வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, February 14, 2011

வேடிக்கைத் துறையாக்கப்படும் வெளியுறவுத்துறை...


சமீபத்தில், ஐநா சபையில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. எஸ். எம். கிருஷ்ணா அவர்கள், தன்னுடைய உரைக்குப் பதிலாக போர்ச்சுகீசிய அமைச்சரின் உரையை வாசிக்கத் துவங்கி விட்டார். உரை தொடங்கி மூன்று நிமிடங்கள் கழித்தே இதனை உணர்ந்த அவர் (அதிகாரிகள் அவரிடம் தெரிவித்த பின்பே, அவர் உணர்ந்ததாகவும் ஒரு ஊடக செய்தி பகர்கிறது), அதன் பிறகு, தனது உரையை எடுத்து வாசிக்கத் துவங்கியுள்ளார். இந்தியாவின் உலக முகமாகத் திகழ வேண்டியவர், மாட்சிமை தங்கிய ஐநா சபையில், இந்தியாவையும், தன்னுடைய துறையையும் கேலிக் கூத்தாக்கியுள்ளார் என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும், ஒரு சோகமான செய்தியாகவே கருதப் பட வேண்டியதாகும். மிகச் சிறிய கவனக் குறைவே இதன் காரணம் என்று சொன்னாலும் கூட, அதனைச் செய்தது அவர் வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்கும், அவரது அதிகாரத்தின் கீழ் வரும் துறைக்கும் அழகல்ல. நட்வர் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற ஜாம்பவான்கள் இருந்து சிறப்பித்த துறையை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு அளிக்கப் பட்டும், அதனைத் திறம் படச் செய்யக் கூடிய தகுதியும் திறமையும் அவரிடம் இருந்தும், அமைச்சராக அவரது கடந்த இரண்டரை ஆண்டுகளின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே சொல்லியாக வேண்டும். சில மாதங்களுக்கு முன், அவர், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது கூட "அவர் சரிவரத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வில்லை" என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒரு குற்றச்சாட்டை ஊடகங்கள் வாயிலாகப் பதிவு செய்தார். அவர் கூறியது சரியா தவறா என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒரு பகை நாட்டின் அமைச்சர், இந்தியாவுக்குத் தலைகுனிவான ஒரு கருத்தைப் பதிவு செய்யக் காரணமாக இருந்து விட்டார் அமைச்சர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவர் சமீபத்தில் அமெரிக்க விமான நிலையங்களில் சோதைனக்குட்படுத்தப் பட்டு அவமானப் படுத்தப்பட்ட விவகாரத்தையும் கடுமையாக அணுகத் தவறி விட்டார் அமைச்சர். இலங்கை இனப் படுகொலையையும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப் படும் அவல நிலையையும் கட்டுக்குள் கொண்டுவர இதுவரை ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டுவிடவில்லை அமைச்சர். சர்வதேசச் சமூகத்தின் மத்தியில், இந்தியாவின் முகத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற, தன் கையாலேயே, நமது மைய அரசு கரியைப் பூசிக் கொள்கிறது என்று தான் வருத்ததோடு பதிவு செய்ய வேண்டும். இனியேனும், கவனிப்பார்களா கவனிக்க வேண்டியோர்?

- கலைபிரியன்

No comments: