வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, March 7, 2011

அதிகார வர்க்கத்தின் கைப் பாவைகளாய்த் தனி அதிகாரம் கொண்ட உயர் அமைப்புகள்... மாறுமா இந்தியாவின் நிலைமை?

  • என் தலைவர் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு எனக்கு வாக்களியுங்கள்...
  • எதிர்க் கட்சித் தலைவர் சரியில்லை...
  • எதிர்க் கட்சியினருக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை...
  • அவர்கள், தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்...
  • அன்று அவர்கள் செய்ததை விட நாங்கள் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை...
  • என்னுடைய வாக்குறுதிகள் சாத்தியமானதா இல்லையா என்று தெரியாவிட்டாலும், எனக்கு வாக்களித்தால், அவற்றை நிறைவேற்றுவேன்...
  • காமராஜர் ஆட்சி அமைக்கக் கை கொடுங்கள்...
  • எம் ஜி ஆர் ஆட்சி அமைய ஆதரவளியுங்கள்...
  • வாஜ்பாய் ஆட்சி அமைய வழி விடுங்கள்...
  • எங்கள் ஆட்சி வந்தால் தமிழகம் அமைதிப் பூங்காவாய்த் திகழும்... பாலாரும் தேனாறும் ஓடும்...
மேற்குறிப்பிட்டுள்ள வாசகங்களில் பாதிக்குமேற்பட்டவைகளை சொல்லிச் சொல்லியே வேட்பாளர்கள், இந்நாள் வரை நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். காலம் மாற மாற, நவீனமான முறைகளில், கட்டுக் கட்டாக நோட்டுக்களைக் கொடுப்பதுவும், அன்பளிப்புக் கொடுப்பதும், உற்சாக பானம் மற்றும் பிரியாணி விருந்து அளிப்பதுவும், பரவிக் கிடக்கின்றன. தேர்தல் கமிஷனின் கண்ணில் மண்ணைத் தூவும் விதமாக, தங்கள் கட்சித் தலைமைக் குடும்பத்தில் யாருக்காவது பிறந்த நாள் வந்தால், அதற்காக விழா எடுத்து, விளையாட்டு/கோலம் என ஏதாவது போட்டி வைத்து, வெற்றி பெறுவோருக்கு மட்டுமல்லாமல், கலந்து கொள்ள வரும் அனைவருக்கும் பரிசு என்ற பெயரில் லஞ்சம் கொடுக்கும் நாகரிகமும் வளர்ந்துள்ளதாகக் கேள்விப் படுகிறோம். பாமரர்கள் தலையில் எப்படி எல்லாம் மிளகாய் அரைக்க முடியுமோ, அவ்வாறெல்லாம் அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பேரம் பேசிக் கறக்கிறார்கள். இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில், இப்படிப் பட்ட விஷயங்கள் நிமிடத்துக்கு நிமிடம் ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப் பட்டாலும், அவற்றைக் கண்டு கொள்ளாமல், ஒரு கூட்டம், "ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால்தான் எனக்கென்ன... எனக்கு சம்பளம் வருகிறதா, வீட்டில் இன்டர்நெட் இணைப்புத் தடை படாமல் இருக்கிறதா, எந்த வெளிநாட்டுக்கு அடுத்த மாதம் விடுமுறைக்குக் குடும்பத்துடன் உல்லாசச் சுற்றுலா செல்வது, மாயாஜாலில் எத்தனை மணிக்கு எந்தப் படம் காட்டுகிறார்கள், வாரா வாரம் வீட்டில் படம் பார்க்கத் திருட்டு வி சீ டீ க்கள் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றனவா, இத்தியாதி இத்தியாதி..." எனப் பொறுப்பான சிந்தனையுடனே காலத்தைக் கழித்துவிடுகிறார்கள். இவர்களது வோட்டுப் பதிவாகிறதா, இல்லையா, கள்ள வோட்டாகி விடுகிறதா, (இன்னும் சில பேர்) வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூடக் கண்டுகொள்வதில்லை. பாமரன் படும் கஷ்டமும், ஊழல் விவகாரங்களும், இவர்களைப் பொறுத்தவரை, உணவு மற்றும் தம் இடைவேளைகளில் அரட்டை அடிக்க மட்டும் தான், வெறும் வாய்க்கு மெல்லக் கிடைத்த அவலாகிக் கொண்டிருக்கிறது.

இப்படிப் பட்ட அவல நிலையைக் களைய வேண்டுமென்றால், இவற்றால் ஆதாயமடையும் மக்கள் பிரதிநிதிகளையும், காலங்காலமாக இப்படியே இருந்து பழகிப் பாழாய்ப் போன சுகவாசிகளையும், மூளைச் சலவை செய்யப் பட்ட பாமரனையும் நம்பிப் பிரயோசனம் இல்லை.

நேர்மையாகத் தேர்தல் நடத்தப் படுகிறது என்பதைக் காட்டிக் கொள்ளத் தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் முயன்றாலும், பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி நடத்தப் படும் கேலிக் கூத்தாகவே நடைபெற்று முடிகிறது ஒவ்வொரு தேர்தலும். தேர்தல்களுக்கு மூன்று மாதம் முன்னர் தொடங்கி, ஒரு மாதம் கழித்து முடிந்து போகிற ஒரு சம்பிரதாயப் பணியாகவே, தேர்தல் ஆணையத்தின் பணி அமைந்துவிட்டது நமது நாட்டின் சாபக் கேடு. வாக்குரிமையின் முக்கியத்துவத்தையும், விஷயங்கள் அறிந்து வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வாக்காளர்களுக்கு விதைக்க வேண்டிய பணியைத் தேர்தல் ஆணையம், தேர்தல் இல்லாத காலங்களிலும், திட்டங்கள் வகுத்து, இடைவிடாது ஆற்றத் தொடங்கினால் மட்டுமே நமது நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும். இல்லையென்றால் விடியாத இருளில் மூழ்கி இருப்பதைத் தவிர, நமக்கு வழியொன்றும் கிடையாது.

தேர்தல் ஆணையத்தின் இப்பணியை, அரசியல்வாதிகளின் குறுக்கீடின்றிச் செய்ய அனுமதிக்க நீதித் துறையும், குடியரசுத் தலைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், தனி அதிகாரம் கொண்ட இது போன்ற அமைப்புக்கள் அதிகார வர்க்கத்தின் கைப் பாவைகளாக மாற அனுமதித்ததன் விளைவைத் தான், நாம் இன்று எதிர்கொள்கிறோம்.

நிலைமை இனியேனும் மாறட்டும் என்று நம்ப மட்டுமே நம்மால் முடியும்... எட்ட வேடியவர்கள் காதில் இந்தக் கோரிக்கை என்றாவது ஒரு நாள் எட்டும் என்பதை மட்டும் நம்பி...

- நாட்டின் மேல் பற்றுக் கொண்ட, ஒரு சராசரிக் குடிமகன் (கலைபிரியன்)...

No comments: