மேற்குறிப்பிட்டுள்ள வாசகங்களில் பாதிக்குமேற்பட்டவைகளை சொல்லிச் சொல்லியே வேட்பாளர்கள், இந்நாள் வரை நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். காலம் மாற மாற, நவீனமான முறைகளில், கட்டுக் கட்டாக நோட்டுக்களைக் கொடுப்பதுவும், அன்பளிப்புக் கொடுப்பதும், உற்சாக பானம் மற்றும் பிரியாணி விருந்து அளிப்பதுவும், பரவிக் கிடக்கின்றன. தேர்தல் கமிஷனின் கண்ணில் மண்ணைத் தூவும் விதமாக, தங்கள் கட்சித் தலைமைக் குடும்பத்தில் யாருக்காவது பிறந்த நாள் வந்தால், அதற்காக விழா எடுத்து, விளையாட்டு/கோலம் என ஏதாவது போட்டி வைத்து, வெற்றி பெறுவோருக்கு மட்டுமல்லாமல், கலந்து கொள்ள வரும் அனைவருக்கும் பரிசு என்ற பெயரில் லஞ்சம் கொடுக்கும் நாகரிகமும் வளர்ந்துள்ளதாகக் கேள்விப் படுகிறோம். பாமரர்கள் தலையில் எப்படி எல்லாம் மிளகாய் அரைக்க முடியுமோ, அவ்வாறெல்லாம் அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பேரம் பேசிக் கறக்கிறார்கள். இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில், இப்படிப் பட்ட விஷயங்கள் நிமிடத்துக்கு நிமிடம் ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப் பட்டாலும், அவற்றைக் கண்டு கொள்ளாமல், ஒரு கூட்டம், "ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால்தான் எனக்கென்ன... எனக்கு சம்பளம் வருகிறதா, வீட்டில் இன்டர்நெட் இணைப்புத் தடை படாமல் இருக்கிறதா, எந்த வெளிநாட்டுக்கு அடுத்த மாதம் விடுமுறைக்குக் குடும்பத்துடன் உல்லாசச் சுற்றுலா செல்வது, மாயாஜாலில் எத்தனை மணிக்கு எந்தப் படம் காட்டுகிறார்கள், வாரா வாரம் வீட்டில் படம் பார்க்கத் திருட்டு வி சீ டீ க்கள் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றனவா, இத்தியாதி இத்தியாதி..." எனப் பொறுப்பான சிந்தனையுடனே காலத்தைக் கழித்துவிடுகிறார்கள். இவர்களது வோட்டுப் பதிவாகிறதா, இல்லையா, கள்ள வோட்டாகி விடுகிறதா, (இன்னும் சில பேர்) வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூடக் கண்டுகொள்வதில்லை. பாமரன் படும் கஷ்டமும், ஊழல் விவகாரங்களும், இவர்களைப் பொறுத்தவரை, உணவு மற்றும் தம் இடைவேளைகளில் அரட்டை அடிக்க மட்டும் தான், வெறும் வாய்க்கு மெல்லக் கிடைத்த அவலாகிக் கொண்டிருக்கிறது.

இப்படிப் பட்ட அவல நிலையைக் களைய வேண்டுமென்றால், இவற்றால் ஆதாயமடையும் மக்கள் பிரதிநிதிகளையும், காலங்காலமாக இப்படியே இருந்து பழகிப் பாழாய்ப் போன சுகவாசிகளையும், மூளைச் சலவை செய்யப் பட்ட பாமரனையும் நம்பிப் பிரயோசனம் இல்லை.

நேர்மையாகத் தேர்தல் நடத்தப் படுகிறது என்பதைக் காட்டிக் கொள்ளத் தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் முயன்றாலும், பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி நடத்தப் படும் கேலிக் கூத்தாகவே நடைபெற்று முடிகிறது ஒவ்வொரு தேர்தலும். தேர்தல்களுக்கு மூன்று மாதம் முன்னர் தொடங்கி, ஒரு மாதம் கழித்து முடிந்து போகிற ஒரு சம்பிரதாயப் பணியாகவே, தேர்தல் ஆணையத்தின் பணி அமைந்துவிட்டது நமது நாட்டின் சாபக் கேடு. வாக்குரிமையின் முக்கியத்துவத்தையும், விஷயங்கள் அறிந்து வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வாக்காளர்களுக்கு விதைக்க வேண்டிய பணியைத் தேர்தல் ஆணையம், தேர்தல் இல்லாத காலங்களிலும், திட்டங்கள் வகுத்து, இடைவிடாது ஆற்றத் தொடங்கினால் மட்டுமே நமது நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும். இல்லையென்றால் விடியாத இருளில் மூழ்கி இருப்பதைத் தவிர, நமக்கு வழியொன்றும் கிடையாது.

தேர்தல் ஆணையத்தின் இப்பணியை, அரசியல்வாதிகளின் குறுக்கீடின்றிச் செய்ய அனுமதிக்க நீதித் துறையும், குடியரசுத் தலைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், தனி அதிகாரம் கொண்ட இது போன்ற அமைப்புக்கள் அதிகார வர்க்கத்தின் கைப் பாவைகளாக மாற அனுமதித்ததன் விளைவைத் தான், நாம் இன்று எதிர்கொள்கிறோம்.

நிலைமை இனியேனும் மாறட்டும் என்று நம்ப மட்டுமே நம்மால் முடியும்... எட்ட வேடியவர்கள் காதில் இந்தக் கோரிக்கை என்றாவது ஒரு நாள் எட்டும் என்பதை மட்டும் நம்பி...

- நாட்டின் மேல் பற்றுக் கொண்ட, ஒரு சராசரிக் குடிமகன் (கலைபிரியன்)...

Thursday, March 3, 2011

தேடல் தொலைக்காதே, மானுடா...


இரண்டாம் தேவன் தேடு
மூன்றாம் கண்ணைத் திற
நான்காவது உலகம் அமை
ஐந்தாவது வேதம் சமை
ஆறாவது தந்திரம் அறி
ஏழாம் சுவை போற்று
எட்டாவது அதிசயம் தெளி
ஒன்பதாம் திக்கில் தோன்று
பத்தாம் ரசமும் கல்...
மனசாட்சி மட்டும், என்றும் -
ஒன்றாய் இருக்கட்டும்...
பசித்திரு, விழித்திரு,
பண்பாடு போற்று,
நாகரிகம் நாடு, வாழ்வில்
தேடல் உள்ளவரை
சரித்திரம் புகழும் உனை...
ஆக்கம் தொலைத்துவிட்டால்,
அழிவை மட்டும் நினை...
ஊக்கம் வேண்டுமென்றால்
அறிவு மழையில் நனை!!!

- கலைபிரியன்

Wednesday, March 2, 2011

தேர்தல் - 2011 - பிணம் தின்னிக் கழுகுகள் வருகுது, பராக், பராக்!!!

கர்ம வீரர் கரம் பற்றி, இவர்கள்
கடமை ஆற்றிய கதையெல்லாம்...
காலமெல்லாம் மறந்திருப்போர், தூசி
தட்டித் துடைத்தெடுப்பார்... "வெண் தாடி
வேந்தர்" என்றும், "வைக்கம் வீரர்" என்றும்,
மேடையேறிப் புகழ்ந்திடுவார், தனிமையில்
இவர் திட்டித் தீர்த்த தந்தைப் பெரியாரை...
"பொன்மனச் செம்மலின் மறுபதிப்பே, தான் தான்"
என்று போகுமிடமெல்லாம், தற்பெருமை
பேசிடுவார், தம்பட்டம் அடித்திடுவார்...
பேரறிஞரின் பாசறையில், இவர் பக்குவமாய்ப் பயின்ற கதை,
பாரெங்கும் பரைந்திடுவார், பின்பு bar எங்கும் பருகிடுவார்...

முகமூடி அணிந்து இவர் முரசு அறைவது, முற்றும்
பொய் என்று புரியும் நமக்கு... சூரியச் சின்னம் காட்டிச்
சூறை ஆடுவோர் இவரென்றும், இலை மறை,
காய் மறை ஊழல் புரிவோர் இவரென்றும், கை
தேர்ந்த கயவர்கள் இவர்கள் தானென்றும், மாம்பழமாய்
இனிக்கப் பேசி மயக்கிட வல்லோரென்றும் - இவ்வளவும்
நன்றாகத் தெரிந்திருந்தும், "ஏமாறுவது என் பிறப்புரிமை"
என்று, இன்னும் எத்தனை நாள் தான் வாழ்வதாய் உத்தேசம்?
உன் கண் முன்னால் அழிகிறது உன் தேசம்...
விழிப்புடன் வரவேற்போம் பிணம் தின்னிக் கழுகுகளை...
விவரமாய் விரட்டிடுவோம், பணம் கொத்தும் பருந்துகளை...
ஓட்டுக்கு விலை வைத்தால், சீட்டுக்கு வேட்டு வைப்போம்...
உறுதியுடன், நம் ஊர் காக்கப் புறப்படுவோம், வாருங்கள்!!!

உன் உளம் பகரும் ஒருவனுக்கு ஓட்டுப் போடு...
அல்லது, "ஜெமினி" ஸ்டைலில் "ஓ" போடு, 49 "ஓ" போடு...
ஆக மொத்தம், வீணாகக் கூடாது உன் ஓட்டுரிமை...
பாழாகக் கூடாது உன் சந்ததியின் ஏட்டுரிமை!!!

- கலைபிரியன்