வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, February 9, 2011

தேர்தல் - எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்...

2009 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நான் எழுதிய இந்த இடுகையையும், "49O" பற்றி நான் எழுதிய கவிதையையும், வர இருக்கின்ற தேர்தலுக்காக மறுபடி தூசி தட்டி, எடுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இன்னும் எவ்வளவு தேர்தல்களுக்கு இதே அவல நிலை தொடரப் போகிறது என்று தான் பார்ப்போமே:

"எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"ன்ற கதையாக, "நாங்களும் வாக்களித்தோம்"னு சொல்லிக் கொள்கிற பொது ஜனத்தைத் தான் இன்றைக்குக் காண முடிகிறது...

நாம் வாக்களித்த வேட்பாளர் எவராவது ஒருவர், என்றாவது ஒரு நாள், தான் சொன்னதை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்று புள்ளி விவரத்துடன் வாக்காளர் மத்தியில் எடுத்துரைத்ததுண்டா? அல்லது வாக்காளர்கள் தான் அவர்களைக் கேள்வி கேட்கும் அளவுக்கு சிரமங்கள் எடுத்ததுண்டா?

போகிற போக்கில், காற்றில் கப்பல் விடுவேன் என்றும் கேப்பையில் இருந்து நெய் எடுப்பேன் என்றும் சொன்னால் கூட நமது வாக்காளர்கள் வாக்களித்து வெற்றிக் கனியை அவர்கள் தத்தம் தலைமையின் காலில் சமர்ப்பிதுவிதுவிட்டு வாக்களித்த நம்மையே சுரண்டக் கிளம்பிவிடுவார்கள்... இது தான் ஜனநாயக மரபு என்றே நம்மை இக்காலத் தலைவர்களும் நம்ப வைத்தும் விட்டார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க கூட திருவாளர் பொது ஜனங்களுக்கு நேரமும் இருப்பதில்லை...

செய்தித் தாள்களைப் புரட்டி, உலக நடப்பு தெரிந்து, இவ்வளவு காலம் நடந்ததை திரும்பிப் பார்க்க நேர்ந்தால், இவைகளெல்லாம் பொது ஜனங்களுக்குப் புலப் படும்:

1. குற்றப் பின்னணி உடையவர்கள் எந்தனை பேரைத் வெற்றி பெற வைத்துள்ளோம்?
2. ஊழல் பெருச்சாளிகள் எத்தனை பேரிடம் ஏமார்ந்துள்ளோம்?
3. சபையில் நமக்காக ஒரு கேள்வி கேட்கக் கூட நேரமில்லாமல் உழைத்தே ஓடாய்த் தேய்ந்து போன (யாருக்காக?) எத்தனை பேரை மறுபடி வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்துள்ளோம்?
4. கொள்கையும் கட்சியும் மாறி மாறி நம்மிடம் மறுபடி மறுபடி வாக்குப் பெற வரும் எத்தனை பதவி வெறியர்களை நாம் தாங்கிப் பிடித்துள்ளோம்?
5. வெற்றி பெறுவதற்கு முன்னும் வெற்றி பெற்ற பின்னும் இவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களை ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்துகிறார்கள்?
6. கட்சித் தலைமைக்குக் காட்டுகின்ற விசுவாசத்தில் நூற்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காட்டுகிறார்களா இவர்கள்?
7. காமராஜர் வழி, கக்கன் வழி வந்ததாகக் கூறும் இவர்களில் எத்தனை பேர் சுயநலத்தை விடப் பொது நலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
8. பொது மருத்துவமனையில் இவர்களில் எவ்வளவு பேர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சிகிச்சை பெறுகிறார்கள்? அரசு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள்? அரசு பள்ளிகளில் எவ்வளவு பேரின் குழந்தைகள் பயிலுகிறார்கள்? இதற்கெல்லாம் பதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்க, இவர்களில் எத்தனை பேருக்கு மக்களுக்கு சேவை ஆற்றுகின்ற மனப் பக்குவம் வரும்?
9. இவர்களில் எத்தனை பேர் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டவர்கள்?
10. தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை இவர்களில் யாராவது பத்திரமாக எழுதித் தரத் தயாரா?

குறிப்பு - இந்தக் கேள்விகள் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ சாராரையோ மனதில் வைத்துத் தொகுக்கப் பட்டவை அல்ல. இதற்காக என்னைச் சாடும் பொழுதாவது பேதம் பார்க்காமல் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பார்களே எனில், அதை என் வாழ் நாள் சாதனையாகக் கருதுவேன்...

இவற்றை விட இன்னும் எவ்வளவோ கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்க, இதோ இந்தத் தேர்தலும் வந்து இவற்றுக்கு நல்ல பதில்கள் கிடைக்காமலேயே விடை பெறவும் போகிறது... எத்தனை பேர் இன்னும் "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"னு சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை!!!

சிந்திப்பீர் செயல் படுவீர்...


மை இட்டனர்
விரலில் -
ஒப்பமிட்டான்,
கருவி கண்டதும்
குழப்பம்...

கை நீட்டி
வாங்கிய
காந்தி -
பல்லிளித்தார்
பையிலிருந்து...

பொத்தானை
அழுத்திடத்தான்...
விரல் நீள
முனையும்
போது...

கரை
படிந்த
மனசாட்சி...
காரி
உமிழ்ந்தது...

இத்தனை
நாட்கள்
உன்னை ஏமாற்ற
யோசிக்காத
"இவர்"களை...

ஏமாற்ற
நீ - ஏன்
பட
வேண்டும் -
வெட்கம்...

கயவர்கள்
காந்தியை
நம்புவதே
துரோகம்
இழைக்கத்தான்...

அவர்கள்
கையில் இருந்து
அவன் பைக்கு
வந்த
காந்தி...

இனி ஒரு
முறை நாம்
ஏமாற்றப்
பயன்பட
மாட்டோம்...

என்றுதிர்த்த
புன்னகை
தான்...
அவனைக்
குழப்பியது...

அவர் வடிக்கும்
ஆனந்தக்
கண்ணீர்
வியர்வையாய் வடிகிறது -
கிழிந்த சட்டையில் ...

யோசித்தான் -
வட்டியும்
முதலுமாகத்
திருப்பிக் கொடுக்க
இதுவே சந்தர்ப்பம்...

உத்தமன் -
"49O" படிவத்தில்...
வாந்தி எடுக்கத்
தொடங்கினான் -
தன் மனசாட்சியை...

இன்னும் ஐந்து
வருடம்
கழித்துத்தான்
இனி மீண்டும் ஒரு
சந்தர்ப்பம்...

இனியாவது -
சிந்திப்பீர்
செயல்
படுவீர்...

- கலைபிரியன்

No comments: